உண்மை அறிந்திருந்தால் பில்லாவையும், ரங்காவையும் உயர்த்திப் பிடித்து ஆராதித்திருப்பார்களா ரஜினி மற்றும் அஜித்தின் இரசிகர்கள்?

Wednesday 10, April 2019, 21:18:33

சிறப்புக் கட்டுரை

திருமதி கல்கி

காலத்தைக் கடந்து இறவாப் புகழ் கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க எத்தனையோ திரைக்காவியங்களையும், கலைஞர்களையும் வழங்கிய பெருமை தமிழ்த் திரையுலகையே சாரும்.

அதே நேரத்தில் மறந்து ஒதுக்கப்பட்டிருக்க வேண்டிய, மன்னிக்கவே முடியாத வரலாற்றுப் பிழைகளுக்கும் கதாநாயக அந்தஸ்து தந்து அவற்றை வெள்ளிவிழாத் திரைப்படங்களாக வெளியிட்ட மாபெரும் தவறைச் செய்திருப்பதும் இதே தமிழ்த் திரையுலகம்தான்!

மக்கள் மனதில் தனியிடம் பிடித்துள்ள பெருமைக்குரிய மாபெரும் நடிகர்களான ரஜினியும், அஜித்தும் மேற்குறிப்பிட்ட வரலாற்றுப் பிழை மாந்தர்களின் பெயர்களைக் கொண்ட திரைப்படங்களில் நடித்து அவற்றை வெள்ளிவிழாப் படங்களாக்கி இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை!

தமிழ் திரையுலகின் மிகப்பெரிய ரசிகர் பட்டாளங்களைக் கொண்ட இவர்கள் நடித்து  பிரமாண்டமுமாக, மிகப்பெரிய வசூல் சாதனையையுமாக பேசப்பட்டு, அவர்களின் ரசிகர்களால் கொண்டாடித் தீர்க்கப்பட்ட திரைப்படங்களில் பில்லா, ரங்கா ஆகியவை மிக முக்கியமானவை

1980ல் கே.பாலாஜியின் தயாரிப்பில் ரஜினி நடித்து ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் இயக்கத்தில் வெளிவந்த பில்லா திரைப்படம், மிகப் பெரிய வெற்றியை ஈட்டித் தந்தது. இதன் பிறகு பில்லா ரஜினிக்கெனவே தனியாக நூற்றுக்கணக்கில் இரசிகர் மன்றங்கள் உதயமாகின. எக்கச்சக்கமான ரஜினி இரசிகர்கள் தங்கள் பெயருக்கு முன்னால் பில்லா என்ற பெயரை அடைமொழியாகச் சேர்த்து கெத்து காட்டினர். அவ்வளவு ஏன் இந்தப் படத்தை இயக்கியவரின் பெயரே பின்னாளில் பில்லா ஆர். கிருஷ்ணமூர்த்தி என்று மாறிப் போனது.  

இதனையடுத்து 1982ல் சாண்டோ எம்எம்ஏ சின்னப்பா தேவரின் தேவர் பிலிம்ஸ் தயாரித்து ஆர். தியாகராஜன் இயக்கத்தில் ரஜினி நடித்து ரங்கா படம் வெளியாகி அதுவும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட்டானது. பில்லா வெற்றியை ரஜினியின்  ரசிகர்கள் எப்படி எல்லாம் கொண்டாடினார்களோ, அதே போல ரங்காவின் வெற்றியினையும் அவர்கள் அதைப் போன்றே கொண்டாடினர்.

ரஜினி நடித்து ஓஹோவென வெற்றி பெற்ற பில்லா திரைப்படம் மீண்டும் நடிகர் அஜித்தைக் கொண்டு தயாரிக்கப்பட்டு 2007ல் வெளியானது. பலகோடி ரூபாய்களை அள்ளிக் குவித்து வசூலில் புதிய சாதனை புரிந்த இந்தப் படத்தைத் தயாரித்தவர் முந்தைய படத்தைத் தயாரித்த கே.பாலாஜியின் மகனான சுரேஷ் பாலாஜி. இயக்கியவர் விஷ்ணுவர்த்தன்.

இதனையடுத்து அஜித்தின் நடிப்பில் பில்லா படத்தின் இரண்டாம் பாகம் பில்லா 2 என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு 2012ல் வெளியானது. இந்த பில்லா படமும் சூப்பர் ஹிட்டானது. வசூலிலும் தூள் பரத்தியது. இயக்குனர் சக்ரி இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.

இந்தப் படங்கள் அனைத்துமே தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியினைக் குவித்தன. நூற்றுக்கணக்கான அஜித்தின் இரசிகர்கள் இந்தப் படங்கள் வெளியான பிறகு பில்லா என்ற பெயரைப் பச்சை குத்திக்கொண்டனர்; அந்தப் படத்தின் லோகோவைப் போன்று முடியை வெட்டிக் கொண்டு பெருமையாக உலா வந்தனர்.    

அதன் பின்பு கேடி பில்லா கில்லாடி ரங்கா என்றொரு படம் 2013 ஆம் ஆண்டில் சிவா கார்த்திகேயன், விமல் ஆகியோர் நடிப்பில் வெளிவந்தது. இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்தது. இதுவும் வெற்றிப்படமே.

2018 ஆம் ஆண்டில் ராஜ் சேதுபதி என்ற இயக்குனர் சுரேஷ் என்ற நடிகரின் நடிப்பில் பில்லா பாண்டி என்றொரு படத்தை இயக்கினார். இந்தப் படம் சுமாராக ஓடியது.   

இப்படியெல்லாம் தமிழ்த் திரையுலகம் பெருமையாகத் சுமக்கும் பில்லா ரங்கா ஆகியோர் யாரென்று அப் பெயர்களைத் தங்கள் உடலில் பச்சைக் குத்திக் கொண்ட இரசிகர்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்குத்  தெரிந்தது என்னவோ ரஜினியும், அஜித்தும் நடித்து வெளியான படங்கள்தாம்.

சரி.... யார் இந்த பில்லாவும், ரங்காவும்?

கடத்தல்காரர்களாய், போதைப் பொருளால் கெட்டு சீரழிந்த இவர்கள் பல பெண்களைக் கடத்திக் கொடூரமாய்க் கற்பழித்து, ஈவிரக்கமின்றிக் கொலை செய்த கொடியவர்கள். கொடூரர்களாய், கொலைகாரர்களாய் வழக்குகள் பதியப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்ட அக் குற்றவாளிகள் இறுதியாகத் தூக்கிலிடப்பட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் குற்றப் பின்னணியை நீங்கள் தெரிந்து கொண்டால், இப்படிப்பட்ட கிரிமினல்களையா தமிழ்த் திரையுலகம் திரைப்படங்கள் எடுத்துக் கொண்டாடியது என்று நிச்சயம் காறி உமிழ்வீர்கள்.

உண்மையில் தமிழ்த் திரையுலகால் உயர்த்திப் பிடிக்கப்பட்ட பில்லாவும் ரங்காவும் ஒதுக்கித் தள்ளப்பட்டிருக்க வேண்டிய கோர முகம் கொண்ட முடை நாற்றம் வீசும் சாக்கடைப் புழுக்கள்.

இந்தியக் கடற்படையின் கேப்டனாகப்  பணியாற்றிக் கொண்டிருந்த மோகன் சோப்ராவின் மகள் 16 வயது மகள் கீதா சோப்ரா மற்றும் 14  வயது மகன் சஞ்சய் ஆகிய இருவரும்  1978 ஆகஸ்ட் 26ந் தேதி  குல்ஜீத் சிங் என்ற ரங்கா கஸ், அவனது கூட்டாளி ஜஸ்பிர் சிங் என்ற பில்லா ஆகிய இரு கடத்தல்காரர்களால் பணத்திற்காக டெல்லியில் வைத்துக்  கடத்தப்பட்டனர்.   

கடத்தப்பட்ட கீதா சோப்ரா டெல்லியிலுள்ள தி ஜீஸஸ் அண்ட் மேரி கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி. அவரது சகோதரர் சஞ்சய் மாடர்ன் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவர். பணத்திற்காக இவரகளைக் கடத்தியவர்களான ரங்கா மற்றும் பில்லா ஆகியோர் மும்பையில் பல்வேறு கொடூர குற்ற வழக்குகளிலும், கடத்தல் வழக்குகளிலும் கைதாகி   சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட  இரண்டு பயங்கரமான குற்றவாளிகள்.

சிறையில் இருந்து வெளிவந்த அவர்களுக்குத் தங்களது சுக போக வாழ்வுக்காக பணம் தேவைப்படவே, பணம் பறிப்பதற்காக கப்பல்படை அதிகாரி மதன் மோகன் சோப்ராவின் குழந்தைகள் இருவரையும் கடத்தத் திட்டமிட்டனர்..

1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26ந் தேதி சனிக்கிழமை மாலை 6.45 மணிக்கு கீதா சோப்ராவும், சஞ்சய் சோப்ராவும் அகில இந்திய வானொலியில் யுவ வாணி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காகத் தங்கள்  வீட்டை விட்டுப் புறப்பட்டனர். நிகழ்ச்சி நிறைவு பெற்ற பின் இரவு 9 மணிக்கு அவர்களது தந்தை மதன் மோகன் சோப்ரா அழைத்துச் செல்ல வருவதாய் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் அப்படியானதாய் அவர்களுக்கு விடிந்திருக்கவில்லை. எல்லாமே தலைகீழாய் மாறிப் போனது.

மிகச்சரியாய் 6.45 மணிக்கு வீட்டை விட்டு வெளியே வந்த கீதா மற்றும் சஞ்சய் ஆகியோர் கடுகு நிறம் கொண்ட பியட் கார் ஒன்றில் வலுக்கட்டாயமாக இழுத்து ஏற்றப்பட்டுக் கடத்தப்பட்டார்கள். காரில் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி கீதாவும் குரலும், கதறலும் சாலையில் செல்வோருக்குக் கேட்டிருக்கிறது. துணிச்சலாகச் சிலர் அவர்களைக் காப்பாற்றவும், மீட்பதற்காகவும் காரை விரட்டிச் சென்ற போதிலும் அதிவேகத்தில் சென்று கொண்டிருந்த காரை அவர்களால் நெருங்க முடியாமற் போனது..

நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்கள் வராததையடுத்து இரவு எட்டு மணிக்கு வானொலியில் ஒலிபரப்புவதாய் இருந்த யுவ வாணி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதாய் வானொலியில் அறிவிப்பு வெளியானது. இதைக் கேட்டு திடுக்கிட்ட மதன் மோகன் சோப்ராஉடனடியாக வானொலி நிலையத்தை அடைந்த தனது குழந்தைகள் அன்று அங்கு வரவில்லையென்பதை உறுதி செய்து கொண்டார். தனது உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் தகவல் கொடுத்தார். அவர்கள் அங்கு ஏதேனும் சென்றிருக்க கூடுமென்று எல்லோரிடமும் விசாரித்துக் கொண்டிருந்தார். இறுதிவரை மதன் மோகன் சோப்ராவின் நம்பிக்கை பொய்த்துப் போனது.

அதேசமயம், காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்ச்சியான அழைப்புகள் மூலம் முக்கியமான ஒரு தகவல் வந்து சேர்ந்தது. சாலையில் ஒரு கார் யாரோ சிலரை கடத்திச் செல்வதாகவும் அதில் ஒரு பெண்ணும், சில ஆண்களும் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. பல கட்ட விசாரணைகளுக்குப் பிறகு அந்தக் காரில் காணாமற் போனதாகத் தேடப்பட்டு  வந்த கீதாவும், சஞ்சயுமே கடத்திச் செல்லப்பட்டனர் செல்லப்பட்டனர் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.

எப்படியும் பிள்ளைகளை மீட்டு விட முடியுமென்று திடமான  நம்பிக்கையைப் போலீசார் தந்த போதிலும் மதன் மோகன் சோப்ராவும் அவரது மனைவியும் என்ன செய்வதென்றே அறியாமல் உடைந்து போய் நின்றார்கள்.

சில தினங்களுக்குப் பிறகு 1978ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ந் தேதி மாலை 6 மணிக்கு டெல்லி ரிட்ஜ் பகுதியில் ஆண். பெண் என இரண்டு உயிரற்ற உடல்கள் கிடப்பதாய் ரோந்து போலீசார் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கிறார்கள். அவற்றைப் பார்த்து  நொறுங்கிப் போன மதன் மோகன் சோப்ரா கதறியபடி அந்த உடல்களைத் தங்களது பிள்ளைகள்தாமென்று அடையாளம் காட்டினார்.

போலீசாரின் தீவிர விசாரணையின் பலனாக அதற்கடுத்த சில வாரங்களுக்குப் பின் கீதா, சஞ்சய் ஆகியோரைக் கடத்திக் கொன்றவர்களைப் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட  விசாரணையில் மிகவும் கொடூரமான முறையில் கீதாவை சோப்ரா ரங்கா மற்றும், பில்லா ஆகியோர் பலமுறை கற்பழித்ததும், பலமாக எதிர்த்துப் போராடிய கீதாவின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் கொலை செய்து விட்டதாகவும், அக்காவைக் காப்பாற்ற போராடிய தம்பி சஞ்சய்யையும் அதனையடுத்துக் கொலை செய்து விட்டதாகவும் அவர்கள் வாக்குமூலம் தந்தனர்.

முதலில் கீதாவைப் பாலியல் வன்புணர்வு செய்ததாக ஒப்புக் கொண்ட குற்றவாளிகள் பின்னர் அதனை மறுத்து விட்டார்கள். கீதா கொலை செய்யப்படுவதற்கு முன்னதாகவே கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டிருந்தாலும், தண்டனைப் பெற்றுத் தரக்கூடிய அளவுக்கு அதனைத் தடயவியல் சான்றுகளால் உறுதிப்படுத்த முடியவில்லை. அரசு தரப்பிலும் மதன் மோகன் சோப்ரா தரப்பிலும் கீதா சோப்ரா கற்பழிப்பிற்குள்ளான விடயம் நிரூபிக்கப்படவில்லை.

இறுதியாய் கீதா சோப்ரா உடலில் இருந்த பில்லாவின் தலை முடியும், காரில் படிந்திருந்த AB இரத்த வகையும், காரில் இருந்த ரேகை மாதிரியென ஒட்டு மொத்தமாய் பிற தடயங்களின் அடிப்படையில் அவர்களிடம் பெறப்பட்ட ஒப்புதல் வாக்குமூலத்தைக் கொண்டு வழக்கு நடத்தப்பட்டதன் வாயிலாக கொலை மற்றும் கொடூர கற்பழிப்பு குற்றங்கள் உறுதி செய்யப்பட்டன. குற்றவாளிகள் பில்லா, ரங்கா ஆகியோருக்குத் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டது.

1982 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியன்று டெல்லி தீஹார் சிறைச்சாலையில் கொடூரக் குற்றவாளிகளான பில்லா, ரங்கா ஆகிய இருவரும் தூக்கிலிடப்பட்டார்கள். வரலாற்றின் வரைபடத்தில் முளைவிடப் பார்த்த கொடுங்குற்றவாளிகள் இருவரைச் சட்ட வல்லுந‌ர்கள் தமது திறமையால் அழித்து அகற்றினார்கள்.

கடத்தல்காரர்களிடம் துணிச்சலாகப் போராடி உயிரைவிட்ட சஞ்சய் சோப்ரா மற்றும், கீதா சோப்ரா ஆகியோரது பெயரால் விருதுகள் தோற்றுவிக்கப்பட்டு ஆண்டுதோறும் பதினாறு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு துணிச்சலான வீரதீரச் செயல் புரிந்தவர்களுக்காய் அந்த விருதுகள் வழங்கப்படுகிறது.

உண்மைக் கதை இப்படியிருக்க அவர்களின் பெயரில் பல திரைப்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. ஹீரோக்களாக அவர்களைச் சித்தரித்து ரசிகர்களை ஏமாற்றி, அவர்களுக்குத் தெரியாமலேயே கொடூர கொலைகாரர்களின் பெயர்களை கொண்டாட வைத்த பணத்தை மட்டுமே சம்பாதிக்க வேண்டும் என்று நினைத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களின் வெற்றி இது; சமுதாயத்தின் வெற்றி அல்ல.

தங்களது பெயர்களுக்கு முன்னும் பின்னும் பில்லா, ரங்கா என்று அடைமொழி வைத்துக் கொண்டு அழைத்து அழகு பார்க்கும் அளவிற்கு அந்தப் பெயருக்கு உரியவர்கள் தகுதியானவர்களா என்று யாரேனும் நினைத்துப் பார்த்ததுண்டா?

சட்டத்தால் கொடூரர்களென அடையாளப்படுத்தப்பட்ட பெயர்களை திரைப்படம் வாயிலாக மக்கள் மத்தியில் கொண்டு சென்று  புகழ் பெற்ற நடிகர்களை நடிக்க வைத்து அதன் மூலம் பில்லா, ராங்காக்களை கொண்டாட வைக்குமளவிற்கு அவர்கள் தேசத்திற்காக உயிர் தியாகம் செய்தவர்களா? என்ற கேள்வி யார் மனதிலும் எழவில்லையா?

சமூகத்தின் மீது பொறுப்போ, அக்கறையோ இல்லாவிட்டாலும் பரவாயில்லை. இது போன்ற தவறான வழிகாட்டுதலை மேற்கொள்ளாதிருத்தலே போதுமானது. பணத்துக்காகவும், புகழுக்காகவும் கொடூரங்களின் பின்னணியை மறைத்துப் பணம் ஈட்ட வேண்டுமென்ற ஒரே குறிக்கோளைக் கொண்ட காரணத்தால்தான் இதுவரை தமிழ் சினிமாவில் ரங்கா, பில்லாவின் பெயர்களை கொண்ட திரைப்படங்கள் மட்டும் அதிகளவில் வெளியாகி உள்ளன.

இளைய தலைமுறையினரிடையே ஏற்ப்படுத்தும் தவறான வழிகாட்டுதலும், அருவருப்பான உதாரணங்களையுமே  இன்றைய சமுதாயத்தை கேள்விக்குறியாய் மாற்றியுள்ளது. இன்னும் இதுபோன்ற தலைப்பு கொண்ட திரைப்படங்களை ஊக்குவிப்போமேயானால் வெகுவிரைவில் ரவுடிகளுக்கும், தாதாக்களுக்கும் சிலை வைத்து பூஜிக்கும் நிலைக்கு உருவாகிவிடும்.

சட்டத்தின் குறிப்பேடுகளில் பதைபதைக்கும் கொடூரர்களாய், கொலைகாரர்களாகவும் சுட்டிக் காட்டப்பட்டவர்கள் என்பது தெரியாமல் அந்தப் பாத்திரத்தில் நடித்த நடிகர் மீதான பற்றின் காரணமாக அவர்கள் நடிக்கும் திரைப்படங்களின் பெயர்களைப் பச்சை குத்திக் கொண்டும், சிகை அலங்காரத்தில் பெயர் எழுதிக் கொள்வதுமாய், இன்னும் ஒருசிலர் தங்களது பெயர்களுக்குப் முன்னும், பின்பும் அடைமொழியாக ரங்காவையும்,  பில்லாவையும் சேர்த்து வைத்துக் கொள்கிறார்கள். மேலும் ரங்காவிற்கும்,பில்லாவிற்கும் போட்டிபோட்டுக் கொண்டு ரசிகர் மன்றங்களை நிறுவி பாலபிஷேகம் நடந்த கொடுமையும் மறக்க முடியாதது.

சமூக அக்கறை, பொது வாழ்க்கையென எல்லாவற்றிலும் ஒழுக்க நெறிகளை கடைபிடிக்கும் ரஜினிகாந்த்தும்,அஜித்குமாரும் இதுபோன்ற சமுதாயத்தில் நஞ்சை விதைக்கும் கொடூர பின்னணியுள்ள பாத்திரங்களில்   நடிக்காதிருத்தலும், அப் பாத்திரங்களின் பெயர்களைத் தங்கள் படத் தலைப்புகளாக வைக்காதிருத்தலும் இளைய சமுதாயத்தை சிறப்பாக வழிநடத்த ஏதுவாக இருக்கும். இன்றைக்குச் சமூகத்திற்கு அது நீங்கள் செய்யும் பெரும் நன்மை.

செய்துதான் பாருங்களேன், மாற்றம் கட்டாயம் நிகழும்.

 

 

 

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz