பாதுகாப்பான இரவு நேரப் பயணங்களுக்குப் பயனுள்ள சில ஆலோசனைகள்

Saturday 13, April 2019, 17:53:32

சிறப்புக் கட்டுரை

திருமதி கல்கி

நம்மில் பலரும் பகல் நேரங்களை விடவும் மாலை அல்லது இரவு நேர பயணங்களையே அதிகம் விரும்புவோம். இதற்கு எல்லோராலும் சொல்லப்படுகின்ற காரணம் பகல் நேரங்களை விடவும் மாலை வேளைகளில் வெயிலின் தாக்கம் இருக்காது; வெப்பத்தின் அடர்த்தி குறைந்து குளிர்காற்று வீசத் தொடங்கும் என்பதுதான்.

ஆனால், பகல் நேரங்களை விடவும் இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது நம்மால் வேகத்தையும், தூரத்தையும் அவ்வளவு எளிதாகக் கணித்து விட முடியாது. மேலும், சிலசமயங்களில் எதிரே வரும் வாகனங்களின் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் விழித்திரை வழியே ஊடுருவி சில வினாடிகள் கண்களை இருளாக்கித் தடுமாறவும் வைத்துவிடும்.

இதனால், இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன. பகல் நேரங்களை விடவும் இரவு நேரத்தில் தான் அதிகப்படியான விபத்துக்களும்,உயிரிழப்புகளும் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

பகல் நேரத்தைப் போல இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்குப் போதிய வெளிச்சமும், பார்வைத் திறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தைத் தருகின்றன. இதனால், இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையைச் சரிவரக் கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே, இரவு நேர பயணங்களுக்கான ஓட்டுநர்கள் திறமையானவர்களாகவும், மிகவும் விழிப்புணர்வுடன் செயல்படக் கூடியவர்களாகவும் இருப்பதுடன், சமயோசிதத்துடன் செயல்படக் கூடியவர்களாக இருத்தல் அவசியம்.

இரவு நேரப் பயணமாக தொலைதூரம் செல்வதாக இருந்தால் அதனை பெரும்பாலும், தவிர்த்து விடுங்கள். தவிர்க்கவே முடியாத காரணங்களுக்காகச் செல்லும்போது, ஓட்டுநர் இருந்தாலும் கார் ஓட்டத் தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியமே. அவசர சமயங்களிலோ,அல்லது ஓட்டுநனருக்கு அசதி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை இயக்கலாம்.

கார்களில் அடிக்கடி இரவுப் பயணங்கள் செல்பவர்களாக  இருந்தால், வெள்ளை நிறக் கார்களையேத் தேர்வு செய்யுங்கள். இரவு நேரங்களில் கருப்பு நிறமோ, கார்பன், ப்ரவுன் கலர் வாகனங்களோ தேர்வு செய்வீர்களானால் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ, அல்லது கடந்து சென்றாலோ, இருளான பகுதிகளில் செல்லும் போதும் கூட பின்னால் வரும் வாகன ஓட்டிகள், மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு உங்கள் வாகனம் கண்களுக்கு எளிதில் புலப்படாது. நொடியில் விபத்து நிகழ வாய்ப்புள்ளது.

வெள்ளை நிறம் கொண்ட கார்கள் இரவிலும் கூட மிகத் துல்லியமான பிரதிபலிப்பைக் கொடுக்கும். எந்த நிறக் கார்கள் என்றாலுமே கூட நெடுஞ்சாலை ஓரங்களில் காரை நிறுத்தி இருக்கும்போது அணைந்து அணைந்து எரியும் பார்க்கிங் லைட்டுகளை (Hazard Lights) எரிய விடுவது மிகவும் அத்தியாவசியமானது.  உங்கள் வாகனம் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பதை பிற வாகன ஓட்டிகளுக்கு உணர்த்த அந்த சமிக்ஞை உதவும்.   

இரவு நேரங்களில் வாகனங்களை இயக்கிக் கொண்டிருக்கும் ஓட்டுனருக்கு அருகில் அமர்ந்து வீடியோ, விளையாட்டு என ஒளி ஊடுருவக் கூடிய தொடுதிரை(Touch screen)  டிவைஸ்களை உபயோகிக்க வேண்டாம். அவர்களின் கவனம் சிதறும். ஒளி மூலம் ஏற்படக்கூடிய தொந்தரவு காரணமாக சட்டென அவர்களது கருவிழி சில நொடிகளுக்கு இருளாகும் ஆபத்தும் உள்ளது. இதன் காரணமாக எதிரே வரும் வாகனங்கள் கண்களுக்கு புலப்படாது.

இரவு நேர பயணத்தின்போது முகப்புக் கண்ணாடிகள், முகப்பு விளக்குகள், பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகள் (Indicator lights) போன்றவற்றைத் துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

இரவு நேரங்களில் பக்கவாட்டுக் கண்ணாடிகளை (Exterior side mirror)  போதுமான வரை உள்புறமாகத் திருப்பி வைத்தபடியோ அல்லது, பின்வரும் வாகனங்களின் ஹைபீம் ஒளி ஊடுருவாதபடி வெளிச்சத்தை கட்டுப்படுத்தக்கூடிய ஸ்டிக்கர்களையோ ஒட்டி வைத்திருப்பது நல்லது. இதனால், பின்புறம் அதிக வெளிச்சத்தை பிரதிபலிக்கும் படி ஹைபீம் ஒளிர விட்டபடியே பயணிக்கும் வாகனங்கள் மூலம் கண்கள் எரிச்சல் அடைவதையும், கவனம் சிதறுவதையும் தடுக்கலாம்.

மூடுபனி விளக்குகள் (Fog lamp) என்று சொல்லக்கூடிய வாகனத்தின் முன்புறமுள்ள சிறிய விளக்குகள் பெரும்பாலும் தரைமட்ட அளவீடுகளைத் துல்லியமாகக் காட்டும். இதனால், சாலையில் உள்ள குழி,மேடு பாறைகளென எல்லாவற்றையும் சரியாகக் காண நேரிடும். இவை பெரும்பாலும் பனி மூட்டமான நேரங்களில் சாலைகளில் பயணிக்க ஏதுவாக இருக்கும். இந்த வகை விளக்குகள் உள்ள வாகனங்களை தேர்வு செய்வது நல்லது.

முகப்பு விளக்குகள் (Head lights) எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்கவேண்டும். அதன் மையத்தில், கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டிக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களுக்கு மட்டுமல்ல எதிர் வாகன ஓட்டிகளுக்கும் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும்.

உடல்நிலை சரியில்லாத பொழுதோ, வலி நிவாரணி (Pain killer)  மாத்திரைகளையோ அல்லது ஜலதோஷத்துக்கான மாத்திரைகளை  விழுங்கிய பிறகு வாகனம் இயக்குவதை அறவே தவிர்த்திடுங்கள். பெரும்பாலான வலி நிவாரணிகள் குளோரோபார்ம் என்றுச் சொல்லக் கூடிய மருந்துவகை பயன்படுத்தப் பட்டிருக்கும்,  இவை முற்றிலும் தூக்க நிலைக்கு கொண்டு செல்லக் கூடியது. இதனால் கவனச் சிதறலோ,கண் அயர்ந்து விட்டாலோ விபத்து ஏற்ப்பட்டு விடும்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில நிமிட சந்தோஷம், ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிருக்கே உலை வைத்துவிடும். சில சமயங்களில் உங்களால் மற்றவர்களுக்கும் ஆபத்து நிகழ வாய்ப்புள்ளது.

முன்னால் செல்லும் வாகனத்துக்கும், உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை இயக்க வேண்டும். உங்களுக்கு  முன்பாக வாகனத்தை பின்தொடரும்போதும், எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள். இது எதிரில் வரும் வாகன ஓட்டுநருக்கு உங்கள் வாகனத்தின் வேகத்தையும், தூரத்தையும் தெளிவாகக் காட்டும்.

இரவு நேரங்களில் வாகனங்களை இயக்குவதாக இருந்தால் அதிக மசாலாக்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளையோ, எண்ணெய்யில் பொறித்த உணவுகள், முற்றிலும் நெய்யினால் செய்யப்பட்ட உணவுகளையும் தவிர்ப்பது நலம். இவற்றால் செரிமானக் கோளாறுகள் போன்றவை ஏற்படும். மேலும், நெய் கலந்த உணவுகள் எளிதில் நம்மை உறக்க நிலைக்கு கொண்டு சென்று விடும்.

தொலைதூரம் பயணிப்பதாக இருந்தால் தொடர்ச்சியாகக் கார் ஓட்டுவதைத் தவிர்த்து விடுங்கள். குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ,காபி அல்லது சூடான பானங்களை அருந்துவதன் மூலம் தூக்கமோ அசதியோ வருவதற்கான சாத்தியங்கள் குறைவு.

எதிரில் வரும் வாகனங்கள் அதிக வெளிச்சத்துடனோ, அதிவேகமாகவோ வருவதாகவோ உணர்ந்தால், உங்கள் வாகனத்தின் வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள். நள்ளிரவில் தூக்கம் வருவதாக உணர்ந்தால், வேலட் பார்க்கிங், அல்லது டோல் கேட் அருகிலோ, அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்தி சிறிது நேர உறக்கத்திற்குப் பின், முகம் கழுவிக் கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடர்வது நல்லது.

எதிரில் வரும் வாகனம் தூரத்தில் வருவது போல் தோன்றினாலும், உங்களுக்கு முன்பான வாகனத்தை முந்திச் செல்லாதிருங்கள். இரவு நேரங்களில் உங்கள் அளவீடும், தொலைவும் தவறாக மாறிப் போவதற்கான சாத்தியங்கள் அதிகம். மேலும், எதிர்த்திசை வாகனத்தின் வேகத்தைக் கணிப்பதும் கடினம். பெரும்பாலான விபத்துகள் பிற வாகனங்களை முந்திச் செல்லும் சமயத்தைச் சரியாகக் கணிக்கத் தவறுவதன் காரணமாகவே நடக்கின்றன.

காரில் பயணிக்கும் போது கட்டாயமாக அனைவரும் சீட் பெல்ட் அணிந்து கொள்ளுங்கள். ஒருவேளை விபத்து நடந்தாலும் நவீனவகைக் கார்களில் காற்றுப்பை (Air bag) என்று சொல்லக்கூடிய உயிர்காப்பு வசதி இருக்கிறது. இவற்றால் தலை, மார்பு,கழுத்து என முற்றிலும் பாதுகாக்க முடிகிறது. விபத்தால் உங்களுக்கான பாதிப்புகள் குறைவாகவே இருக்கும்.

இரவு நேரப் பயணம் செல்லும்போது மேற்கண்ட  எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால்,உங்களது இரவு நேரப் பயணம்,மகிழ்ச்சியானதாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும் என்பதில் துளியளவும் ஐயமில்லை.

 

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz