சேலம் மாவட்டத்தில் 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்துக் கல்வெட்டு கண்டுபிடிப்பு

Monday 29, April 2019, 18:21:31

சிறப்புக் கட்டுரை

ஆறகழூர் பொன்.வெங்கடேசன்
தலைவர், சேலம் வரலாற்று ஆய்வு மையம்

சேலம் மாவட்டம் மேட்டூர் வட்டம் பொட்டனேரி என்ற கிராமத்தில்  கண்டறிந்த 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம், மேச்சேரியினைச்  சேர்ந்த வரலாற்று ஆர்வலர் அன்புமணி மேட்டூர் வட்டம் மேச்சேரி அருகே உள்ள பொட்டனேரி என்ற கிராமத்தில் உள்ள வரதராஜபெருமாள் கோயிலில் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்று இருப்பது குறித்தும், பாதுகாப்பில்லாத நிலைமையில் அது சிதிலமாகிக் கொண்டிருப்பதாகவும் சேலம் வரலாற்று ஆய்வு மையத்துக்குத் தகவல் தந்திருந்தார்.

இந்தத் அடிப்படையில் தமிழகத தொல்லியல் துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் சு.இராஜகோபால், கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சாந்தலிங்கம், சேலம் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த விழுப்புரம் வீரராகவன், ஆறகழூர் பொன்.வெங்கடேசன், மருத்துவர் பொன்னம்பலம் ஆகியோர் பொட்டனேரி வரதராஜபெருமாள் கோயிலுக்கு நேரில் சென்று ஆய்வுகள் மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் அந்தக் கோவிலில் வட்டெழுத்துக் கல்வெட்டு ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. உயரம் 70 செ.மீ. அகலம் 65 செ.மீ. தடிமன் 10 செ.மீ கொண்டுள்ள இந்தக் கல்வெட்டின் மேல்பகுதி உடைந்துள்ளது. கல்வெட்டின் உடைந்த மேல்பகுதியை அங்கு பெருமுயற்சிகள் எடுத்துத் தேடப்பட்ட போதிலும்  கிடைக்கவில்லை.

8 வரிகளில் வட்டெழுத்துடன் இந்தக் கல்வெட்டு காணப்படுகிறது. மேல்பகுதி உடைந்து விட்டதால் இதன் முதல் இரு வரிகளும் படிக்க முடியாதபடி சிதைந்துள்ளது. ஆய்வுக் குழுவினர் இதன் காலம் 8 ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் எனக் கருதுகின்றனர்.. எழுத்தமைதியானது 1200 ஆண்டுகளுக்கு முற்பட்ட வட்டெழுத்தை ஒத்துக் காணப்படுகிறது.

கல்வெட்டுகள் ஆரம்ப காலத்தில் தமிழ் பிராமியிலும் பின் வட்டெழுத்திலும், 9 ஆம் நூற்றாண்டுக்கு பின் இப்போது நாம் பயன்படுத்தும் வடிவிலும் பொறிக்கப்பட்டன. வாணன் வாரமன் என்பவர் ரிஞ்சிக்குடி, பெரிய கல்லியக்குடி, சிறிய கல்லியக்குடி என்ற மூன்று ஊர்களில் நிலம் கொடுத்த செய்தி கல்வெட்டில் வெட்டப்பட்டுள்ளது. கல்வெட்டின் மேற்பகுதி காணப்படாததால் நிலம் யாருக்கு, எதற்காக கொடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து கொள்ள முடியவில்லை.

கல்வெட்டின் இறுதியில் சக்கரம் போன்ற வட்ட வடிவ கோட்டு உருவம் ஒன்று வரையப்பட்டுள்ளது. ஒரு வேளை இது சுருள்வாளாக இருக்கலாம்.

வாணன் வம்சத்தை சேர்ந்தவர்கள் சங்ககாலம் முதலாகவே குறுநில மன்னர்களாக அறியப்படுகிறார்கள். வாணர்களின் நடுகல் கல்வெட்டுகள், தர்மபுரி,கிருஷ்ணகிரி,செங்கம் போன்ற பகுதிகளில் நிறைய கிடைத்து உள்ளது.

12 ஆம் நூற்றாண்டில் இவர்கள் சேலம் மாவட்டத்தில் உள்ள ஆறகழூரைத் தலைநகராகக் கொண்டு வாணகோவரையர்கள் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர். தற்போது கண்டறியப்பட்ட இக்கல்வெட்டின் மூலம் வாணர் பரம்பரையை நேர்ந்த வாணன் வாரமன் என்பவர் 8 ஆம் நூற்றாண்டில் மேச்சேரி மற்றும் அதன் சுற்றுப்புறங்களை ஆட்சி செய்த ஒரு குறுநில மன்னன் என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.

பொட்டனேரி வரதராஜபெருமாள் கோயிலுக்கு அருகே உள்ள விளைநிலத்தில் ஒரு சமணதீர்தங்கரரின் சிலை காணப்படுகிறது. ஏற்கனவே தமிழகத் தொல்லியல்துறை இதைப் பதிவு செய்திருந்தாலும் தற்போது பாதுகாப்போ, பராமரிப்போ இன்றி இது உள்ளது.

சேலம் மாவட்டத்தில் சமணம் செழித்து இருந்தமைக்கு ஆதாரமாக ஆறகழூர் காமநாத ஈஸ்வரன் கோயிலில் சமணத்தை சேர்ந்த ஒரு தீர்த்தங்கரர், அம்பிகா யட்சி, வெள்ளக்கல்லால் ஆன ஒரு தீர்த்தங்கரர் சிற்பம் உள்ளது. பருத்திப்பள்ளி என்ற ஊரில் கிடைத்த பார்சுவநாதர் தீர்த்தங்கரர் சிற்பம் தற்போது சேலம் அருங்காட்சியகத்தில் உள்ளது. பொட்டனேரி தீர்த்தங்கரர் சிற்பத்தையும் பாதுக்காக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

பொட்டனேரி வரதராஜபெருமாள் கோயில வட்டெழுத்துக் கல்வெட்டு குறித்து தொல்லியல் துறையில் இணை இயக்குனராகப் பணியாற்றிய சாந்தலிங்கத்திடம் மேட்டூர்த் தமிழ்ச் சங்கத் தலைவராக இருந்த மறைந்த தமிழாசிரியர் கோ.பெ.நாராணசாமி முப்பதாண்டுகளுக்கு முன்பே தகவல் தந்து அதுகுறித்த ஆய்வினை மேற்கொள்ளும்படி கூறியுள்ளார். ஆனால், அப்போது அது குறித்த ஆய்வுகள் உடனடியாக மேற்கொள்ளப்படாததால் இது குறித்த தகவல்கள் அல்லது குறிப்புகள் எதிலும் இடம் பெறவில்லை.

தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஆய்வின் மூலம் பொட்டனேரி வரதராஜப் பெருமாள் கோயிலில் வட்டெழுத்து கல்வெட்டுகள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz