எட்டு வடிவ நடைப் பயிற்சியால் எட்டிப் போகும் நோய்கள்

Monday 27, May 2019, 19:13:55

சிறப்புக் கட்டுரை:

க. சண்முக வடிவேல்

பல்வேறு அடுக்குமாடிக் குடியிருப்புகள், பூங்காக்கள், உடற்பயிற்சிக் கூடங்கள் போன்ற பல இடங்களில் எட்டு வடிவத்திலான நடைபாதை வரையப்பட்டு, அதில் பல்வேறு தரப்பினரும் நடைப் பயிற்சியினை மேற்கொள்கின்றனர். எளிதான இந்த எட்டு வடிவ நடைப் பயிற்சியை மேற்கொள்வோருக்குப் பலவிதமான  பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன.

எட்டு வடிவ நடைப் பயிற்சியினை பலரையும் மேற்கொள்ள வைத்தவரான திருச்சி அமிர்தா யோகமந்திரம் யோகா ஆசிரியர் விஜயகுமார் அதன் மகத்துவம் குறித்தும் அதனை மேற்கொள்ளும் விதம் குறித்தும் நம்மிடம் விளக்கினார்.

"8 வடிவ நடைப்பயிற்சியால் உடலுக்கு சக்தியும் ஆரோக்கியமும் கிடைக்கிறது. யோகிகளும், சித்தர்களும்  கூட எட்டு வடிவ நடைப்பயிற்சியைச் சிறந்ததாகக் கூறியுள்ளனர். எட்டு வடிவ நடைப்பயிற்சியை தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.

சமதளமான நிலப்பரப்பில் தெற்கு வடக்கு திசையில் எட்டு நடை பயிற்சி பயிலலாம். 4 அடி அகலமும் 12 அடி நீளமும் கொண்டதாக எட்டு வடிவில் நடைபயிற்சி தளத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

நடக்கக் கூடிய பாதையானது சமதளமாகவோ அல்லது கூழாங்கல் அமைத்ததாகவோ இருக்கலாம். வல சுழலாக 20 நிமிடங்கள் தெற்கில் இருந்து வடக்கு நோக்கியும் பின் 20 நிமிடங்கள் வடக்கில் இருந்து தெற்கு நோக்கி இடைச்சுழலாகவும் நடக்க வேண்டும்

நடைப்பயிற்சியின் போது நிதானமாகக் கைகளை வீசி நடக்க வேண்டும். காலையிலும் மாலையிலும் உணவு சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் நடைபயிற்சி செய்யவேண்டும்.

தினமும் 4 0 நிமிடங்கள் வரை முறைப்படி செய்தல் வேண்டும். ஆரம்ப காலங்களில் 20 நிமிடங்கள் செய்து பின்பு 40 நிமிடங்கள் நடைபயிற்சி பயிலலாம். நடைப்பயிற்சியினை தொடர்ந்து தினமும் செய்வதால் உடல் உள்ளம் உறுதியாகும்.

நுரையீரல் நன்கு விரிவடைந்து இயக்கம் சீராகும். இரத்த ஓட்டம் சீராக செயல்பட வழிவகுக்கும். தலைவலி, மலச்சிக்கல் தீரும்.
உடலினுள் செல்லும் பிராண வாயுவால் உடல் சக்தி பெறுகிறது.

நடைப்பயிற்சியின் போது உடல் உறுப்புகள் அனைத்தும் முக்கியமாக, இடுப்பு மற்றும் கால்கள் நன்கு வளைந்து கொடுக்கின்றன. இதனால் வெளி உறுப்புகளும் உள் உறுப்புகளும் நல்ல செயல் திறனுடன் செயல்பட்டு ஆரோக்கியம் மேம்படும்.

நடைப்பயிற்சியின் போது அதிகமாக ஆக்ஸிஜன் உள்ளே செல்வதால் நுரையீரலில் இருக்கும் சளியும் நீங்கி விடும். செரிமானக் கோளாறுகள், தைராய்டு நோய், உடல் பருமன், மூட்டு வலிகள், கால் பாத வெடிப்புப் பிரச்னைகள் நீங்கும்.

தோள்பட்டை வலி, கழுத்துவலி, முதுகு வலி, கை கால் வாத நோய்கள், மன அழுத்தம், ஒற்றைத் தலைவலி, நரம்புத் தளர்ச்சி, தூக்கமின்மை, இருதய நோய், சிறுநீரக நோய்கள் போன்றவற்றிற்கு இப் பயிற்சியால் முன்னேற்றம் கிடைக்கும்.

ரத்த அழுத்த நோயினை நீக்குவதுடன் சர்க்கரை நோயை கட்டுக்குள் கொண்டுவரும். மருந்து மாத்திரைகள் தேவைப்படாது. ‘8’ வடிவக் கோட்டையே பார்த்துக்கொண்டு நடப்பதால் மனம் ஒருநிலைப்படும்.

ஆரம்ப நிலையில் தலை சுற்றுவது போல் சிலருக்கு இருக்கும். நிதானமாக தொடர்ந்து நடைபயிற்சி பயிலும் பொழுது பழகிவிடும். கர்ப்பிணிகள் பயிற்சியினை தவிர்க்க வேண்டும்.

நடைப்பயிற்சி செய்யும்போது சுவாசிக்கச் சிரமம், தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம், நெஞ்சு அடைப்பது, நெஞ்சுவலி, தாடையில் வலி, தோள்பட்டை வலி, இதயப் படபடப்பு, வழக்கத்துக்கு மாறாக அதிக வியர்வை போன்ற அறிகுறிகள் தெரிந்தால், உடனே நடப்பதை நிறுத்திவிடுங்கள். மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு மீண்டும் நடைப்பயிற்சி செய்யலாம்" எனக் கூறினார் யோகாசிரியர் விஜயகுமார்.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz