``பழைய நீராதாரங்களை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து மீட்பதே தண்ணீர்ப் பிரச்சனையைத் தீர்க்க ஒரே வழி" - தண்ணீர் அமைப்பு சொல்லும் தீர்வு!

Saturday 08, June 2019, 19:23:59

தமிழகத்தில் தற்போது நிலவி வரும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து திருச்சியில் உள்ள தண்ணீர் அமைப்பின் செயலாளரும், சமூக ஆர்வலருமான கே.சி.நீலமேகம் ``தண்ணீர் பிரச்னைக்கு, பழைய நீராதாரங்களை மீட்டெடுப்பதுதான் ஒரே தீர்வு" எனத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:

நீ ரின்றி அமையாது உலகு என்பார்கள். உலகில் அனைத்து உயிர்களும் வாழ தண்ணீர் அவசியம். மன்னர்கள் ஆண்ட காலத்தில்கூட தினமும் அமைச்சர்களைப் பார்த்துக் கேட்கும் முதல் கேள்வி, ``மாதம் மும்மாரி பொழிகின்றதா?" என்றுதான் நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அந்த அளவுக்கு நீர் முக்கியம்.

இப்போது இந்த நீர் கிடைப்பதில் இடர் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏதேதோ பெரும் தொழில்நுட்பரீதியில் தீர்வுகாண வேண்டும் என்ற மனநிலை மக்களிடையே இருக்கிறது என்பதையும் புரிந்துகொள்ளமுடிகிறது. ஆனால், அதுதான் இல்லை. நீர் பயன்பாட்டை எப்படியெல்லாம் மேலாண்மை செய்யலாம் என்பதைப் பத்து ஆண்டுகளுக்கு மேலாக களப்பணியில் இருந்தவன் என்ற அனுபவத்தில் ஒரு சிறிய மீள்பார்வை செய்கிறேன்.

கடல் கடந்து போரிட்டு பல நாடுகளை வென்று வந்த ராஜேந்திர சோழன், அந்த நாட்டுப் போர் வீரர்களையும், கைதிகளாகச் சிறைப்பிடித்து வந்து, அந்தக் கைதிகளையும் தனது போர்வீரர்களையும் கொண்டே பொன்னேரியை வெட்டியதாக ஒரு தகவல். அந்த அளவுக்கு மன்னர்கள் காலத்திலேயே நீர் சேமிப்பு கருதி ஏரி, குளங்கள் வெட்டி மக்களுக்குப் பணி செய்தார்கள்.

மனித உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்குத் தண்ணீரும் முக்கியமானதுதான். மக்கள் தொகைக்கேற்ப, தற்போது தண்ணீர் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தின் 33 மாவட்டங்களிலும் வறட்சி ஏற்பட்டுள்ளது. தலைநகர் சென்னையில் கடும் வறட்சி நிலவுகின்றது. பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் இடம்பெயரத் துவங்கியுள்ளனர்.

பெரும்பாலான நகரங்களில் குடிநீர், தலையாயப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததுதான். முந்தைய காலங்களில் வீதிதோறும் மரங்கள் நிறைந்து காணப்பட்டன. இதனால் நம் நிலம், பருவ காலங்களில் தேவையான அளவைவிட அதிகமாகவே மழை பெற்றுவந்தது. இந்த மழை நீரைச் சேமித்து அதன் மூலம் விவசாயத்தையும், குடிநீர்ப் பிரச்னையும் போக்கி வந்தனர்.

இதற்காக அவர்கள் ஆறு, ஏரி, குளங்கள் கண்மாய் போன்றவற்றையும் உருவாக்கி தண்ணீரைச் சேமித்து வந்தனர். ஆனால், சமீபகாலமாக நாகரிகம், வளர்ச்சி என்ற பெயரில் மரங்கள், ஏரிகள், குளங்கள், கண்மாய் போன்றவை எல்லாம் காணாமல் போய் குடியிருப்புகளாய் மாறிவரும் அவலம் ஏற்பட்டுள்ளது.

cs1

தமிழகத்தில் மழைநீரைச் சேமிப்பதில் கூடுதல் கவனம் செலுத்தத் தவறிவிட்டனர் என்றே கூறலாம். இதனால் 50 சதவிகிதம் மழைநீர் வீணாகக் கடலில் போய் கலப்பதுடன், நீலத்தடி நீர்மட்டமும் குறைந்துகொண்டே போகிறது.

இந்தப் பிரச்னைக்கு மக்களிடையே சில வழிமுறைகளைக் கண்டிப்பாக நடைமுறைப்படுத்த வேண்டும். தண்ணீரைச் சிக்கனமாக பயன்படுத்த வேண்டிய விழிப்புணர்வை ஏற்படுத்தலாம். அரசு, மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை மீண்டும் தீவிரப்படுத்த வேண்டும். சாதாரண வீடு முதல் அடுக்குமாடி குடியிருப்புகள்வரை, அவற்றை கட்டும்போதே அங்கு மழைநீர் சேகரிப்பு அமைப்பை உருவாக்குவதை உறுதிசெய்ய வேண்டும்.

மேலும் ஆறுகள், நீர் நிலைகள் உள்ளிட்டவற்றில் இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும், அவற்றில் மணல் எடுப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆறுகளில் தடுப்பணைகளைக் கட்டி தண்ணீரைத் தேக்கி வைக்கலாம். கோடையில் தண்ணீர் அதிகம் தேவைப்படாத பயிர்களைச் சாகுபடி செய்ய விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

சொட்டுநீர்ப் பாசனம் கட்டாயமாக்கப்பட வேண்டும். கிராமந்தோறும் மரங்கள் நிறைந்த சோலைகளை அமைக்க முன்வர வேண்டும். கழிவுநீரை மறுசுழற்சி செய்து குடிநீர் தவிர, பிற பயன்பாடுகளுக்கும் உபயோகிக்கலாம் அதற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

குடிநீர்ப் பிரச்னையைத் தீர்க்க ஆட்சியாளர்கள் தொலைநோக்குப் பார்வையுடன், காணாமல்போன பழைய நீராதாரங்களை, ஆக்கிரமிப்பாளர்கள் பிடியிலிருந்து மீட்டு, தண்ணீர் சேமிப்புக்கு வழிவகை செய்தால்தான் தண்ணீருக்காக எந்த ஒரு மாநிலத்திடமும் கையேந்தி நிற்க வேண்டிய நிலை வராது. `வருமுன்னர் காவாதான்' என்ற வள்ளுவர் வாக்கினை நினைவில் கொண்டு வரும் காலங்களில் மழைநீர் சேமிப்பு முறைகளைச் சட்டமுறைப்படி அமல்படுத்தவும், பழைய நீராதாரங்களை மீட்டெடுக்கவும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எல்லோரும் வேண்டுகிறோம்".

மேற்கண்டவாறு தண்ணீர் அமைப்பின் செயலாளர் கே.சி. நீலமேகம் தெரிவித்துள்ளார்.

க.சண்முகவடிவேல்

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz