தஞ்சாவூரில் நடிகை ஆண்ட்ரியா கண்தானம்

Wednesday 12, September 2018, 22:40:04

தஞ்சையில் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனைத் தொடக்க விழாவில் பங்கேற்ற நடிகை ஆண்ட்ரியா தனது கண்களைத் தானமாக வழங்குவதாக அறிவித்து மக்கள் மத்தியில் கண்தானம் குறித்த விழிப்புணர்வூட்டினார்.

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, செப்டம்பர் 12ந் தேதி தஞ்சாவூர் மாநகரில் தனது முதல் அதி நவீன கண் மருத்துவமனையைத் திறந்துள்ளது. இந் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகையும், பின்னணி பாடகியுமான நடிகை ஆண்ட்ரியா ஜெர்மையா கலந்து கொண்டு மருத்துவமனையினைத் திறந்து வைத்தார்.

டாக்டர். அகர்வால் குழும கண் மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர். அடில் அகர்வால் மற்றும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கான மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர். எம்.டி.கே. இராமலிங்கம் ஆகியோர் இத் தொடக்க விழாவில் முன்னிலை வகித்தனர்.

இப் புதிய கண்மருத்துவமனையைத் தொடங்கி வைத்த திரைப்பட நடிகை ஆண்ட்ரியா பேசுகையில், “10 விதமான பராமரிப்புச் சிகிச்சைக்கான இப் புதிய மருத்துவமனையை திறந்து வைப்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறேன். கண் பராமரிப்புக்கான சிகிச்சைக்கு புதிய தரஅளவுகோல்களை நிர்ணயிப்பதில் தனது ஆற்றலையும், சாத்தியத் திறனையும் டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை தொடர்ந்து வெளிப்படுத்தி வந்திருக்கிறது. தஞ்சாவூரில் கண் பராமரிப்பு சிகிச்சையில் சிறப்பான சேவைகளுக்காக புதிய தரநிலைகளை இம் மருத்துவமனை நிலைநாட்டும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்று பேசிய நடிகை ஆண்ட்ரியா தனது கண்களைத் தானமாக வழங்குவதாகவும்  அறிவித்தார்.

டாக்டர். அகர்வால் குழும கண் மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் டாக்டர். அடில் அகர்வால் இந்நிகழ்ச்சியில் பேசுகையில், “கண் பராமரிப்பு மீது உண்மையான அர்ப்பணிப்பையும் பேரார்வத்தையும் கொண்டு, 1957-ம் ஆண்டிலிருந்தே இயங்கி வரும் டாக்டர். அகர்வால் குழும கண் மருத்துவமனை உயர் சர்வதேச தரநிலைகளை தொடர்ந்து பராமரித்து வருவதோடு ஒரு அமைவிடத்திலேயே விரிவான கண் பராமரிப்புத் தீர்வுகளை வழங்குவதற்கு மிக சமீபத்திய தொழில்நுட்ப வசதிகளை கொண்டிருக்கிறது.

தஞ்சாவூரிலும் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளிலும் வசிக்கும் மக்களுக்கான கண் பராமரிப்பு மற்றும் சிகிச்சை சேவைகளை இங்கேயே நாங்கள் வழங்கி விடுவதால், அதற்காக வேண்டி வேறு எந்த ஊருக்கும் மக்கள் இனிப் பயணிக்க வேண்டிய அவசியம் இருக்காது. தமிழ்நாட்டில் 31 மருத்துவமனைகளும் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, ஒடிசா, மஹாராஷ்டிரா, அந்தமான், மேற்குவங்கம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களிலும் மருத்துவமனைகளைக் கொண்டு இது சிறப்பாக இயங்கி வருகிறது.

சர்வதேச அளவில் மிகச்சிறப்பாக செயல்படுகின்ற நிறுவனமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற குறிக்கோளை நோக்கிய முதல் நடவடிக்கையாக மொரீசியஸில், நடத்தப்பட்ட மூன்றாம் நிலை கண் பராமரிப்பு சிகிச்சை மையம் தொடங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் இந்திய பெருங்கடல் பிராந்தியத்திலும் ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசிய நாடுகளிலும் இம்மருத்துவமனை 13 கிளைகளைக் கொண்டிருக்கும் ஒரு சர்வதேச அமைப்பாக தன்னை விரிவுபடுத்தியிருக்கிறது என்று கூறினார்.

டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனையின் திருச்சி மற்றும் தஞ்சாவூருக்கான மருத்துவ சேவைகள் பிரிவின் தலைவர் டாக்டர். எம்.டி.கே. இராமலிங்கம் பேசுகையில், “இப்புதிய மருத்துவமனை அனைத்து கண் பராமரிப்பு சேவைகளுக்கான ஒரு நிரந்தரத் தீர்வு அமைவிடமாக செயலாற்றும். மிக விரிவான கண் பராமரிப்பு சிகிச்சையை வழங்குவது மட்டுமின்றி, கருவிழி, கண்புரைநோய், கண் அழுத்த நோய், குழந்தைகளுக்கான கண் பராமரிப்பு, மாறுகண் குறைபாடு, விழித்திரை, மூளை நரம்பியல் சார்ந்த கண் சிகிச்சையியல் மற்றும் குறைந்த பார்வைத்திறன் குறைபாட்டை சரிசெய்தல் தொடர்புடைய பன்முக சிறப்பு சேவைகளையும் இம் மருத்துவமனை வழங்குகிறது,” என்று கூறினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz