சந்திரயான்-2 வெற்றிகரமாகப் பறந்தது!

Monday 22, July 2019, 18:18:31

இந்தியாவின் இரண்டாவது நிலவுப்பயணத் திட்டமான சந்திரயான்-2 இன்று திங்கள் கிழமை பிற்பகல் இந்திய நேரப்படி 2.43 மணிக்கு ஏவப்பட்டது.

சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கலத் தொகுப்பு. இதில், நிலவை சுற்றி வரும் கலன் ஒன்றும், நிலவில் தரையிறங்கும் கலன் ஒன்றும், நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று ஆய்வுகள் செய்யும் உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும்.

சுற்றுவட்டக் கலனில் இருந்து, தரையிறங்கும் கலன் 'விக்ரம்' பிரியும். தரையிறங்கும் விக்ரம் கலனில் இருந்து பிறகு 'பிரக்யான்' உலாவி பிரியும்.

இந்த வின்கலத் தொகுப்பு இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி. மார்க்3 செலுத்து வாகனம் (ராக்கெட்) மூலம் விண்ணுக்கு ஏவப்படும். இந்தியா உருவாக்கியதிலேயே மிகவும் சக்திவாய்ந்த இந்த செலுத்துவாகனம் 640 டன் எடையுள்ளது. 44 மீட்டர் அல்லது 144 அடி உயரமுடையது. ஏறத்தாழ 14 மாடி கட்டடத்தின் உயரத்துக்கு சமமானது இதன் உயரம்.

2008-ம் ஆண்டு இந்தியா தமது முதல் நிலவுப் பயணத் திட்டமான சந்திரயான்-1 ஐ ஏவியது. இந்த விண்கலன் நிலவில் தரையிறங்கவில்லை. நிலவைச் சுற்றிவந்து நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பது பற்றி முதல் விரிவான ஆராய்ச்சியை தமது ரேடார்கள் உதவியோடு நடத்தியது.

150 மில்லியன் டாலர் செலவில் தயாரிக்கப்பட்டுள்ள தற்போதைய சந்திரயான்-2 திட்டம் தண்ணீர் மற்றும் தாதுப் பொருட்கள் நிலவில் இருப்பது பற்றியும், 'நிலவு'நடுக்கம் (புவியில் நடந்தால் 'நில நடுக்கம்'. நிலவில் நடந்தால் 'நிலவு நடுக்கம்') தொடர்பாகவும் ஆய்வுகள் செய்யும்.

இந்தச் சாதனை வெற்றி குறித்து இஸ்ரோ தலைவர் சிவன், " சந்திரயான் - 2 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது மகிழ்ச்சி. சந்திரயான் 2 திட்டத்திற்கு உழைத்த அனைவருக்கும் எனது சல்யூட். சந்திரயான் 2 விண்கலம் புவிசுற்றுவட்டப் பாதையில் சென்றடைந்தது. நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் - 2 கால் பதிக்கும். 

சோதனைகளை முறியடித்து சந்திரயான்-2 விண்ணில் பறந்துள்ளது. இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடுமையான உழைப்பிற்கு கிடைத்த வெற்றி இது. கடந்த ஒன்றரை ஆண்டுகள் சிறிதும் ஓய்வின்றி சந்திரயான் 2-க்காக உழைத்தனர். அவர்கள் உழைப்பால் தான் இன்று இந்த சாதனை நடந்துள்ளது.

வெற்றிக்கு உழைத்த அனைத்து தரப்பினருக்கும் எனது பாராட்டுக்கள், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள் இன்று" என்று கூறியுள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz