ஆதரவு - 99; எதிர்ப்பு - 105. நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி: கர்நாடக முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் குமாரசாமி!

Tuesday 23, July 2019, 22:01:45

இன்று நடந்த கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் குமாரசாமி அரசு தோல்வியடைந்தது. கர்நாடக முதல்வர் குமாரசாமி கடந்த 18ம் தேதி தனது அரசு மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டபேரவையில் தாக்கல் செய்திருந்தார்.

பல்வேறு கட்ட தாமத்திற்கு பிறகு இன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை நம்பிக்கைகோரும் தீர்மானத்தின் மீது விவாதம் நடத்த வேண்டும். 4 முதல் 5 மணி வரை விவாத்திற்கு பதிலளித்து முதல்வர் குமாரசாமி பேச வேண்டும். 5 மணி முதல் 6 மணிக்கும் வாக்கெடுப்பு நடத்தி முடிக்க வேண்டும் என்று கடுமையான நிபந்தனையுடன் அவையை ஒத்தி வைத்தார்.

இதனையடுத்து இன்று தனது அரசின் மீது கோரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் மீது முதல்வர் குமாரசாமி உருக்கமாக பேசினார். அப்போது, எனது ஆட்சியில் பங்கு கொண்டு கடுமையாக உழைத்த அனைத்து அதிகாரிகளுக்கும் தலைதாழ்ந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், "கர்நாடகாவின் 6 கோடி மக்களிடமும் மன்னிப்புக்கேட்டு கொள்கிறேன். நான் முதல்வராகக் காரணமாக இருந்த காங்கிரஸ் தலைவர்களுக்கு நன்றி. நான் வாழ்க்கையில் பல தவறுகளைச் செய்துள்ளேன், அதே நேரத்தில் நல்ல விஷயங்கள் பல செய்துள்ளேன். காலத்தின் கட்டாயத்தால் நான் அரசியலில் நுழைந்தேன்,

அதே கட்டாயத்தின்பேரில் எனது மனைவியும் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, தற்போது என் முன்பு அமர்ந்துள்ளார். நான் என்றும் அரசியலுக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டது கிடையாது, நான் திருமணம் செய்தபோது எனது மனைவி என்னிடம் வாங்கிய முதல் சத்தியம் அரசியலில் ஈடுபடக் கூடாது என்பதுதான்.

நாடாளுமன்ற தேர்தலுடன் அரசியலைவிட்டு விலக வேண்டும் என முடிவு செய்தேன், ஆனால், குலாம் நபி ஆசாத் கேட்டுக் கொண்டதன் பேரில் அந்த முடிவைக் கைவிட்டேன் என்றார். நான் வாக்கெடுப்புக்கு தயாராக உள்ளேன். தங்களுக்கு வாக்களித்த மக்களை அரசு புறக்கணிக்கவில்லை.

இதுவரை நான் அரசின் வாகனத்தைக் கூடப் பயன்படுத்தவில்லை. என் மீதான புகாருக்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள், பதில் அளிக்கிறேன். நான் ஜோதிடத்தை கேட்டுக்கொண்டு வேலை செய்பவன் அல்ல. ஆனால், மந்திரத்தைக் கொண்டு ஆட்சி புரிந்து வருவதாக எதிரிக்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மக்களுக்கு தேவையான அனைத்துத் திட்டங்களையும் நிறைவேற்றி வருகிறேன். நாங்கள் தள்ளுபடி செய்த அனைத்து கடன்களின் விவரம் அரசின் வலைதளத்தில் உள்ளது. தனியார் வங்கியில் விவசாயிகள் வாங்கிய கடனை அடைக்க ரூ.1700 கோடி ஒதுக்கியுள்ளோம் என்று பேசியமர்ந்தார்.

தொடர்ந்து 7.30 மணியளவில் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், முதல்வர் குமாரசாமிக்கு ஆதரவாக 99 உறுப்பினர்களும், எதிராக 105 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 20 உறுப்பினர்கள் பேரவைக்கு வரவில்லை.

இதனையடுத்து குமாரசாமி தன்னுடைய ராஜினாமவினை கவர்னரிடம் சமர்ப்பித்தார். இதன்படி, கர்நாடகாவில் 13 மாதங்கள் நீடித்த காங்கிரஸ்-மஜத கூட்டணி அரசு 6 வாக்குகள் வித்தியாசத்தில் கவிழ்ந்தது.

தொடர்ந்து பாஜக எம்எல்ஏக்கள் ஒருவருக்கு ஒருவர் கைகுலுக்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். காங்கிரஸ்-மஜத எம்எல்ஏக்கள் அவையைவிட்டு வெளியேறி வருகின்றனர். இதற்கிடையே, கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் எடியூரப்பா தலைமையில் பாஜக அரசு பொறுப்பேற்கவுள்ளது. விரைவில் முதல்வராக எடியூரப்பா பதிவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz