அணை பாதுகாப்பு மசோதா 2019 லோக்சபாவில் இன்று தாக்கல் - கடும் எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளி.

Monday 29, July 2019, 23:17:07

 

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு அணை பாதுகாப்பு மசோதா 2019 என்ற பெயரில் புதிய சட்டத்தை உருவாக்கி உள்ளது. நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்கு ஒரே மாதிரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்தோடு மத்திய அரசு அணை பாதுகாப்புச் சட்டத்தை உருவாக்கி உள்ளது.

இந்தச் சட்டத்தின்படி அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி, தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் ஆகியவை உருவாக்கப்படும். அணை பாதுகாப்பிற்கான தேசிய கமிட்டி கொள்கைகளை உருவாக்கும். தேசிய அணை பாதுகாப்பு ஆணையம் அவற்றைச் செயல்படுத்தும்.

ஒரு மாநிலத்திற்குச் சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் இருந்தால், மாநில அணை பாதுகாப்பு அமைப்பு செய்ய வேண்டியவற்றை தேசிய ஆணையம் செயல்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் கேரளாவில் உள்ள தமிழகத்துக்கு சொந்தமான முல்லை பெரியாறு அணையின் உரிமை பறிபோகும் அபாயம் உள்ளது.

இதேபோல் அணை பாதுகாப்பு சட்டம் நிறைவேறினால் இந்தியாவின் அனைத்து அணைகளின் உரிமை முழுவதும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குச் சென்றுவிடும்.

இந் நிலையில் இன்று அணை பாதுகாப்பு மசோதாவை லோக்சபாவில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவாத் தாக்கல் செய்தார். அப்போது அவர் நாட்டில் 92 சதவீத ஆறுகள் இரண்டு மாநிலங்களில் ஓடுவதாகவும் எனவே அணை பாதுகாப்பு மசோதா அவசியம் என்றும் கூறினார்.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டன. அணை பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டால் மாநிலங்களின் உரிமையில் மத்திய அரசு தலையிடுவதை ஊக்குவிக்கும் என்றும் அணைகளின் மீதான மாநிலங்களின் உரிமைகள் பறிபோகும் என்று எதிர்க்கட்சி எம்பிக்கள் தெரிவித்தனர்.

இதனிடையே இந்த மசோதா மீது இன்று விவாதம் நடைபெறும் அதன்பிறகு வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட உள்ளது. இதன்பின்னர் ராஜ்யசபாவிலும் அணை பாதுகாப்பு மசோதா அறிமுகம் செய்யப்பட உள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz