மதுரை: பள்ளி மாணவர்களைக் கொண்டு நடந்த ஜெ.பேரவை சைக்கிள் பேரணி!

Friday 14, September 2018, 17:22:11

மதுரை மாவட்டம்  திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதா பேரவை சார்பில் அ.தி.மு.க. அரசின் சாதனை விளக்க சைக்கிள் பேரணி நேற்று நடைபெற்றது. வருவாய்த்துறை அமைச்சரும், பேரவையின் மாநிலச் செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நேற்று நடந்தது.

அ.தி.மு.க.வின் துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்தியலிங்கம் கொடி அசைத்து இந்தப் பேரணியைத் தொடங்கி வைத்தார். இந்தப் பேரணிக்கு அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, செல்லூர் ராஜூ, கே.டி.ராஜேந்திரபாலாஜி. சேவூர்ராமச்சந்திரன், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி, பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நேற்று ஒன்பது அமைச்சர்கள் கலந்து கொண்ட  இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ள எதிர்பார்த்த அளவு தொண்டர்கள் சேரவில்லை என்பதால் வாக்குரிமை கூட இல்லாத பள்ளி மாணவர்களை இந்தப் பேரணிக்கு அழைத்து வந்திருந்தது வேடிக்கையாக இருந்தது. தனக்கன்குளம் பகுதியருகே உள்ள சில பள்ளிகளில் இருந்து சைக்கிள் பேரணியில் பங்கேற்க சைக்கிள் வைத்திருந்த மாணவர்கள் அழைத்து வரப்பட்டனர்.

நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை என்ற போதிலும் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் மாணவர்கள் அன்யூனிபார்மில் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டிருந்தனர். பிறகு தங்கள் பள்ளிகளில் இருந்து அவரகள் பேரணியில் பங்கேற்கக் கிளம்பி வந்தனர்.

முதுகில் புத்தகப் பையுடன் பேரணியில் பங்கேற்க வந்திருந்த இந்த மாணவர்களுக்கு ஜெ.பேரவைத் தொண்டர்களுக்கான வெள்ளை நிற பேண்ட் மற்றும் சட்டை தரப்பட்டது. மேலும் அவர்களது சைக்கிள்களில் செருகிக் கொள்ள அதிமுக கொடி ஒன்றும் தரப்பட்டது.

சைக்கிள் பேரணி திருப்பரங்குன்றம் தனக்கன்குளத்தில் தொடங்கி, முருகன் கோவில், அவனியாபுரம், வில்லாபுரம், ரிங்ரோடு வழியாக சிலைமானை சென்றடைந்தது. சைக்கிள் பேரணியில் சென்றவர்கள் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை விளக்கி முழக்கமிட்டு சென்றனர். 

பேரணி முடிந்ததும் மாணவர்கள் தங்கள் உடையின் மேல் அணிந்திருந்த ஜெ.பேரவையினருக்கான உடைகளை சாலையிலேயே களைந்து அதனை எடுத்துத் தங்கள் பைகளில் போட்டு எடுத்துச் சென்றனர்.

பள்ளி மாணவர்கள் கட்சியின் சைக்கிள் பேரணிக்காக அழைத்து வரப்பட்டது பொதுமக்களை வேதனையுடன் முகம் சுழிக்க வைப்பதாக இருந்தது.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz