சேலம் உருக்காலையை தனியார் மயமாக்குவது தொடர்பாக பா.ஜ.க அரசின் கொள்கை முடிவு தவறானது - பா.ஜ.க வின் தொழிற்சங்கமான பாரதீய மஸ்தூர் சங்கம் கண்டனம்...

Wednesday 04, September 2019, 17:25:15

தமிழகத்தில் உள்ள மிக பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான சேலம் உருக்காலை உள்பட நாட்டில் உள்ள மூன்று உருக்காலைகளை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய பாஜக அரசு மிக தீவிரம் காட்டி வருகிறது. தனியார் மய நடவடிக்கையின் ஒரு பகுதியாக உலக அளவிலான டெண்டர் அறிவிப்பை வெளியிட்டு அதற்கான கால அவகாசத்தை பல முறை நீடித்து உள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை கண்டித்து சேலம் உருக்காலை தொழிலாளர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் டெண்டர் கோரும் தனியார் நிறுவனத்தினர் யாரும் ஆலைக்குள் செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறி, அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில், சேலம் இரும்பு உர்க்காலையின் பிரதான நுழைவு வாயிலின் முன்பு கடந்த முப்பது நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொழிலாளர்களின் காத்திருப்பு போராட்டம் இன்று 31 வது நாளாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் பாரதீய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத அமைப்பு செயலாளர் சுரேந்திரன், மற்றும் அகில இந்திய தேசிய செயலாளர் தேவேந்திரகுமார் பாண்டே, மற்றும் தென் பாரத அமைப்பு செயலாளர் துரைராஜ் ஆகியோர் கொண்டு குழுவினர், சேலம் உருக்காலையை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிற்சங்கத்தினரை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். மேலும் பொது துறை நிறுவனமான சேலம் உருக்காலையை தனியார் மயமாக்க ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதி பட தெரிவித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த, பாரதீய மஸ்தூர் சங்கத்தின் அகில பாரத அமைப்பு செயலாளர் சுரேந்திரன், மத்திய அரசு தனியார் மயமாக்கல் நடவடிக்கை மேற்கொண்டு உள்ள பொது துறை நிறுவனங்களை பார்வையிட்டு வந்துள்ளதாகவும், மத்திய பாஜக அரசின் இந்த கொள்கை முடிவு என்பது மிகவும் தவறானது என்றும், இதனை திரும்ப பெற தொடர்ந்து குரல் கொடுப்பதாகவும் உறுதி அளித்தார்.

மேலும் இந்த ஆலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்று ஏற்கனவே மத்திய அமைச்சரை சந்தித்து உள்ளதாகவும், அதே நேரத்தில் சம்மந்தப்பட்ட தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

இந்த ஆலைகள் நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவதற்கு நிர்வாக திறமையின்மையே தவிர தொழிலாளர்கள் காரணம் அல்ல என்றும், தொழிலாளர்கள் தொடர்ந்து உற்பத்தியை கொடுத்து வரும் நிலையில் அதனை வர்த்தக ரீதியாக மேற்கொள்ள நிர்வாகம் முன் வரவில்லை என்றும், வர்த்தகத்தை மேம்படுத்தினால் ஆலைகள் சிறப்பாக நடைபெறும் என்றார்.

மேலும் இந்த ஆலைகள் தனியார் மயமாக்கலை கைவிட கோரி, விரைவில் மத்திய அமைச்சர்களை நேரில் சந்தித்து வலியுறுத்திட உள்ளதாகவும், இந்த துறை அமைச்சர் மட்டுமல்லாமல், விமான துறை அமைச்சர், ரயில்வே துறை அமைச்சரையும் சந்தித்து அந்தெந்த துறையில் மேற்கொள்ளப்படும் தனியார் மய நடவடிக்கையை கைவிட வலியுறுத்திட உள்ளதாகவும் தெரிவித்த அவர், தனியார் மய நடவடிக்கையை கைவிடும் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், மத்திய தொழிற்சங்கத்துடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று உறுதிபட தெரிவித்தனர்.

தொடர்ந்து பேசிய பாரதீய மஸ்தூர் சங்கத்தின் அகில இந்திய செயலாளர் தேவேந்திர குமார் பாண்டே கூறும் போது. மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் ஒன்றிணைந்து நேற்று மத்திய அமைச்சரை சந்தித்து சேலம் உருக்காலை தொடர்பாக பல்வேறு பிரச்சனைகளை எடுத்துரைத்தாகவும், குறிப்பாக ஊதிய உயர்வு, ஓய்வூதியம் மற்றும் தனியார் மயமாக்கல் தொடர்பாக பேசி தொழிலாளர்களின் கோரிக்கையை எடுத்துரைத்தாகவும் , இது தொடர்பாக உரிய பரிசீலினை செய்வதாக மத்திய அமைச்சர் உறுதி அளித்தாகவும் கூறினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz