வெளிநாடுகளில் உண்மையிலேயே முதலீடுகளை திரட்டியிருந்தால் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு தி.மு.க சார்பில் பாராட்டு விழா - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

Thursday 05, September 2019, 17:21:03

திருப்பூரில் முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் இல்ல மண விழாவை தலைமையேற்று நடத்தி வைத்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.

தனது உரையின்போது ஸ்டாலின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால் கோவை, திருப்பூர் உள்ளிட்ட கொங்கு மண்டலங்களில் உள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள் எல்லாம் மூடப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.

பாஜக மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் மனம் திறந்து பேசியதாக குறிப்பிட்ட ஸ்டாலின், அனைத்துக் கட்சி தலைவர்கள் எல்லாம் மேடையில் இருப்பதால் நாகரீகம் கருதி அரசியல் பேச விரும்பவில்லை என்றார். பின்னர் அரசியல் பேசாமல் சென்றால் வெள்ளக்கோவில் சாமிநாதன் தன்னை கோபித்துக் கொள்வார் எனக் கூறிய அவர், தமிழக அரசை பற்றி ஒரு பிடிபிடித்தார்.

அமெரிக்காவிற்கு சென்று அங்கு அப்பட்டமான பொய் ஒன்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாக குற்றஞ்சாட்டினார். ஏற்கனவே 2 முறை நடத்தப்பட்ட உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் சுமார் 5 லட்சம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ளதாக கூறும் தமிழக அரசு, எங்கே? யாருக்கு? வேலை அளித்துள்ளது எனக் கூற முடியுமா? என சவால் விட்டார்.

இந் நிலையில் தமிழகத்தில் 220 தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக அமெரிக்காவில் அப்பட்டமாக பொய் ஒன்றை முதல்வர் கூறியிருப்பதாக தளபதி ஸ்டாலின் தெரிவித்தார்.

மேலும் உண்மையிலேயே தமிழகத்துக்கு முதலீடுகளை முதலமைச்சர் பெற்றிருந்தார் என்று சொன்னால், தி.மு.க சார்பில் நாங்களே அவருக்கு பாராட்டு விழா நடத்த தயங்க மாட்டோம், ஆனால், அவர் அப்படி எதுவும் செய்யவில்லை எனப் பேசி ஸ்டாலின் பரபரப்பினை ஏற்படுத்தினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz