ரஜினி பா.ஜ.க.வில் இணைவார் என்பது உண்மைக் கலப்பற்ற வதந்தியே - தமிழருவி மணியன் தகவல்!

Friday 06, September 2019, 15:01:29

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்த சில முக்கியக் கருத்துகளை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் இன்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ரஜினி பா.ஜ.க.வில் இணைவார் என்பது போன்ற வதந்திகள் திட்டமிட்டு பரப்பப்படுகிறது. ரஜினி பா.ஜ.க.வில் இணைவார் என்பது வதந்தியே தவிர, இதில் உண்மை இல்லை, எந்த நிலையிலும் ரஜினி பா.ஜ.க.வில் இணையமாட்டார்.

உரிய காலம் வரும் போது, கட்சி பற்றியும், கொள்கைகள் பற்றியும் ரஜினி அறிவிப்பார். ரஜினிகாந்த் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கையை பெற்றுள்ளார்.

ரஜினியை பார்த்து அச்சம் கொள்கிறவர்கள் தான் விமர்சனம் செய்கிறார்கள் – என்று தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

அரசியலுக்கு ரஜினி வரும் பட்சத்தில் அ.தி.மு.க மற்றும் தி.மு.க.வில் இருக்கும் சில மூத்த தலைவர்களும் அவருடன் கைகோர்க்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரஜினியின் உத்தரவின் பேரில் சட்டமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப் பட்டுள்ளதாகவும் பூத் கமிட்டி அமைக்கும் பணிகள் 70% நிறைவு பெற்றுள்ளதாகவும் மாவட்ட செயலாளர்கள், பொறுப்பாளர்கள் என ஒட்டு மொத்தமாக 2 லட்சம் நிர்வாகிகள் உள்ளதாகவும் என ரஜினி மக்கள் மன்ற வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.

ஆனால், பா.ஜ.க.வில் ரஜினி இணைவதற்கு வாய்ப்பு மிகக்குறைவு என்றும் பா.ஜ.க. மற்றும் ரஜினியின் கொள்கைகள் ஒரே மாதிரியானவை என்றும் நடிகர் எஸ்.வி.சேகர் கருத்துத் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் அரசியலுக்கு ரஜினி வந்தால் பல கட்சிகள் காணாமல் போய்விடும் என்பது உறுதி – என்று எஸ்.வி.சேகர் உறுதிபடக் கூறியுள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz