பெங்களூரு: ஆபாசபடம் பார்ப்பது தேச விரோதம் இல்லை என்கிறார் கர்நாடக சட்ட மந்திரி மதுசாமி

Friday 06, September 2019, 15:16:33

பாஜகவைச் சேர்ந்த லட்சுமண் சங்கப்பா சாவடி, கர்நாடக மாநில எம்.எல்.ஏ.வாக இருந்தபோது சட்டப்பேரவைக்குள் அமர்ந்து செல்போனில் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கினார்.

அவருடன் சட்டப்பேரவையில் ஆபாச வீடியோ பார்த்ததாக கூறப்பட்ட சி.சி.பாட்டீல், கிருஷ்ணா பலீமர் ஆகியோர் அப்போது மந்திரிகளாக இருந்தனர். சர்ச்சையைத் தொடர்ந்து அவர்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

தற்போது லட்சுமண் சங்கப்பா சாவடி கர்நாடகா துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு பாஜகவுக்குள்ளேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தேர்தலில் தோல்வியுற்ற ஒருவருக்கு துணை முதல்வர் பதவி கொடுக்க வேண்டிய அவசியமும், அவசரமும் ஏன்? என்று எம்.எல்.ஏ ரேணுகாச்சார்யா கண்டனம் தெரிவித்து கேள்வி எழுப்பினார்.

இந்நிலையில் கர்நாடகா மாநில சட்ட மந்திரி மதுசாமி இவ்விவகாரம் குறித்து கூறுகையில், ‘ஆபாச படம் பார்ப்பது தேச விரோதமல்ல. ஆபாச படம் பார்ப்பது தார்மீக ரீதியாக தவறானதுதான்.

அதன் காரணமாக அவர் மந்திரியாகக் கூடாது என்று வாதிடுவதில் அர்த்தம் இல்லை. நாம் எல்லாருமே தவறுகள் செய்பவர்கள்தான். லட்சுமண் யாரையும் ஏமாற்றவில்லை. தேச விரோத செயல்களிலும் ஈடுபடவில்லை. இதற்காக ஆபாச படம் பார்ப்பதே சரி என கூறவில்லை.

இது பற்றிய விவாதம் தேவையில்லை என்றுதான் கூறுகிறேன்’ என கூறியுள்ளார். சட்ட மந்திரியின் இந்த பேச்சு இப்போது மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz