முன்னாள் பிரதமர் இராஜீவ் கொலைவழக்கில் கைதான முருகனின் பரோல் மனு சிறைத்துறையால் நிராகரிப்பு.

Tuesday 10, September 2019, 17:20:43

இந்திய முன்னாள் பிரதமர் இராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைவராகக் கைதாகி 27 ஆண்டுகளுக்கும் மேலாக  வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருப்பவர் முருகன். இலங்கையில் உள்ள இவரது அப்பா புற்று நோயால் பாதிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்.

இதையடுத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள தனது தந்தை சிகிச்சைக்காக இலங்கையில் இருந்து சென்னை வர இருப்பதால் சிகிச்சையின்போது அவருடன் இருக்கவும், உதவியாக இருந்து அவரை கவனித்துக்கொள்ளவும் ஒரு மாதம் பரோல் கோரி கடந்த மாதம் 31.08.2019 அன்று சிறைதுறையிடம் முருகன் மனு அளித்திருந்தார்.

இந்நிலையில் முருகனின் பரோல் கோரிக்கை மனு சிறைத்துறையால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முருகனுக்கு ஒரு மாதம் பரோல் அளிக்கும் அதிகாரம் சிறைத்துறைக்கு இல்லை என கூறி நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராஜீவ் கொலைவழக்கில் முருகனோடு அவரது மனைவி நளினியும் கைது செய்யப்பட்டிருந்தார். இவர்களின் ஒரேமகள் திருமணத்திற்காக நளினிக்கு 30 நாள் பரோல் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஜீலை 5-ம் தேதி உத்தரவிட்டது.

இதையடுத்து கடந்த ஜீலை 25-ம்தேதி 30 நாள் பரோலில் சென்ற முருகன் மனைவி நளினியின் பரோல் மேலும் 21 நாட்கள் நீட்டிக்கப்பட்டது. மொத்தம் 51 நாள் பரோல் முடிந்து வரும் 14-ம் தேதி நளினி மீண்டும் பெண்கள் தனிச்சிறைக்கு அழைத்துசெல்ல இருக்கிறார்.

மகள் திருமணத்திற்காக பரோலில் நளினி வந்த போதிலும் லண்டனில் உள்ள அவரது மகள் இதுநாள் வரை இந்தியா வராததும், அவருக்குத் திருமணம் நடைபெறாததும் குறிப்பிடத்தக்கது.

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz