அ.தி.மு.க.வை பாஜக கைவிட்டு விட்டது - திருச்சியில் டி.டி.வி.தினகரன்

Saturday 15, September 2018, 13:21:52

அண்ணா பிறந்தநாள் விழாவில் கலந்துக்கொள்வதற்காக திருச்சிக்கு வந்த டி.டி.வி.தினகரன் சங்கம் ஹோட்டலில் நேற்று இரவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அதிமுகவை பாஜக கைவிட்டு விட்டது என தெரிவித்தார். 

செய்தியாளர்கள் சந்திப்பின் பொது அவர், "திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறும். அ.தி.மு.க.வினர் டெபாசிட் பெறுவதற்காக போராடி வருகின்றனர். சேலம்-சென்னை 8 வழி பசுமை சாலை பொதுமக்கள் விரும்பாத திட்டம். இந்த திட்டம் நிச்சயம் வராது. அகலப்படுத்த வேண்டிய சாலைகள் நிறைய உள்ளது" என்றார்.

மேலும் அவர் பேசுகையில், "சென்னையில் இருந்து மதுரை வழியாக நாகர்கோவில் சாலை, வேலூர் வழியாக பெங்களூரு சாலை, சென்னையில் இருந்து உளுந்தூர்பேட்டை வழியாக சேலம் சாலை ஆகியவற்றை அகலப்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும். இயற்கை வளங்கள், விவசாய நிலங்களை அழிக்காமல் இந்தத் திட்டத்தை கொண்டு வர வேண்டும்.

அ.தி.மு.க.வை பா.ஜ.க. கைவிட்டு விட்டது என்பது பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை பேசிவருவதில் தெரிகிறது. தி.மு.க.வை நோக்கி பா.ஜ.க. செல்கிறதா? என்பது பற்றி தெரியவில்லை. தமிழகத்தில் மின்தடை தொடர்ந்து வருகிறது. காற்றாலை மின்சாரம் வாங்குவதில் பேரம் ஏற்பட்டதால் இருப்பு இருந்த நிலக்கரியை பயன்படுத்தி அனல் மின்நிலையங்களில் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளனர்.

போதுமான இருப்பு நிலக்கரி இல்லாததால் பற்றாக்குறை ஏற்பட்டு உற்பத்தி பாதிப்படைந்துள்ளது. தினமும் 2,500 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. இதனை தவிர்க்க வெளிநாட்டில் இருந்து நிலக்கரி இறக்குமதி செய்து மின்உற்பத்தி செய்யலாம். ஏரி, குளங்கள் தூர்வாரப்படாததால் காவிரி நீர் நேரடியாக கடலில் போய் சேர்ந்துள்ளது. கடைமடைக்கு நீர் சென்றடையவில்லை. ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதை அரசியலாக்க வேண்டாம். இதில் கவர்னர் நல்ல முடிவு எடுப்பார் என எதிர்பார்க்கிறோம்" இவ்வாறு அவர் கூறினார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz