திருச்சி: 2160 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா!

Saturday 15, September 2018, 13:28:22

திருச்சிராப்பள்ளி, கி.ஆ.பெ. விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி கலையரங்கத்தில் சமூக நலத்துறையின் மூலம் 2160 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி தொடங்கி வைத்தார்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு மாலை அணிவித்து நலுங்கு வைத்து வளையலிட்டு சீர்வரிசையாக பூ, மஞ்சள், குங்குமம், வளையல், டிப்பன் பாக்ஸ் உள்ளிட்ட மங்கலப்பொருட்களை சீர் வரிசையாக வழங்கி வாழ்த்து தெரிவித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி பேசியதாவது:

"ஏழை எளிய குடும்பங்களை சேர்ந்த கர்ப்பிணி பெண்களுக்கு அரசு சார்பில் சமுதாய வளைகாப்பு நடத்த வேண்டும் என முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதா உத்தரவிட்டதை அடுத்து, தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் இத் திட்டத்தை முழு அளவில் நிறைவேற்றி வருகின்றது.
தமிழக அரசு பெண்கள் வளர்ச்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. கருவுற்ற தாய்மார்களுக்கு தமிழ் சமுதாயத்தில் பாரம்பரியமாக இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உற்றார் உறவினர்கள் மூலம் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஏழை கர்ப்பிணி தாய்மார்களுக்கு அரசே ஏற்று ஆண்டு தோறும் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் அந்தநல்லூர், இலால்குடி, மணப்பாறை, மணிகண்டம், மண்ணச்சநல்லூர், மருங்காபுரி, முசிறி, புள்ளம்பாடி, தாத்தையங்கார்பேட்டை, திருவெறும்பூர், தொட்டியம், துறையூர், திருச்சிராப்பள்ளி, உப்பிலியபுரம், வையம்பட்டி போன்ற 16 இடங்களில் 2160 கர்ப்பிணி தாய்மார்களுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் கி.ஆ.பெ. விஸ்வநாதன் மருத்துவக்கல்லூரி அரங்கத்தில் மட்டும் 400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு இந்த வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

கிராமப்புறம் மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் கருவுற்ற ஏழை தாய்மார்களுக்கு இந்த வளைகாப்பு நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. கருவுற்ற தாய்மார்கள் தங்கள் உடல் பரிசோதனையை மருத்துவரின் அறிவுரையின்படி பெற்று எதிர்காலம் ஆரோக்கியமாக இருக்க சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். பெண்களுக்கென்று என்னெற்ற திட்டம் அரசு செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்கு வேலைவாய்ப்பில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் படித்த பெண்களுக்கு 8 கிராம் தங்கம் 50 ஆயிரம் நிதியுதவியும், பட்டய படிப்பு அல்லா பெண்களுக்கு 8 கிராம் தங்கமும், 25 ஆயிரம் நிதியுதவியும் தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தில் திருச்சி மாவட்டத்தில் 2011 – 2017 ஆம் ஆண்டு வரை ரூபாய் 175 கோடி திருமண உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

கருவுற்ற தாய்மார்களுக்கு தாய் ஆரோக்கியத்தையும், கருவில் உள்ள குழந்தை ஆரோக்கியத்தையும் கருத்தில் கொண்டு டாக்டர்.முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்தின் மூலம் 2017ஆம் ஆண்டு 23,196 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூபாய் 12,000 வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 2018 கர்ப்பிணிதாய்மார்களுக்கு 12,000லிருந்து 18,000மாக உயர்த்தி 5 தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 18,000 மாக உயர்த்தி வழங்கப்பட்டத்தில் 11,575 கர்ப்பிணி தாய்மார்கள் பயன்பெற்றுள்ளனர்.

அழகான வாழ்வு, வளமான வாழ்வு, அழகான குடும்பம், மகிழ்ச்சியான குடும்பம், என்ற தத்துவத்தை மனதில் கொண்டு திட்டமிட்டு வாழ்தல் வேண்டும். மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி, தொட்டியம் ஆகிய வட்டாரங்களில் குடும்பநலம் பற்றிய விழிப்புணர்வு குறைந்து காணப்படுகிறது. பொருளாதார ரீதியில் கணவன், மனைவி இருவரும் திட்டமிட்டு வாழ்தல் வேண்டும்" என்று ஆட்சியர் தனது உரையில் குறிப்பிட்டார்.

முன்னதாக கர்ப்பிணி தாய்மார்களின் Poshan Abhiyaan ஊட்டச்சத்து குறித்த விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் வாசிக்க அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இறுதியில் திருச்சி காவேரி கலைக்கல்லூரி மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவரின் துணைவியார் பிரேமலதா இராசாமணி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் புவனேஷ்வரி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மலர்விழி, இணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) டாக்டர்.சம்சாத்பேகம், கி.ஆ.பெ. அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர்.அனிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் சாந்தி(வேளாண்மை), பழனிதேவி (பொது) (பொறுப்பு), திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் உமாமகேஸ்வரி மற்றும் ஏராளமான கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz