நிதி ஆயோக் புள்ளி விவரம் தகவல்: ஊழலில் தமிழகம் முதலிடம்; மூன்றாமிடத்தில் குஜராத்!

Sunday 22, September 2019, 22:42:44

நிதி ஆயோக் அமைப்பின் தரவுகளின் அடிப்படையில், நாடு முழுவதும் ஊழல், இலஞ்சம் தொடர்பான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. இதன்படி  ஊழலில் தமிழகம் முதலிடத்திலும், குஜராத் மூன்றாம் இடத்திலும் உள்ளதாக பகீர் தகவல் வெளியாகி உள்ளது. 

எஸ்டிஜி - 2018 தரவுகளை ெகாண்டு, நிதி ஆயோக் புள்ளி விவரங்களின்படி, பிரதமர் மோடியின் மாநிலமான குஜராத் லஞ்சம், ஊழல் முறைகேட்டில் மூன்றாமிடம் இடத்தில் உள்ளது. இம்மாநிலம் 1,677.34 குறியீடுகள் பெற்றுள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை ஊழல் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

இரண்டாம் இடத்தில் ஒடிசாவும், அடுத்தடுத்த இடங்களில் சட்டீஸ்கர், சண்டிகர் ஆகிய மாநிலங்களும் உள்ளன. தமிழகத்தின் ஊழல் குறியீடு ஒரு கோடி மக்கள் என்ற அடிப்படையில், 2,492.45 ஆகவும், ஒடிசாவின் குறியீடு 2,489.83 ஆகவும், சட்டீஸ்கரின் குறியீடு 452.2 ஆகவும், சண்டிகரின் குறியீடு 342 ஆகவும் உள்ளது.

குஜராத் விஜிலென்ஸ் கமிஷன் அறிக்கையின்படி, கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தில் மட்டும் ஊழல் தொடர்பான 40,000 புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கண்ட ஐந்து ஆண்டுகளில் ஊழல் தொடர்பான வழக்குகளில் 800 ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்த அறிக்கையை குஜராத் மாநில உள்துறை அமைச்சர் பிரதீப் சிங் ஜடேஜா வெளியிட்டார்.

அதே நேரத்தில், ஊழல் தடுப்பு பணியகம் (ஏசிபி), இந்த புள்ளி விவரங்கள் குறித்து கூறுகையில், ‘2017ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2018ம் ஆண்டில் ஊழல் வழக்குகளின் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. ஊழல் குற்றங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளின் எண்ணிக்கை 2017ம் ஆண்டில் 216 ஆக இருந்து 2018ம் ஆண்டில் 729 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் அதிக ஊழல் வழக்குகள் வருவாய்த்துறையில் காணப்பட்டுள்ளன. நகர்ப்புற மேம்பாடு இரண்டாமிடத்திலும், உள்துறை அமைச்சகம் மூன்றாம் இடத்திலும் உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz