பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க மகேஷ் பொய்யாமொழி எம்.எல்.ஏ கோரிக்கை

Tuesday 08, October 2019, 19:53:42

திருச்சி மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் களப்பணிகளில் திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழியின் களப்பணி வித்தியாசமானதாகவே கருதப்படுகின்றது. ஒவ்வொரு மாதமும் தனது தொகுதிக்குற்பட்ட பல்வேறு பகுதிகளில் திடீர் என கள ஆய்வு செய்து பொதுமக்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமையளிக்கும் விதமான செயல்பாடுகளை அவ்வப்போது செய்து மக்களின் மனதில் தனக்கான இடத்தை தக்கவைத்துக்கொண்டு வருகின்றார்.

அந்த வகையில் நேற்று தனது தொகுதிக்குட்பட்ட அரியமங்கலம் 28-வது வார்டு பகுதிக்குட்பட்ட திடீர் நகர் பகுதியில் திடீர் விசிட் அடித்தார். அப்பகுதியில் உள்ள நியாய விலைக்கடைகளில் சென்று அங்கு தரமான பொருட்கள் வழங்கப்படுகின்றதா என்றும், போதுமான பொருட்கள் கையிருப்பில் இருக்கின்றதா என்றும் ஆய்வு செய்தார்.

அப்போது அவரை சூழ்ந்துக்கொண்ட பொதுமக்கள் இந்த நியாய விலைக்கடையில் போதிய பொருட்கள் கையிருப்பில் இல்லாததால் தாங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாவதாகவும், சர்க்கரை, பாமாயில், அரிசி போன்ற பொருட்கள் பின் வாசல் வழியாக பலருக்கு தாரைவார்க்கப்படுவதாகவும் தெரிவித்து முறையிட்டனர்.

mahesh
இதனையடுத்து மகேஷ் பொய்யாமொழி உடனடியாக மாவட்ட உணவு வழங்கல் துறை அதிகாரியை தொடர்பு கொண்டு பேசினார். பொதுமக்களின் தன்னிடம் முறையிட்ட தகவலை தெரிவித்து அடுத்த முறை இப்படியான குளறுபடிகள் வராமலும், பொதுமக்கள் புகாரை உடனடியாக நிவர்த்தி செய்திடுமாறு கேட்டுக்கொண்டார். தவறும் பட்சத்தில் முறையாக சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க நேரிடும் எனவும் கண்டிப்புடன் பேசினார்.

பின்னர் மேல அம்பிகாபுரம் பகுதிக்கு விரைந்தவர் அப்பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக மேலஅம்பிகாபுரம் பகுதியில் பேருந்து நிழற்குடை அமைக்கப்படாததை வேதனையுடன் பொதுமக்கள் தெரிவித்தனர். அதேபோல் மேல அம்பிகாபுரம் நியாய விலைக்கடையிலும் ஆய்வு செய்தவர் நியாயவிலைக்கடையின் மேல் பகுதி இடிந்து விழும் சூழல் இருப்பதால் விரைவில் கடையை வேறு பகுதிக்கு மாற்றி புதிய கட்டிடம் கட்டித்தரப்படும் என்றார்.

மேலும், அந்தப்பகுதிகளில் பாதாள சாக்கடைப்பணிகளுக்காக சாலைகள் பள்ளம் பறிக்கப்பட்டு அப்படியே திறந்தவெளியில் தொட்டிகள் இருப்பதால் பலரும் இரவில் தட்டு தடுமாறி செல்வதையும், சிலர் பள்ளத்தில் விழுந்து காயம்பட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றதையும் விளக்கி கூறினர். கால்நடைகளும் பாதாள குழிக்குள் விழுந்து விட அவைகளை மீட்பது பெரும் போராட்டமாகவே இருந்தது என்றனர் பொதுமக்கள்.

mahesh1

உடனே மேல அம்பிகாபுரம் நேருஜி 1-வது, 2-வது தெரு, ரெத்தினசாமி தெரு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து சென்று ஆய்வு செய்த மகேஷ் பொய்யாமொழி, பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் நீண்ட நாட்களாக மூடப்படாத பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் உயரதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசியவர், ஒரு தெருவில் பள்ளம் பறித்தால் அந்த தெருவில் முற்றிலும் பணிகளை செய்துவிட்டு மற்ற தெருக்களுக்கு சென்று பணிகளை செய்ய வேண்டும். அரைகுறையாக இப்படி விட்டுச்செல்லக்கூடாது. அப்படி செய்யாத பட்சத்தில் பொதுமக்கள் போராட்ட யுக்தியை எடுக்கும்போது தானும் இணைந்து போராட வேண்டியிருக்கும் என்றார். அரசு செய்யும் பணிகளை தடுக்கவில்லை, செய்யும் பணிகளை விரைந்து செய்து பொதுமக்களுக்கு ஏதும் பாதிப்பில்லாமல் செய்யுமாறு அதிகாரிகளை அறிவுறுத்தினார்.


27-வது வார்டு சங்கிலியாண்டபுரம் பகுதி பாரதி நகரில் தூர்வாரப்படாத வாய்க்கால் பகுதியினை ஆய்வு செய்தார். அப்பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக கிடப்பில் உள்ள சாலைகளை புதிதாக போட்டுத்தரக்கோரியும், குடிநீர் மற்றும் நீண்ட நாள் கோரிக்கையான அப்பகுதியில் உள்ள இடுகாட்டை சுற்றி சுற்றுச்சுவர் எழுப்பித்தருமாறும் கோரிக்கை வைத்தனர். காம்பவுண்ட் இல்லாததால் இரவு நேரங்களில் பலரும் மது அருந்திவிட்டு அப்பகுதிக்குள் சென்று சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதால் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்ல வேண்டியிருக்கின்றது என்றனர். இதுகுறித்து கேட்டறிந்தவர் விரைவில் அவர்களின் குறைகளுக்கு தீர்வு எட்டப்படும் என வாக்குறுதி கொடுத்து சென்றார்.

இந்த ஆய்வின்போது அப்பகுதி பொதுமக்களுடன் திமுக பொறுப்பாளர்கள் கார்த்தி, சுரேஷ், அஷ்ரப், ஸ்டீபன் உள்ளிட்ட பலரும் உடன் சென்றனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz