சென்னை: ராஜீவ்காந்தி மருத்துவமனையில் மருத்துவர்கள் போராட்டம்!

Wednesday 09, October 2019, 19:06:27

அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் நடக்க இருந்த மாநில செயற்குழு கூட்டத்திற்கு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் மறுப்பு தெரிவித்ததை கண்டித்து அரசு மருத்துவர்கள் இன்று  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு மருத்துவர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு சார்பில் தகுதிக்கேற்ப ஊதியம், உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி முதல் அரசு மருத்துவர்கள் சார்பில் காலவரையற்ற உண்ணாவிரதம் நடைபெற்றது. அதன்பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் கோரிக்கைகளை 2 மாதங்களுக்குள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டது.

இதையடுத்து, மருத்துவர்கள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர். இந்நிலையில், குறிப்பிட்ட காலக்கெடுக்குள் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து ஆலோசிப்பதற்கான கூட்டம் நடத்த அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் திட்டமிடப்பட்டது.

அதன்படி, இன்று மருத்துவமனை வளாகத்திற்குள் மருத்துவர்கள் வந்தபோது கூட்டம் நடத்த மருத்துவமனை நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. மருத்துவமனை நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை கண்டித்து ஐம்பதுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அரசு மருத்துவர்கள் சங்க கூட்டமைப்பின் தலைவர் பாலகிருஷ்ணன் இம்மாதம் 24ம் தேதி மாலைக்குள் மருத்துவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் உறுதியளித்துள்ளதாக தெரிவித்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz