கஜாபுயலால் பாதிக்கப்பட்ட 164 கிராமங்களுக்கு இழப்பீடு மறுப்பு - திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள்

Thursday 10, October 2019, 19:17:41

காவிரி டெல்டா மாவட்டங்களில் கஜாபுயலால் பாதிக்கப்பட்டு காப்பீடு செய்த விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 564 வருவாய் கிராமங்களில் 164 கிராமங்களுக்கு இழப்பீடு மறுக்கப்பட்டுள்ளது.

இதனைக் கண்டித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் இன்று ஆயிரக்கணக்கான விவசாயிகள் விளமல் பாலத்திலிருந்து பேரணியாக சென்று திருவாரூர் மாவட்ட ஆட்சியரகத்தை சுமார் 2 மணி நேரம் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

போராட்டக்காரர்களை அலுவலக றுழைவு வாயிலை பூட்டி இரண்டடுக்கு தடுப்பு அரண் அமைத்து அலுவலகத்தில் நுழைய விடாமல் தடுத்து நிறுத்த முயற்சித்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது பின்னர் அங்கேயே அமர்ந்த விவசாயிகள் சுமார் 2 மணி நேரம் முழக்கமிட்டவாறே முற்றுகையில் ஈடுபட்டனர்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் திருவாரூர் RD0, தாசில்தார், டிஎபி வைத்து பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.அதனை ஏற்றுக் கொண்ட விவசாயிகள் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் மாவட்ட ஆட்சியரோடு சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதன்படி விடுபட்டுள்ள அனைத்து கிராமத்திற்கும் உரிய இழப்பீடு பெற்று தருவதற்கும், குறைவான இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதை கஜாபுயல் பேரிடராக கருதி அனைத்து கிராமங்களுக்கும் முழு இழப்பீடு பெற்று தருவதற்கு அறுவடை ஆய்வறிக்கைகளில் தவறுகள் ஏதேனும் நடைப்பெற்றிருக்கிறதா? என்பதை ஆய்வு செய்து உரிய இழப்பீடு கிடைப்பதற்கு அவசர கால நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.

தவறுகள் நடைப்பெற்றது உண்மையெனில் மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்கும் என உறுதியளிக்கப்பட்டது. மேலும் உழவு மான்யம், மான்ய விலையில் விதை உள்ளிட்ட இடுபொருட்கள் வழங்குவது குறித்தான பயனாளிப் பட்டியல்கள் கிராமம் தோறும் வெளியிடப்படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனை ஏற்று முற்றுகைப் போராட்டம் கைவிடப்பட்டது.

முன்னதாக பேரணியை மாநில தலைவர் த.புண்ணியமூர்த்தி துவக்கி வைத்தார்.மாநில துணை தலைவர் ஜி.வரதராஜன், துணை செயலாளர் எம்.செந்தில்குமார், .மாவட்ட செயலாளர் சேரன் செந்தில்குமார். தலைவர் எம்.சுப்பையன், கவுரவதலைவர் எம்.செல்வராஜ், பொருளாளர் நடராஜன், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz