ஹைகோர்ட்டை தரக்குறைவாக விமர்சித்த எச்.ராஜா; எஸ்.வி.சேகர் பாணியில் தப்ப முனைப்பு...

Monday 17, September 2018, 21:30:07

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது பா.ஜ.க. தேசியச் செயலாளர் எச்.ராஜா போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒரு கட்டத்தில் உணர்சிவயப்பட்டவராக எச்.ராஜா. டிஜிபி, போலீஸார், உயர்நீதிமன்றம் ஆகியோரை மிகவும் அவதூறாகப் பேசினார். போலீஸாரைப் பார்த்து, காக்கிச் சட்டை போடுவதற்கு உங்களுக்கு வெட்கமாயில்லையா?; மத்த மதத்துக்காரங்ககிட்ட லஞ்சம் வாங்கி அவங்களுக்கு சாதகமா நடந்துக்கறீங்க....உங்களுக்கு லஞ்சம் வேணுமின்னா நானும் தர்றேன் என்று உரத்த குரலில் கூறினார்.

அண்ணாச்சி நீங்க பேசுறது தப்பு..... ஹைகோர்ட் என்ன டிசிசன் கொடுத்து இருக்கோ அதுபடிதான் நாங்க நடந்துக்கறோம் என்று ராஜாவை காவல்துறை அதிகாரி ஒருவர் சமாதானப்படுத்தப் பார்த்தார்.  ஹைகோர்ட்டாவது  ம...வது, ஹைகோர்ட்டாவது ம...கட்டியாவது என்று ராஜாவின் அனல் கக்கிய வார்த்தைகள் அனைவரையும் திகைக்க வைத்தன.

பிறகு உயர்நீதிமன்றம் குறித்து ராஜா பேசிய வார்த்தைகள் வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வலம் வர, அனைவர் மத்தியிலும் அது ஏகப்பட்ட விமர்சனங்களுக்கு ஆளானது. முன்பே ட்விட்டர் பதிவொன்றில் இது போன்று வசமாகச் சிக்கிய ராஜா, அந்தப் பதிவைத் தான் போடவில்லையென்றும், தனது அட்மின் தவறுதலாகப் போட்டு விட்டார் என்று கூறி அதிலிருந்து சாமர்த்தியமாகத் தப்பித்தார்.

உயர்நீதிமன்றம் குறித்தத் தனது காமெண்ட் குறித்து எச்.ராஜா ஒன்றில் விளக்கமளிக்கையில் தான் பேசியது எடிட் செய்யப்பட்டு தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளது எனவும், உயர்நீதிமன்றத்தின் மீது மதிப்பும் மரியாதையும் தான் கொண்டவன் எனவும் தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பாக ஹெச்.ராஜா மீது தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர்நீதிமன்றம், நீதித் துறையும் காவல்துறையையும் விமர்சித்தது குறித்து ராஜா 14 நாட்களுக்குள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. ராஜாவுக்கு எதிராக பெண் வழக்கறிஞர் உமா என்பவரும் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய அந்த சம்பவம் குறித்து திருமயம் காவல் நிலையத்தில் ஹெச்.ராஜா உள்ளிட்ட எட்டு பேர் மீது பொது ஊழியரின் உத்தரவுக்கு கீழ் படியாமலும் சட்டவிரோதமாக பொது அதிகாரியின் உத்தரவை மீறி ஒன்றாக கூடியும் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக செயல்பட்டும் பொது இடத்தில் அரசு மற்றும் நீதிமன்றத்திற்கு எதிராக ஆவேசமாக பேசி செயல்பட்டு மற்ற பிரிவினருக்கு பீதியை உண்டாக்கும் வகையில் குற்றச்செயலை செய்ய தூண்டும் உட்கருத்துடன் செயல்பட்டு பொது ஊழியர் தன் கடமையை செய்யவிடாமல் தடுத்ததாகவும் இந்திய தண்டனை சட்டப் பிரிவுகள் 143,188,153(A),290,294(b),353,505(1)b,505(1)c,506(i)ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது  

எச்.ராஜாவை கைது செய்ய இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையும், இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் 5 பேர் கொண்ட தனிப்படையும் புறப்பட்டுள்ளது.

இன்று காலையில் மன்னார்குடியில் இருந்த எச் ராஜாவின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. எனவே தாம் கைது செய்யப்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அவர் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. எனினும் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். சிவகங்கையில் உள்ள அவரது வீட்டை சுற்றி போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே பெண் நிருபர்களை அவதூறாக பேசிய எஸ்வி சேகரை போல் எச் ராஜாவும் நீதிமன்றத்தில் ஆஜராகமலேயே முன்ஜாமீன் கோர வாய்ப்புள்ளது. அதற்குள்ளாக அவர் கைது செய்யப்படுவாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

டெய்ல் பீஸ்:

ஹெச்.ராஜா மீது குற்றம் சாட்டிப் பதிவாகியுள்ள திருமயம் காவல் நிலைய F.I.R.ன் முக்கிய பகுதிகள்: 

13.09.2018ம்தேதி அன்று பகல் சுமார்12.15 மணிக்கு 1) H.ராஜா BJP தேசிய செயலாளர் காரைக்குடி, 2)கணேசன் இந்து முன்னனி ஒருங்கிணைப்பாளர்,மெய்யபுரம், 3)பழனிவேல்சாமி இந்து முன்னனி மாநில பொறுப்பாளர் திண்டுக்கல், 4)RSSதென்மண்டல் செய்தி தொடர்பாளர் திரு.சூர்யநாரயணன், 5)இந்து முன்னனி புதுக்கோட்டைமாவட்ட அமைப்பாளர் கற்பகவடிவேல், 6) சிவகங்கை மாவட்ட இந்து முன்னனி செயலாளர் அக்னிபாலா  7) சிவகங்கை மாவட்ட BJP செயலாளர் திரு ரமேஷ், 8) BJP திருமயம் ஒன்றியசெயலாளர் ஜெயம் சுப்பிரமணியன் மற்றும் சிலர் வந்தார்கள். அப்போது H.ராஜா என்பவர் நான் பேசுவதற்கு ஏன் மேடை போடவில்லை என்று கேட்டபோது போலிஸார் உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் மேடை மற்றும் கொட்டகை அமைக்க இடைக்கால தடை உத்தரவு இருக்கிறது என்று கூறியபோது H.ராஜா ஹைக்கோர்ட்டாவது மயிராவது என்று ஆவேசமாக பேசியும்,காவல்துறைக்கு வெக்கம் இல்லையா?தமிழ்நாடு போலிஸ் ஈரல் அழுகிபோய்விட்டது என்று பேசியும் போலிஸாரை மிரட்டும் தோணியில் பேசினார். பின்னர் உயர்நீதிமன்ற உத்தரவை நீங்கள் கடைபிடிக்கவேண்டுமென்று மீண்டும் கூறிய போது கைக்கோர்ட்டாவது மண்ணாங்கட்டியாவது என்று சொல்லி அங்கிருந்த நபர்களிடம் மேடை அமைக்க சொன்னதன் பேரில் அங்கிருந்த நபர்கள் இரும்பு பைப் மற்றும் மர பலகையை பயன்படுத்தி தற்காலிகமாக உயர்நீதிமன்ற உத்தரவை மீறி கோவில் அருகே வீதியில் மேடை அமைக்க முயற்சி செய்த போது போலிஸார் தடுக்க முயற்சி செய்தார்கள். அரசு ஊழியர் கட்டளைக்கு கீழ்படியாமல் தற்காலிக மேடை அமைத்து அதில் H.ராஜா ஏறி நின்று ஒலிபெருக்கியை பயன்படுத்தி சுமார் 90 நபர்களுக்கு முன்பாக பொதுமக்களுக்கு அச்சம்,மாற்று பிரிவினருக்கு பீதியை விளைவிக்கும் வகையில் ஆவேசமாக பேசினார். பின்னர் மேடையில் இருந்து கீழே இறங்கி சர்ச் வழியாக ஊர்வலமாக செல்ல முயன்ற H.ராஜா மற்றும் அவருடன் வந்தவர்களை தடுத்தபோது பொது மாண்புமிகு உயர்நீதிமன்ற உத்தரவுக்கு கீழ்படியாமல் பொதுமக்களுக்கு தொல்லை உண்டாக்கும் வகையில்,போலிஸார் தடை ஏற்படுத்தி இருந்த தடுப்புகளை சட்டவிரோதமாக எடுத்து அப்புறப்படுத்திவிட்டு குற்றமுறு மிரட்டல் விடுத்து வன்முறையை செயல்படுத்தும் விதமாக ஊர்வலமாக சென்றபோது அச்சம் தரும் கோஷங்களை எழுப்பி சென்றார்கள்.

கடைசிச் செய்தி:

கைதைத் தவிர்க்க ராஜா தலைமறைவாகி விட்டார் என்று பல்வேறு அனுமானங்கள் கிளம்பிப் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்த வேளையில் அதைப் பொய்யாக்கும் விதமாக பா.ஜ.க. தேசிய செயலாளர் H.ராஜா திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஒன்றியம் பகுதியில் நடந்த பா.ஜ.க.  பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். முன்னதாக அந்தக் கூட்டத்தில் பேசிய பிரமுகர் ஒருவர் அன்றைய மாலைப் பத்திரிகையில் ராஜா தலைமறைவு எனப் போடப்பட்டிருந்ததை கூட்டத்தினருக்குக் காண்பித்து, "தலைவர் தலைமறைவுன்னு செய்தி  போட்டிருக்காங்க.....  ஆனா அவர் இங்க உங்க முன்னால உட்கார்ந்திருக்கார்....." என்று சொல்ல கூட்டம் அதைக் கேட்டு ஆர்ப்பரித்தது.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz