நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களைக் கொண்டு சித்தா, ஆயுர்வேதா இடங்களை நிரப்ப வழக்கு: நீதிமன்றம் நோட்டீஸ்!

Thursday 24, October 2019, 18:04:23

நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை சித்தா ஆயுர்வேதா படிப்புகளில் சேர்க்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஈரோட்டைச் சேர்ந்த நவீன் பாரதி என்பவர் தாக்கல் செய்த மனுவில், ”ஆயுர்வேத மருத்துவராக வேண்டுமென்பதே எனது லட்சியம். நடப்பாண்டு நடைபெற்ற நீட் தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்ணை நான் எடுக்கவில்லை. தமிழகத்தில் சித்தா ஆயுர்வேதா உள்ளிட்ட கல்லூரிகளில் மொத்தம் 394 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன. இதில் வெறும் 116 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 278 இடங்கள் மாணவர்கள் சேராததால் காலியாக உள்ளது.

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வு முடிவு அடிப்படையில்தான் கடந்த காலங்களில் சித்தா உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டு முதல் தான் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற விதி அமலுக்கு வந்தது. நீட் தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண் அதிகமாக இருந்ததால் என்னைப் போன்ற மாணவர்கள் இந்த படிப்புகளில் சேர முடியவில்லை.

நீட் தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட கட் ஆஃப் மதிப்பெண்ணை விடக் குறைந்த மதிப்பெண்களை எடுத்து உள்ள மாணவர்களைக் கொண்டு மருத்துவ படிப்பில் காலியிடங்களை நிரப்பலாம் என்று கர்நாடகா ராஜஸ்தான் உள்ளிட்ட உயர் நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.

எனவே, தமிழகத்திலும் நீட் தேர்வில் குறைவாக மதிப்பெண் பெற்ற மாணவர்களைச் சித்தா ஆயுர்வேதம் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்க்க மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இம் மனு தொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை வரும் 30ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz