திருச்சி: 149 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Monday 17, September 2018, 17:17:34

திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் இன்று காலை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், 149 பயனாளிகளுக்கு ரூ.11 இலட்சம் மதிப்பிலான முதலமைச்சரின் பொது நிவாரண நிதி மற்றும் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம், மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதி, நலிந்தோர் நலத்திட்ட உதவி, மாதாந்திர ஓய்வூதியம் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் கு.இராசாமணி வழங்கினார்.

முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து, மண்ணச்சநல்லூர் வட்டம், நரசிங்கமங்கலம் கிராமத்தை சேர்ந்த ச.கண்ணனூர் (மேற்கு)சகுந்தலா என்பவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்ததை அடுத்து அவரது கணவர் செந்தில்குமார் என்பவருக்கு ரூபாய் 3 இலட்சத்திற்கான காசோலையும், திருச்சி கிழக்கு, ஆழந்தூர் கிராமத்தை சேர்ந்த திருமதி.ரேவதி ஸ்டவ் வெடித்து உயிரிழந்ததை அடுத்து அவரின் கணவர் திரு.சரவணன் என்பவருக்கு ரூபாய் 50 ஆயிரத்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கு.இராசாமணி.இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா 22,500 மதிப்பிலான நவீன செயற்கை அவயமும், சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் திருச்சி(மேற்கு) வட்டத்தை சேர்ந்த 22 பயனாளிகளுக்கு மாற்றுத்திறனாளி, முதியோர், விதவை ஆகிய மாதாந்திர உதவித்தொகையாக தலா ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையினையும், ஸ்ரீரங்கம் வட்டத்தை சேர்ந்த 55 பயனாளிகளுக்கு பல்வேறு மாதாந்திர உதவித்தொகை தலா ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையினையும், திருவெறும்பூர் வட்டத்தை சேர்ந்த 30 பயனாளிகளுக்கு முதலமைச்சர் அவர்களின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்விஉதவித்தொகை, திருமணம், இயற்கை மரணம், ஆகிய உதவித்தொகை மொத்தம் ரூபாய் 2,01,500த்திற்கான ஆணையினையும், மணப்பாறை வட்டத்தை சேர்ந்த 17 பயனாளிகளுக்கு நலிந்தோர் நலத்திட்டத்தின் கீழ் தலா ரூபாய் 20 ஆயிரம் பெறுவதற்கான ஆணையினையும் மற்றும் 16 பயனாளிகளுக்கு பல்வேறு மாதாந்திர உதவித்தொகையாக தலா ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணப்பாறை வட்டம், சாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஆர்.ஜெயலெட்சுமி என்பவருக்கு கருணை அடிப்படையில் சத்துணவு மைய அமைப்பாளர் பணிநியமன ஆணையினை என மொத்தம் 149 பயனாளிகளுக்கு ரூபாய் 11 இலட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தா.சாந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் பழனிதேவி(பொது) (பொறுப்பு), பாஸ்கரன்(சத்துணவு), மாற்றுத்திறனாளி நல அலுவலர் இரவிச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் கிஷோர்குமார் (முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டம்) மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள், பொதுமக்களும் பங்கேற்றனர்.

© Copyright 2024 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz