தூத்துக்குடி கொடூரம்: கள்ளக்காதலியை கழுத்தறுத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட காதலன்!

Wednesday 20, November 2019, 18:49:00

தூத்துக்குடி அருகே கள்ளகாதலியை கத்தியால் குத்திய வாலிபர் தானும் கழுத்தை அறுத்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி தெற்குவீரபாண்டியபுரத்தை சேர்ந்த முருகனின் மனைவி பகவதி, அப் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். அதே நிறுவனத்தில் வேலை பார்த்து  வந்த திருநெல்வேலி துலுக்கர் குளத்தைச் சேர்ந்த ஊர்க்காவலன் மகன் ரமேஷ்பாபு என்பவருக்கும் பகவதிக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் முருகனுக்கு தெரிய வரவே அவர் தனது மனைவிபகவதியை அழைத்துக் கண்டித்துள்ளார். இதன் காரணமாக பகவதி வேலைக்கு செல்லாமல் ரமேஷ்பாபுவிடம் பேசாமல் தவிர்த்து வந்துள்ளார். இது ரமேஷ்பாபுவுக்கு கடுங்கோபத்தினை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை முருகன் வேலைக்கு சென்றுவிட அவரது மனைவி பகவதி தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது அவரது வீட்டுக்கு வந்த ரமேஷ்பாபு தன்னிடம் பேசாதது குறித்து பகவதியிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம்  முற்றவே கோபமடைந்த ரமேஷ்பாபு தான் கொண்டு வந்திருந்த கத்தியால் பகவதியின் கழுத்தை அறுத்துக் குத்தியும் உள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்த பகவதியின் அலறல் சத்தம் கேட்டு அப் பகுதியில் உள்ளவர்கள் திரண்டு வரவே, கையும் களவுமாகப் பிடிபட்ட அச்சத்தில் ரமேஷ்பாபு தனக்கு தானே கத்தியால் குத்தி தன் கழுத்தையும் அறுத்து கொண்டாராம்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் உடனே தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் ரமேஷ்பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பகவதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

இச் சம்பவம் குறித்து சிப்காட் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz