சேலம்: ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்...

Wednesday 20, November 2019, 19:12:24

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி பகுதியில் பள்ளி சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்த ஆறு வயது சிறுமியை ஐந்து பேர் கொண்ட கும்பல், மிட்டாய் தருவதாக கூறி அழைத்து சென்று, முட்புதரில் வைத்து பாலியல் பாலத்காரம் செய்த சம்பவம் அந்த கிராமத்தில் மட்டுமல்லாமல் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தொடர்பாக புகார் அளித்து ஆறு நாட்கள் ஆகியும் இது வரை சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் கைது செய்யப்பட வில்லை. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போஸ்கோ சட்டத்தின் கீழ் கூறப்பட்டு உள்ள விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வில்லை. குறிப்பாக பாலியல் தொல்லைக்கு உட்படுத்தபட்ட சிறுமியை பெண் காவலர்கள், சாதாரண சீருடையில் விசாரிக்க வேண்டும், விசாரிக்கும் போது, குழந்தையின் உறவினர்கள் பெற்றோர் உடன் இருக்க வேண்டும் என்ற விதிமுறைக்கு மாறாக, சேலம் அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்கப்பட்டு இருந்த போது ஆண் காவலர்கள் சீருடையில் வந்து விசாரணை நடத்தியதாகவும் குற்றசாட்டு உள்ளது.

இது போன்ற காவல்துறையினர் அலட்சிய போக்கை கண்டித்தும், சிறுமியை பாலியல் பாலத்காரம் செய்தவர்களை உடனடியாக கைது செய்திட வேண்டும் என்பதனை வலியுறுத்தியும், ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மற்றும் மாதர் சங்கக்தின் சார்பில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்திட கடந்த சில தினங்களுக்கு முன்பே அனுமதி கோரி இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம்  இரவு திடீர் என்று ஆர்பாட்டத்திற்கு காவல்துறையினர் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து காவல்துறையினரின் தடையும் மீறி, மாதர் சங்கத்தினர் மற்றும் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியர் அலுவலகம் அருகே ஓன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்தவர்களை கைது செய்தாதை கண்டித்து முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து காவல்துறையினர் குவிக்கப்பட்டு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்வதாக கூறினர்.

காவல்துறையினரின் நடவடிக்கையை கண்டித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீர் என்று மறியலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு, காவல்துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். மேலும் முதல்வரின் மாவட்டத்தில் பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுவதாகவும், ஜனநாயக ரீதியாக போராட்டத்தில் ஈடுபடவும் அனுமதி மறுக்கபடுவதாகவும் கூறி கோசங்கள் எழுப்பினர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் காவல்துறையினர் சமாதன பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

இது குறித்து போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும் போது, தமிழகத்தில் நாளுக்கு நாள் பெண்களின் குறிப்பாக பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பது கேள்வி குறியாக உள்ளது என்றும் குறிப்பாக முதல்வரின் சொந்த மாவட்டத்திலேயே சிறுமி பாலியல் தொல்லைக்கு உட்படுத்தப்பட்டு இருப்பது கண்டிக்க தக்கது என்றும், பாலியல் குற்ற சம்பவம் நடந்து ஆறு நாட்களுக்கு மேல் ஆகியும் இது வரை ஒருவரை கூட காவல்துறையினர் கைது செய்யாதது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளதாகவும் அவர்கள் கூறினார்.

இது குறித்து காவல்துரையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் தொடர் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் விசாரணையின் போது போஸ்கோ சட்ட விதிமுறைகளை பின்பற்றாத காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz