ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற திருச்சி ஆட்சியர் அறிவுறுத்தல்

Saturday 11, January 2020, 00:32:43

ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தை தொடங்கி வைத்து ஆட்சியர் சிவராசு பேசியதாவது:-

ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பாக அதன் அமைப்பாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும். பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் வீரர்கள் குறித்த விவரங்களை அதன் அமைப்பாளர்கள் முன்னரே தெரிவித்து முன் அனுமதி பெறவேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அரசின் விதிமுறைகளை முழுமையாக முதல் நாளே நிறைவு செய்யுமேயானால் ஜல்லிக்கட்டு நடத்திட மாவட்ட நிர்வாகத்தால் அனுமதி வழங்கப்படும்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்க உள்ள காளைகள் கால்நடை பராமரிப்பு துறை டாக்டர்களால் பரிசோதனை செய்யப்படவேண்டும். காளைகளுக்கு எந்தவிதமான ஊக்க மருந்துகளோ மற்றும் எரிச்சல் அளிக்க கூடிய பொருட்களோ உரிமையாளர்களால் பயன்படுத்தப்பட கூடாது. சாமியானா பந்தல் அல்லது கூரை அமைத்து காளைகளை வெயிலில் இருந்தும், மழையில் இருந்தும் பாதுகாக்கவேண்டும். ஜல்லிக்கட்டு நடைபெறும் தளம் முழுவதும் தேங்காய் நார்களை பரப்ப வேண்டும்.

ஜல்லிக்கட்டு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுமானங்களிலும் கூர் முனைகள் வெளியில் தெரியும் வண்ணம் இருக்க கூடாது. இதனை பொதுப்பணித்துறை அதிகாரிகள் உறுதி செய்யவேண்டும். ஜல்லிக்கட்டு போட்டியின்போது மாடுபிடி வீரர் களுக்கோ, பார்வையாளர் களுக்கோ ஏதும் காயம் ஏற்படின் உடனடியாக சிகிச்சை அளிக்க வசதியாக மருத்துவ குழுக்களை தயார் நிலையில் வைத்திருக்கவேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி சாந்தி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜியாவுல் ஹக், ஸ்ரீரங்கம் உதவி ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், கால்நடைத்துறை இணை இயக்குநர் எஸ்தர்ஷீலா உள்பட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz