இயற்கையை மாணவர்கள் பாதுகாக்க வேண்டும் - வெங்கய்யா நாயுடு வேண்டுகோள்!

Sunday 12, January 2020, 00:13:18

திருச்சியில் 2 நாள் சுற்றுப்பயணமாக இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு நேற்று திருச்சி வந்தார். இன்று காலை திருச்சி ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் 21-வது பட்டமளிப்பு விழாவில் கலந்துக்கொண்டு மாணவர்களுக்கு பட்டமளித்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது;

இங்கு உரை நிகழ்த்தவும், பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கவும் நான் உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
புனிதத் தன்மை நிரம்பிய ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்வாமிகளால் நிறுவப்பட்டு, அன்றைய இந்திய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மாவால் 1996-ல் தொடங்கப்பட்ட மதிப்புமிக்க இந்த நிறுவனம் கடந்த 23 ஆண்டுகளாக உயர்கல்வித் துறையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அது நிறுவப்பட்ட நாளில் இருந்தே ஸ்ரீமத் ஆண்டவன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி மலிவான, அதே நேரத்தில் மதிப்பு அடிப்படையிலான கல்வி மூலம் சமூகத்தின் தேவைகளை பெருமளவில் பூர்த்தி செய்யும் வகையில், செழிப்பான கல்வி கற்கும் கலாச்சாரத்தை உருவாக்க முயற்சித்து வந்துள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சியடைகிறேன்.

vengaiya

இந்தக் கல்லூரி “புத்தாக்கத்தையும் படைப்பாக்கத்தையும் வளர்த்தெடுத்து அவற்றுக்கு ஊக்கமளிப்பது” என்ற அதன் இலக்கு குறித்த அறிக்கையை மாணவர்களிடையே தொடர்ந்து நிலைத்து நிற்கச் செய்துள்ளது என்பது மிகவும் நம்பிக்கையூட்டுவதாக அமைகிறது. இலவச போக்குவரத்து வசதி மற்றும் இதர மாணவர்களுக்கு உதவும்படியான சேவைகளை கல்லூரி நிர்வாகம் வழங்கி வருவதையும் நான் மனமாரப் பாராட்டுகிறேன்.

சமூகத்தின் அடித்தட்டுப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்கள், கிராமப்புறப் பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் ஆகியோர் மத்தியில் கல்வியை பரப்புவதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளமைக்காகவும் ஸ்ரீமத் ஆண்டவன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியை நான் பாராட்டுகிறேன். பல்வேறு பாடதிட்டங்கள், இணை பாடதிட்டங்கள், பாடதிட்டங்களுக்கு அப்பாலுள்ள செயல்கள் ஆகியவற்றின் மூலம் உயர்கல்வியை வழங்குவதற்கான அதன் முன்முயற்சிகளும் பாராட்டிற்குரியனவாகும்.

கல்வி என்பதன் பொருள் விழிப்பு நிலை, அறிவை மேம்படுத்துவது, வலுப்படுவது, வேலை வாய்ப்பு என்பதே என்று உங்கள் அனைவருக்குமே நன்கு தெரிந்திருக்கும். தம்முன்னால் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் வகையில் போதுமான வாழ்க்கைத் திறன்களைக் கொண்டவர்களாக அது மாணவர்களை தயார்ப்படுத்த வேண்டியது அவசியம். நன்குணர்ந்த முடிவுகளை எடுக்கும் வகையில் அது மக்களுக்கு வலுவூட்ட வேண்டும். சமூகத்தின் நலனுக்காகப் பாடுபட வேண்டும்.

vengaiya1கல்வியானது நமது மாணவர்களின் முழுமையான ஆளுமையை மேம்படுத்த வேண்டியது அவசியம். சுவாமி விவேகானந்தர் ஒரு முறை கூறினார். “குணத்தை உருவாக்குகின்ற, மனவலிமையை அதிகரிக்கின்ற, அறிவுத்திறனை விரிவடையச் செய்கின்ற, அதன் மூலம் எவரொருவரும் தன் சொந்தக் காலிலேயே நிற்க முடிகின்ற கல்வியைத் தான் நாம் விழைகிறோம்.”

கல்வி என்பது நற்குணங்களை வளர்த்தெடுப்பதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும்; மாணவர்களிடையே அறநெறி உணர்வை, சமூக உணர்வை வளர்த்தெடுக்க வேண்டும். கருணை, இரக்கம் ஆகிய குணங்களை கொண்டு சமூகரீதியான பொறுப்புணர்வு மிக்கவர்களாக ஒவ்வொரு மாணவரும் மாற வேண்டும். இளம் வயதில் இருந்தே மாணவர்களை பொதுச் சேவைகளில் ஈடுபடுத்துவதில் நமது நிறுவனங்கள் முனைப்பாக இருக்க வேண்டும். என் சி சியில் சேருவதற்கு மாணவர்களுக்கு ஊக்கமளிக்கப்பட வேண்டும்.

அவர்களிடையே கூட்டு மனப்பாங்கை, தோழமை உணர்வை வளர்த்தெடுக்க என்.எஸ்.எஸ் நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடவும் ஊக்கப்படுத்த வேண்டும். இந்தியாவின் வரலாறு, கலாச்சாரம், பாரம்பரியம் ஆகியவற்றின் முக்கியத்தை உணர்ந்தவர்களாகவும் நமது மாணவர்கள் விளங்க வேண்டும். அதைப் போன்றே தோட்டவேலைகள், செடி நடுதல் போன்ற நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபட வேண்டும்.

நான் குடியரசு துணைத் தலைவரான பிறகு ஆடையை மாற்ற வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் நான் ஆடையை மாற்ற மறுத்து விட்டேன். நான் முகவரி மட்டுமே மாறியுள்ளேன். ஆடையை மாற்ற மாட்டேன் என்று கூறிவிட்டேன். நான் வெளிநாடுகளுக்கு சென்றாலும் எனது ஆடை பலரது கவனத்தையும் ஈர்க்கிறது.

ஒரு மனிதனின் தன்மையை ஆடை நிர்ணயம் செய்யாது. அவனது குணாதிசயமும், ஒழுக்கம், செயல்பாடும்தான் நிர்ணயம் செய்யும்.நம் நாட்டில் 35 வயது உடையோர் 65 சதவீதமும், 25 வயதுடைய 50 சதவீதமும் உள்ளனர். இது நமக்குக் கிடைத்த அரிய பெரிய பொக்கிஷம் ஆகும். அதனால் நாம் உடல் ரீதியாக திறன் உடையவராகவும், மனதளவில் எச்சரிக்கை உடையவராகவும் இருக்க வேண்டும். நம் இந்தியாவில் ஆயிரக்கணக்கான உணவு வகைகள் உள்ளன. அவற்றை பின்பற்றி உண்ண வேண்டும். நமது நாட்டின் கலாசாரம் என்பது நமது வாழ்க்கை முறையாகும். மதம் என்பது வழிபாடு மட்டுமே. நமது கலாசாரத்தை பின்பற்ற வேண்டும். இதுதான் நமது சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும்.

கடந்த சில தசாப்தங்களாக பூமி வெப்பமயமாதல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றின் மோசமான தாக்கத்தை நாம் அனுபவித்து வருகிறோம். மிக நீண்ட காலமாகவே இயற்கையை நாம் சேதப்படுத்தி வந்துள்ளோம். அதனால் விளைந்த இயற்கையின் கோபத்தையே நாம் இப்போது அனுபவித்து வருகிறோம்.

மிகச் சிறந்த எதிர்காலம் வேண்டுமெனில் நமது இயற்கையைப் பாதுகாக்க வேண்டும்; நமது கலாச்சாரத்தை போற்றிப் பராமரிக்க வேண்டும் என நான் எப்போதுமே இளைஞர்களுக்கு அறிவுரை தருவது வழக்கம். இயற்கையின் மடியில் மாணவர்கள் போதுமான நேரத்தை செலவழிக்க வேண்டும்.

ஒரு பட்டம் அல்லது பட்டமேற்படிப்பிற்கான சான்றிதழை பெறுவதோடு கல்வி என்பது முற்றுப் பெற்றுவிடாது. அது வாழ்நாள் முழுவதற்குமான ஒரு செயல்முறை. ஒவ்வொரு தனிநபரும் புதிய திறமைகளை, அறிவை, புதிய கருத்தோட்டங்களை சேகரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இன்னும் சொல்வதெனில், கல்விக்கு முற்றுப் புள்ளி என்பதே கிடையாது.

நான் முன்பே கூறியது போல கல்வி என்பது நமது குணங்களை வளர்த்தெடுப்பதாகவும், பொறுப்பானவர்களாகவும், சமூகத்தில் உற்பத்தியில் ஈடுபடுபவர்களாகவும் எந்தவொரு சவாலையும் சலனமின்றி எதிர்கொள்பவர்களாகவும் மாணவர்களை நாம் உருவாக்க வேண்டும்.
இந்த நேரத்தில் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மாணவர்களுக்கு யோகா பயிற்சியை வழங்க வேண்டுவதன் அவசியத்தை நான் வலியுறுத்த விரும்புகிறேன். நல்ல உடல்நலம் என்பது மிக வேகமான உலகத்தில் இன்று மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது.

நாட்டில் தொற்று அல்லாத நோய்கள் அதிகரித்து வருவதைத் தடுத்து நிறுத்துவதும் அவசியம் ஆகும். ஊட்டச் சத்து எதையுமே வழங்காத குப்பையான உணவை இளைஞர்கள் தவிர்க்க வேண்டும். நல்ல உணவுப் பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த நலனிலும் உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.

இந்தியா மிகப் பெரிய மக்கள் தொகையைக் கொண்டதாக இருக்கும் நிலையில் நாட்டில் உள்ள ஒவ்வொரு கல்லூரியுமே தனித்திறனை வளர்த்தெடுப்பதில் தனிக்கவனம் செலுத்த வேண்டியது அவசியம். கல்வி நிறுவனங்களில் இருந்து வெளியே வரும் மாணவர்கள், தொழில்நுட்பத்தையே பெரிதும் சார்ந்திருக்கும் இன்றைய 21வது நூற்றாண்டில் நிலவும் போட்டி நிறைந்த உலகத்தை எதிர்கொள்ளும் வகையில் வேலைக்குத் தகுதியானவர்களாக அல்லது தாங்களே தொழில்நடத்தும் திறமை மிக்கவர்களாக இருக்க வேண்டும்.

2022-ம் ஆண்டிற்குள் 40 கோடி பேருக்கு பல்வேறு தனித்திறன்களை கற்றுத் தரும் நோக்கத்துடன் ‘தனித்திறன் கொண்ட இந்தியாவிற்கான இயக்கம்’ ஒன்றையும் அரசு தொடங்கியுள்ளது. தொழில்துறையின் தேவைகளுக்கு உகந்த வகையில் மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்க பாடதிட்டம், கற்பித்தல் முறை ஆகியவற்றை மாற்றியமைக்க வேண்டிய அவசரத்தேவையும் உள்ளது.

உங்களைப் போன்ற நிறுவனங்கள் தனித்திறனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்துவதோடு, மாணவர்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது நேரடி அனுபவம் பெறும் வகையில் தொழில் நிறுவனங்களுடன் தொடர்புகளை உருவாக்கிக் கொள்வது அவசியமாகும். அதே நேரத்தில் தங்கள் சொந்தக் காலில் அவர்கள் நிற்க முடியும் வகையில் தொழில்நடத்துவதற்கான திறமையை அவர்களிடையே வளர்த்தெடுக்க வேண்டும்.

வேலை மற்றும் வேலைக்குத் தகுதியான திறமையைப் பெறும் வகையில் மொழி, பேச்சுத்திறன், வாழ்க்கைத் திறன், நேர்மறை எண்ணங்கள், ஆளுமை மேம்பாட்டுத் திறன், மேலாண்மைத் திறன், நன்னடத்தைக்கான திறன் ஆகியவற்றினை அடிப்படையாகக் கொண்டதாக குறிப்பிட்ட பிரிவினருக்கு உகந்த வகையில், தேவைக்கு ஏற்ற வகையில், திட்டங்கள் தொடங்கப்பட வேண்டும். ட்ரில்லியன் பொருளாதார நாடாக மாறும் தாகத்தோடு நாடு முன்னேறி வரும் நிலையில், நமது சுறுசுறுப்பான, புதுமைமிக்க, தொழில்திறன் மிக்க இளைஞர்கள் அந்த இலக்கை நாம் அடைவதில் மிக முக்கிய பங்கினை வகிப்பவர்களாக இருப்பார்கள்.

வறுமையை முற்றிலுமாக அழித்தொழிப்பது, உள்ளார்ந்த வளர்ச்சியை உறுதிப்படுத்துவது, விவசாயத்தை மேலும் நம்பகமானதாக, நடைமுறைக்கு ஒத்த ஒன்றாக, உரிய வருமானத்தை தருவதாக மாற்றுவது, நகர்ப்புற-கிராமப்புற இடைவெளியை நீக்குவது, பெண்களுக்கு வலுவூட்டுவது, கல்லாமைக்கு முடிவு கட்டுவது, மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது ஆகியவையே வளமான புதியதொரு இந்தியாவை உருவாக்க உதவி செய்வதாக அமையும். என்.ஏ.ஏ.சி.அமைப்பின் ‘ஏ’ தரச் சான்றிதழை பெற்றமைக்காக இந்த கல்லூரியின் நிர்வாகம், முதல்வர், ஆசிரியர்கள், மாணவர்கள் ஆகியோரை நான் பாராட்டுகிறேன்.

ஆண்டவன் ஆஸ்ரமத்தின் தேசிய நிர்வாகக் குழுவின் தலைவரான ஆர்.ராஜகோபால், இந்த கல்லூரி நிர்வாகத்தின் செயலாளரும் தாளாளருமான சிஏ.அம்மாங்கி வி பாலாஜி, எஸ்.ஆர்.பி.வி.டி.யின் தலைவர் என்.கோபாலஸ்வாமி, அறக்கட்டளையைச் சேர்ந்த எச்..தேவராஜ் மற்றும் இயக்குநர், முதல்வர், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் இங்கு கூடியிருக்கும் விருந்தினர்களுக்கும் எனது பாராட்டுதல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீமத் ஆண்டவன் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரி அதன் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டும் என மீண்டும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனைவருக்கும் எனது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்!
மேற்க்கண்டவாறு இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு பேசினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், கல்லூரி மாணவர்கள், அரசு அதிகாரிகள் என திரளானோர் பங்கேற்றனர்.

முன்னதாக நேற்று திருச்சி வந்த இந்திய குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடுவை மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு, அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் விமான நிலையத்தில் வரவேற்றனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz