"மக்கள் மனதில் தலைமைக்கான வெற்றிடம் உள்ளது" - திருச்சியில் கமல்

Saturday 11, January 2020, 23:57:52

மக்கள் நீதி மய்யம் கட்சியின் புதிய பொறுப்பாளர்களுக்கான கலந்துரையாடல் மற்றும் கிராமசபை விழிப்புணர்வு கருத்தரங்கம் திருச்சி சங்கம் ஓட்டலில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பிற்பகல் வந்தார்.

கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சியினருடன் கலந்துரையாடியபோது; நாம் நேர்மையாக இருப்போம் என்ற சூளுரையை ஏற்றுக்கொள்ளுங்கள். யாரும் தவறு செய்து விடாதீர்கள். அப்படி செய்யும் தவறுகள், அதற்கான தண்டனை என்பதைவிட பலனை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என திண்ணமாக நம்புபவன் நான்.

kamal
நீங்கள் நேர்மையாக செயல்படாவிட்டால், அதற்காக நான் கருணை இல்லாமல் சில சமயங்களில் செயல்பட வேண்டியதிருக்கும். அதையும் எதிர்பாருங்கள். காரணம், நான் ஏற்றிருக்கும் பாத்திரத்தை துலக்கும் வேலையும் எனக்கு உண்டு. கொஞ்சம் க‌‌ஷ்டமாகத்தான் இருக்கும். கொஞ்சம் அருவருப்பாகக்கூட இருக்கும். ஆனால், அதை செய்தே தீருவேன். பாத்திரம் சுத்தமாக இருப்பது அவசியம் என்றார்.

அதன் பின்னர் திருவெறும்பூர் கணேசா அருகே மக்கள் நீதி மய்யத்தின் மூன்றாவது தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து செய்தியாளர்களிடம் பேசும்போது; “மக்களை நோக்கி தலைமை செல்வதற்கான சூழல் தொடங்கியுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடாதது எங்கள் கட்சிக்கு பின்னடைவு இல்லை. திராவிட அரசியல் சரியான திசையில் செல்லவில்லை என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டிய அவசியமில்லை.

மக்கள் வாக்களிக்க எங்கள் கட்சி பணம் அளிக்காது, நேர்மையாக இருப்பது எல்லா காலத்திலும் சாத்தியம்தான். விரும்புவர்கள் பின்பற்றலாம். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தவில்லை” என்றார்.

பின்னர், செய்தியாளர்கள் அவரிடம் தர்பார் படத்தில் சசிகலா பற்றிய விமர்சனம் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு, “அது பராசக்தி காலத்திலிருந்தே தொடர்கிறது என்பதால், அதைப் பற்றி கூறுவதற்கு ஒன்றும் இல்லை” என்றார். ரஜினி தமிழ்நாட்டில் முதலீடு செய்யவேண்டும் என்று கூறி உள்ளீர்களே, அதற்கு என்ன அர்த்தம் என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ”உங்களிடம் சொல்லுவதைதான் அவரிடம் சொன்னேன். அவரை எங்களது கட்சியில் சேர சொல்லவில்லை. முயற்சியில் சேருங்கள் என்கிறேன். தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வேண்டும் என்றால், பணத்தை முதலீடு செய்வது என்று பொருள் அல்ல; நேர்மையையும் முதலீடு செய்யலாம். அதைத் தான் அவ்வாறு கூறினேன். அதற்கான முயற்சியில்தான் மக்கள் நீதி மய்யம் இறங்கியுள்ளது” என்றார்.

திமுக கூட்டணியில் சேருவது குறித்து குறித்த கேள்விக்குப் பதிலளித்த கமல், “2021ல் திராவிட கட்சிகளை தவிர்த்து பிற கட்சிகள் எங்களுடன் சேர்வதற்கு வாய்ப்புள்ளது. மக்கள் மனதில் தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. அதற்குத் தகுதியானவரை மக்கள் தேர்வுசெய்ய வேண்டும் என்பதே எங்களது நோக்கம்” என்றார்.
kisஇந்த நிகழ்ச்சிகளில் வழக்கறிஞர் கிஷோர்குமார், முருகானந்தம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக்கொண்டனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz