திமுகவினரின் வெற்றியைத் தடுக்க அதிமுக மறைமுக முயற்சி - கனிமொழி

Sunday 12, January 2020, 00:01:04

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 19 ஒன்றிய கவுன்சிலர்களுக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 6, திமுக கூட்டணி 9, சுயேச்சைகள் 4 என வெற்றி பெற்றன.

இந்நிலையில் இன்று தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான மறைமுகத் தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

காலையிலிருந்து அதிமுக, திமுக மற்றும் சுயேச்சைக் கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் காத்திருந்தனர். கூட்டுறவு சங்க துணை பதிவாளரும் தேர்தல் நடத்தும் அலுவலரான ஜெயசீலனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனால் தேர்தல் நடத்தும் அலுவலர் இல்லாத காரணத்தினால் தலைவர் தேர்தல் நடத்த முடியாது என்றும் துணைத் தலைவர் தேர்தலை நடத்த உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று தெரிவித்ததால் துணைத்தலைவர் தேர்தலும் ஒத்தி வைக்கப்பட்டது. முறையாக அறிவித்தால் மட்டுமே வெளியே செல்ல முடியும் என்று திமுகவினர் தெரிவித்தனர்.

இதையடுத்து அலுவலக நோட்டீஸ் போர்டில் தேர்தல் ஒத்திவைப்பு குறித்து அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுகவினர் போலீஸ் பாதுகாப்புடன் ஒரு வேனில் அழைத்துச் செல்லப்பட்டனர்.

kanimozhi

இதனிடையே தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, திமுக மாவட்டச் செயலாளரும் எம்எல்ஏவான கீதா ஜீவன் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் கனிமொழி எம்பி செய்தியாளர்களிடம் கூறுகையில்; திமுக வெற்றி பெறும் இடங்களில் திமுகவின் வெற்றியைத் தடுக்கும் வகையில் அதிமுகவினர் செயல்படுவதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

காலையிலிருந்து மாலை வரை தொடர்ச்சியாக கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. பிரச்சனை ஏற்படாமல் இருக்க டிஎஸ்பி ஜெபராஜ் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது மட்டுமின்றி, மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் ஆய்வு செய்தார். மேலும் பிரச்சினைகளை தவிர்க்க எட்டையாபுரம் சாலையில்மேலும் பிரச்சினைகளை தவிர்க்க எட்டையாபுரம் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது மட்டுமின்றி ஹெலிகேம் வைத்து கண்காணிப்பும் செய்யப்பட்டது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz