வரலாற்றுச் சிறப்பு மிக்க தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம்! - 2

Wednesday 19, September 2018, 10:16:22

சிறப்புக் கட்டுரை - இறுதிப் பகுதி

கட்டுரை ஆக்கம்: பெ.சிவசுப்ரமணியம்

 

-2-

1310-ம், ஆண்டு டெல்லியை ஆண்டுவந்த மாலிக்கபூர், தமிழகத்தை நோக்கி படையெடுத்து வந்தபோது, முதலில் தாக்குதலுக்கு உள்ளான இடம் தான் தாரமங்கலம் கைலாசநாதர் ஆலயம். அதன் பின்னர், சிதம்பரம், மதுரை, ஆழகர்கோயில் என்று பல கோவில்களுக்குப் படையெடுத்துச் சென்று  அங்கிருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டு தாரமங்கலம் வழியாகத்தான் மீண்டும் தன்னுடைய நாட்டுக்குத் திரும்பிச் சென்றான்.

அப்போது, காடுகளில் மறைந்திருந்த கட்டிமுதலியின் வீரர்கள், மாலிக்கபூர் ஒட்டகங்களின் மீது வைத்து  எடுத்துச் சென்ற பொன், பொருளை எல்லாம் பிடுங்கிக் கொண்டு போய் ஆத்தூரில் உள்ள கோட்டையைக் கட்டினார் என்றும் சொல்லப்படுகிறது. அந்த வரலாற்றை இந்த ஆலயத்தில் உள் பிரகார சுவர்களில் உள்ள கல்லில் பதிவு செய்து வைத்துள்ளனர்.

வளைந்த வாளுடனும், நீண்ட தாடி, தலைப்பாகையுடனும் படை எடுத்துவரும் மாலிக்கபூரின் வீரர்கள், அதை எதிர்த்து குறுவாள், கேடயத்துடன் எதிர்கொள்ளும் தமிழக மன்னர்களின் போர்க் காட்சிகள் பல இங்குச் செதுக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மீனாட்சியம்மனுக்கு கரும்பைக் கொடுத்து மாலிக்கபூர் பரிகாசம் செய்த காட்சி, சோழ, பாண்டிய நாடுகளில் இருந்த செல்வங்களை எல்லாம் கொள்ளையிட்ட பின்னர் அவற்றைத் தன்னுடன் வந்திருந்த யானை மற்றும் ஒட்டகங்களின் மீது பொதி மூட்டையாய் ஏற்றிக் கொண்டு திரும்பிச் செல்லும் காட்சியும் சித்திரங்களாக உள்ளது.

தன்னுடைய தாய் நாட்டுக்குத் திரும்பிச் செல்லும் மாலிக்கபூரை இப் பகுதியில் வழிமறித்துத் தாக்குதல் நடத்த கட்டிமுதலியின் வீரர்கள் போர் வியூகம் அமைத்துள்ள காட்சியும், பின்னர், மதுரையில் கொள்ளையடித்த செல்வங்களை எல்லாம் யானை மற்றும் ஒட்டகங்களின் மீது ஏற்றிக் கொண்டு வந்த மாலிக்கபூரின் வீரர்கள் மீது தாக்குல் நடத்தி, அவர்கள் கொண்டு வந்த செல்வங்களை எல்லாம் கட்டிமுதலியின் வீரர்கள் பறித்துக் கொண்ட பிறகு, முதுகில் சுமையில்லாமல் யானை ஒன்று மாலிக்கபூரோடு செல்லுவது போன்ற ஒரு காட்சியும் மிகவும் அழகிய வேலைப்பாட்டோடு இந்த ஆலயத்தின் கற்சுவரில் செதுக்கப்பட்டுள்ளது.

அந்தச் செல்வங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்தைக் காட்டும் வகையில் சில குறிப்புகளை இந்தச் சித்திரங்களில் காட்டியுள்ளனர். இதில் பல வரலாற்று உண்மைகளும் இருக்கின்றன. அவினாசியப்பர் ஆலயத்தின் அருகில், ஒன்பதே கற்களால் செய்யப்பட்ட சிறியதொரு கற்கோயில் உள்ளது.

ஆலயத் திருப்பணியின்போது கல்லில் சிற்பவேலை செய்யும் சிற்பிகளுக்கும், சுண்ணாம்பு சுதையில் கோபுரங்கள் அமைக்கும் சிற்பிகளுக்கும் ஏற்பட்ட போட்டியின் விளைவாக உங்களின் துணையில்லாமலே கல்லில் கோபுரம் அமைக்க முடியும் என்று கூறி கற்சிற்பிகள் அமைத்த ஒரு சிறிய கற்கோயில் இங்கு உள்ளது.

வியப்படைய வைக்கும் வேலைப்பாடுகளைக கொண்டுள்ள இந்த கற்கோயில் தற்காலத்தில் “சித்தி வினாயகர்” கோயில் என்று அழைக்கப்படுகிறது. கைலாசநாதரின் பிரகாரத்துக்குள், நுழையும் வாயிலின் முன்புறம் திண்ணை போல அமைக்கப்பட்டுள்ள மண்டபத்தில், மேல் தளத்தை  13 கற்களைக் கொண்டு அமைத்துள்ளனர்.

அதில் குரங்கு, அணில் போன்ற விலங்குகள் விளையாடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மேற்கு பார்த்தபடி ஒரே கல்லிலான 13 அடி உயரத்தில் ஆறு கற்றூண்களில் குதிரையின் மீது அமர்ந்து வேட்டைக்குச் செல்லும் ஒரு வீரன் புலியை குத்தி கொல்லும் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

இதில், புலித்தலையில் ஏறியிருக்கும் வீரனின் கையில் பிடித்திருக்கும் வேல் புலித்தலையின் மறுபக்கம் வெளியே வரும் காட்சியை அழகாகச் செதுக்கியுள்ளனர். ஒவ்வொரு தூணிலும் உள்ள சிற்பங்களில், குதிரை மீது அமர்ந்துள்ள வீரன் மற்றும் குதிரையின் தோற்றம் வலது புறம் ஒரு முக அமைப்பிலும், இடதுபுறம் ஒரு வேறு முக அமைப்பிலும் இருக்கும் வகையில் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

சிலையில் உள்ள குதிரையின் திறந்திருக்கும் வாயில் உள்ள பற்களுக்கு உள்ளே ஒரு கற்பந்தை (கல்லில் செய்யப்பட்ட பந்து) வைத்துள்ளனர். அந்த பந்தை நம் விரலால் தள்ளி உருட்டி விளையாடும் வகையில் அமைத்துள்ளனர்.

இதே மண்டபத்தின் வடக்கு ஓரத்தில், எறும்புகள் நுழைந்து வரும் அளவுக்கு மட்டுமே துவாரம் உள்ள ஒரு மனிதனின் முகம் அமைக்கப்பட்டுள்ளது. ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் அந்த சிற்பத்தின் காது வழியாக உள்ளே சென்று பின்னர் மூக்கு வழியாக வெளியே வரலாம். பிறகு தாடியில் உள்ள துவாரங்கள் வழியே உள்ளே நுழைந்து மறுபக்கம் சென்று மற்றொரு காது வழியாக வெளியே செல்லும் வகையில் நுண்ணியதான துவாரங்களைக் கொண்டதாகக் கல்லில் சிலை செதுக்கியுள்ளனர்.

மண்டபத்தைச் சுற்றிலும் கண்ணகியின் கால் சிலம்பைப் போன்ற சிலம்புகளை கொண்டு அடுக்கப்பட்ட சங்கிலித்தொடர் அலங்கார வேலைப்பாடுகளைச் செய்துள்ளார்கள், ஒவ்வொரு சிலம்புக்கு இடையிலும் சிறிய துவாரங்கள் கொடுத்து சிலை வடித்துள்ளார்கள்.

கோயில் மண்டபத்தில் நுழையும் இரண்டாவது கதவும் “வேங்கை” மரத்தில் செய்யப்பட்டுள்ளது, உள்ளே இடது பக்கத்தில் ரிஷிபத்தினி சிலை வடிக்கப்பட்டுள்ளது. பெண்ணுக்கு பெரியது மானமா..? தர்மமா..? என்பதை தெரிந்து கொள்வதற்காக இறைவன் மாறு வேடத்தில் வந்து ஒரு குடியானப் பெண்ணிடம் “பிச்சை” கேட்கிறார்.

கேட்டவருக்கு “இல்லை” என்று சொல்லாத “தமிழ்க்குடியில்” பிறந்த அந்தப்பெண், அகப்பையில் அன்னத்தை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு வெளியே வரும்போது, காற்று வேகமாக வீசியதால் அந்த பெண்ணின் மார்புச் சேலை விலகி விடுகிறது.

தானத்தைவிட “மானமே” பெரிதெனக் கருதிய அந்தப்பெண், தன்னுடைய இடக்கையால் மார்புச் சேலையை இழுத்து மூடுகிறார், அப்போது பறந்து வந்த ஒரு கிளி, பெண்ணின் வலது கையிலிருக்கும் அகப்பை சாதத்தை எச்சம் செய்து விடுகிறது.

அந்த பெண் இறைவனுக்கு உணவு எடுத்துக் கொண்டு செல்லும் காட்சி மிகுந்த முக மலர்ச்சியோடும், கிளி சாப்பிட்டு எச்சமாகி விட்டதால், அந்த பெண் கோபத்தில் இருக்கும் முகம் வடியுள்ள காட்சியும் இரண்டு சிலைகளில் மிக மிக அழகாக வடித்துள்ளனர்.

இடதுபக்க மூலையில், நாட்டின் செல்வமான பொன், பொருளை பாதுகாத்து வைப்பதற்காக ஒரு பாதாள அறை அமைக்கப்பட்டுள்ளது, இதில், இப்போது ஒரு சிறிய லிங்கம் வைக்கப்பட்டு வழிபாடு நடந்து வருகிறது. இந்தப் பாதாள லிங்கத்தை பக்தர்கள் உள்ளே சென்று தரிசனம் செய்யவும் வழி செய்யப்பட்டுள்ளது.

கோயிலின் மைய மண்டபத்தில் இருக்கும் ஒவ்வொரு தூண்களும், ஒரே கல்லில். செய்யப்பட்டவை. முன்னால் இரண்டு சிறிய தூண்களும், பின்னால், ஒரு பெரிய தூணும் இருக்கும் வகையில் பொருத்தப்பட்ட இருபத்தி மூன்று தூண்கள் இந்த மண்டபத்தில் உள்ளது.

இந்தத் தூண்களில், காணக் கிடைக்காத வேலைப்பாடுகளுடன் கணக்கிட முடியாத  எண்ணிக்கையில் சிற்ப வேலைப்பாடுகளைக் காணமுடிகிறது. சிவனின் பல தோற்றங்களும், பிரம்மாவின் அவதாரங்களும் கல்லில் சிலையாக வடிக்கப்பட்டுள்ளன.

இரதி, மன்மதன் சிலையும், இராமர் அம்பு விடும் காட்சியும் மிகவும் நுணுக்கமான வேலைப்பாடு மற்றும் உத்தியுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, இராமன் அம்புடன் பதுங்கியிருக்கும் இடத்திலிருந்து பார்த்தால், வாலியும், சுக்ரீவனும் இருப்பது தெளிவாகத் தெரியும், ஆனால், வாலி இருக்குமிடத்திலிருந்து பார்த்தால், இராமன் பதுங்கியிருப்பது தெரியாது.

அதுபோலவே,  இரதியை, மன்மதன் மறைந்திருந்து பார்க்கும் காட்சியும் அமைந்துள்ளது. அன்னப் பறவையின் மீது அமர்ந்திருக்கும் இரதி இருக்கும் இடத்திலிருந்து மன்மதனைக் காணமுடியாது. ஆனால், கிளியின் மீது அமர்ந்திருக்கும் மன்மதன் பார்த்தால், இரதியை தெளிவாகக் காணும் வகையில் இந்தச் சிற்பங்களை அமைந்துள்ளன.

இதுதவிர இன்னும் பல வரலாற்று செய்திகளையும் இந்தக் கற்சுவர்களில் செதுக்கியுள்ளார்கள். வரலாற்று ஆய்வாளர்கள் பார்த்தால் மட்டுமே அதன் பொருளைப் புரிந்து கொள்ள முடியும்.

ஆற்றிலிருக்கும் மணலைச் சிவலிங்கமாக பிடித்து வைத்து பார்வதி தேவி வழிபாடு செய்து கொண்டிருக்கும் காட்சி, சாப விதிப்படி ஐந்து தலையுடன் இருக்கும் பிரம்மாவின் தலையை சிவபெருமான் ஒரு தலையைக் கிள்ளி எடுத்த பிறகு நான்கு முகங்களுடன் இருக்கும் காட்சியும் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

முதலில் ஐந்து தலையுடன் இருக்கும் பிரம்மா அடுத்த சிற்பத்தில் நான்முகனாக காட்சி கொடுக்கிறார். மகா மண்டபத்தில் மூலவராக இருக்கும் கைலாசநாதரின் சன்னதிக்கு முன்புறம் சிவனுக்கும், பார்வதிக்கும் நடந்த திருமணக் காட்சி செதுக்கப்பட்டுள்ளது.

பிரம்மா, பார்வதியை சிவனுக்கு கரம்பிடித்து கொடுக்கும் காட்சி மூலவர் சன்னதியின் மேலே சிறப்பான சிற்பமாகச் செதுக்கப்பாட்டுள்ளது. மூலவருக்கு முன்புறம், இருபதடி உயரத்தில் உள்ள மண்டப மேற்க்கூறையில், பத்து அடி நீளமும் அகலமும் கொண்ட ஒரே கல்லில், விரிந்த எட்டு தாமரை இதழ்கள் காணப்படுகிறது.

ஒவ்வொரு தாமரை இதழின் மீதும் தன் வாளால் ஒட்டிப் பிடித்தபடி ஒரு கிளி  தொங்கிக்கொண்டு தாமரை பூவின் நடு தண்டின் மீது போட்டிருக்கும் ஒரு கல்வளையத்தை தன் அலகால் பிடித்துக்கொண்டிருக்கும் வண்ணம் செதுக்கப்பட்டுள்ளது.

அந்த கல் வளையத்துக்கு கீழே இன்னொரு கல் வளையம் போட்டுள்ளனர், அந்த  இரண்டாவது கல் வளையத்தை நீலமான கம்பு கொண்டு சுற்றி விட்டுப் பார்க்க முடியும். இந்த தாமரை இதழைச் சுற்றிலும் எட்டுத் திசைகளிருந்தும் வரும் துவார பாலகர்கள் தங்களின் வாகனங்கள் மீது அமர்ந்திருக்கும் காட்சியும், அவர்களுக்கு அருகில் பணிப் பெண்கள் நிற்கும் காட்சியும் செதுக்கப்பட்டுள்ளது.

இவற்றின் நடுவே எட்டு கற்சங்கிலிகள் தொங்கவிடப்பட்டுள்ளது. கற்பனைக்கும் எட்டாத இந்தக் காட்சியைப் பார்த்து பிரமிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. தற்போது இந்து அறநிலையத் துறையின் கட்டுபாட்டில் உள்ள இந்தக் கோயிலின் சிற்பங்கள் எல்லாம் போதிய பராமரிப்பும், பாதுகாப்பும் இல்லாமல் ஒவ்வொன்றாக சிதைந்து, அழிந்து கொண்டிருக்கிறது.

மண்டபத்தின் பின்பக்கம் உள்ள தூண்களில் “யாழி” மற்றும் “குதிரை”களில் பயனம் செய்யும் வீரர்களின் காட்சிகள் சிற்பமாகச் செதுக்கப்பட்டுள்ளது. இதில், முதல் “யாழி”யின் திறந்த வாய் பற்களுக்கு இடையே இருக்கும் கல் செதுக்கி வெளியே எடுக்கப்பட்டு வெற்றிடமாக உள்ளது.

இரண்டாவது “யாழி”யின் வாயில் பற்களுக்கு இடையே உள்ள வெற்றிடத்தில் இருந்த கல்லை ஒரு பந்து போல செதுக்கியுள்ளனர். யாளியின் பற்களுக்கு இடையில் விரலை விட்டு அந்த பந்தைத் தொட்டுப் பார்க்கலாம். ஆனால், அந்த பந்தின் பின் பகுதி யாளியின் உள்வாயில் ஒட்டிக்கொண்டுள்ளவாறு சிற்பம் வடித்துள்ளனர்.

மூன்றாவது “யாழி”யின் வாயில் உள்ளே இருக்கும் கல்லை ஒரு பந்து  போன்ற வடிவில் செதுக்கி யாளியின் பற்களுக்கிடையில் வாயிற்குள்ளேயே உருண்டோடும் படிச் செய்துள்ளார்கள், நான்காவது குதிரையின் வாயில் இருந்த கற்களை இரண்டு பந்துகளாகவும், ஐந்தாவது குதிரையின் வாயிக்குள் மூன்று கற்பந்துகள் இருக்கும் வண்ணம் நேர்த்தியாகச் செய்துள்ளார்கள்.

இன்றைய நவீனத் தொழில் நுட்பம் மிகுந்த நேரத்தில் கூட கல்லில் இது போன்ற ஒரு வேலைப்பாட்டைச் செய்ய முடியுமா...? என்று எண்ணிப் பார்க்க முடியாத வகையில் இந்தக் கோயிலின் வேலைப்பாடுகள் பிரமிக்க வைக்கும்படியாக உள்ளது.

இது மேற்கு பார்த்த இந்த சிவன் கோயிலில், உள்ள இன்னொரு சிறப்பு, மாசி மாதம்-9,10,11 ஆகிய மூன்று தேதிகளில் சூரியக்கதிர் லிங்கத்தின் மீது நேரடியாகப்படும் வகையில் வடிவமைத்துள்ளனர். இந்த மூன்று நாட்களிலும், மாலை ஆறரை  மணிக்கு, கிழக்கு நோக்கி வரும் சூரியக் கதிர் இராஜகோபுரத்தின் வழியாக வந்து  கொடி மரத்தில் பட்டு பிறகு ஒரு பகுதி சூரியக் கதிர் நந்தியின் கொம்பு வழியே கிழக்கு நோக்கிச் சென்று சிவலிங்கத்தின் மீது மூன்றாம் பிறை வடிவில் விழுகிறது.

இந்த மூன்று நாளிலும் இதைக் காண்பதற்கு ஏராளமான பகதர்கள் இந்த ஆலயத்தில் கூடுவார்கள். மூலவரின் எதிரில், வலப்பக்கம் சிவகாமி அம்மையாரும், இடப்பக்கம் சுப்பிரமணியரும் காட்சி கொடுக்கிறார்கள். இந்த மூவரையும் ஒரே இடத்திலிருந்து தரிசிக்கும் வகையில், முன்பக்கம் ஒரு இடத்தில் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ளது. கோயிலின் உட்பிரகாரத்தில், தெற்கு பார்த்த நிலையில் ஜுரகரேஸ்வரர் இத் தலத்தில் எழுந்தருளியிருக்கிறார்.

இவர் 3 தலை, 3 கால்களோடு இருப்பது சிறப்பு. இவருக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் விபூதி கொண்டு அர்ச்சனை செய்து அதை தினமும் நெற்றியில் இட்டு வந்தால் தீராத காய்ச்சலும், உடல் உபாதைகளும் தீர்ந்துவிடும் என்கிறார்கள்.

தவிர மிளகு ரசம் வைத்து சாதம் படைத்து வடை மாலை சாத்தி அபிஷேகம் செய்தால் காய்ச்சல் மற்றும் தீராத வியாதிகள் குணமடைகின்றன என்று நம்பப்படுகிறது.

இத் தலத்திலேயே வெகு சிறப்பான சன்னதி பாதாள லிங்கம் சன்னதியாகும், மகா மண்டபத்தின் வடமேற்கு மூலையில், தலத்தின் கீழ்ப்பகுதியில் காற்று புக முடியாத ஒரு அறைக்குள் இருக்கும் இந்தப் பாதாள லிங்கத்திற்குப் பச்சைக் கற்பூரம் வைத்து செவ்வாய்க்கிழமை தோறும் அபிஷேகம் செய்தால் கல்யாண பாக்கியம், புத்திர பாக்கியம் மற்றும் தொழில் விருத்தி ஆகியவை கை கூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோயிலை, முதலில் கட்டத் தொடங்கியவர் மும்முடி கட்டிமுதலி என்பவராவார். அவருக்குப் பிறகு, சீயாள முதலியும், அவருக்குப் பிறகு வணங்காமுடி கட்டிமுதலி என்பவர் இறுதியாகக் கோயிலை கட்டி முடித்தார் என்று அறிய முடிகிறது.

அதற்குச் சான்றாக மைய மண்டபத்திம் முன்பாக மூன்று பிள்ளையார் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்படுகிறது, இந்த மூன்று சிலைகளும் மூன்று மன்னர்களின்  தலைமுறைகளைக் குறிக்கிறது.

இந்தக் கோயிலுக்கு உரித்தானதாக இரண்டு தெப்பக் குளங்கள் உள்ளன. பேருந்து நிலையம் அருகில் 180 அடி நீளமுள்ள சுற்றுச் சுவர்களைக் கொண்ட ஒரு குளம் அமைந்துள்ளது. இந்தக் கற்சுவர்களின் மீது 36-நந்திகள் வெளிப்பக்கத்தை பார்த்தபடி அமர்ந்திருக்கும் வண்ணம் அமைந்துள்ளது.

மற்றொரு குளம் பத்திரகாளியம்மன் கோயில் எதிரில் உள்ளது. இந்தக் குளம் வட்ட வடிவில் இருக்கும், உள்ளே இருக்கும் படிக்கட்டுகள் எண்கோண வடிவில் இருக்கும். ஆனால், கீழே குளம் சதுரமாக இருக்கும்.

இந்தக் குளத்தின் படிக்கட்டு கற்கள் மீது ஒரு கல்லை எடுத்து வீசினால், அந்தக் கல் உருண்டோடி வீசிய இடத்துக்கே திரும்ப வந்துவிடும் அந்த வகையில் இந்தக் குளத்தின் படிக்கட்டுகளை அமைத்துள்ளனர். இதற்கு “எட்டு வட்டக் கிணறு” என்று பெயர்.

இவ்வளவு சிறப்பு மிக்க கைலாசனாதர் திருக்கோயில் தாரமங்கலம் பேருந்து நிலையத்தின் எதிரில் அமைந்துள்ளது. இக் கோயிலைச் சுற்றிப்பார்க்கவும், வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக் கூறவும் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் விபரம் தெரிந்த சுற்றுலா வழிகாட்டிகளை ஏற்பாடு செய்து கொடுக்கிறார்கள்.

பக்தர்களுக்குத் தேவையான தலவரலாறு நூல்களும், சிறப்புப் பூஜை, அன்னதானம் போன்ற காரியகளுக்கும் கோயில் செயல் அலுவலரை நேரில் அணுகலாம். கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் அன்னதானம் வழங்கப்படுகிறது.

உங்கள் பெயரில் அன்னதானம் வழங்க விரும்பினால், அலுவலகத்தில் 500 ரூபாய் பணம் செலுத்தி விட்டால் நீங்கள் விரும்பும் நாளில், உங்கள் பெயரில் பக்தர்களுக்கு கோயில் நிர்வாக அலுவலர்கள் அன்னதானம் வழங்குகிறார்கள்.

காலை,7.00 மணி முதல் நண்பகல் 12.30 வரையும், மாலை 04.00 மணி முதல் இரவு 8.30 மணிவரை கோயில் நடை திறந்திருக்கும். முக்கியச் சிறப்பு தினங்களில் முழு நேரமும் நடை திந்திருக்கும்.

கோவிலின் முக்கியத் திருவிழா நாட்கள்: தைபூசத்தன்று தேரோட்டம் இருக்கும், தவிர நவராத்திரி, சூரசம்காரம், திருவாதிரை, திருக்கார்த்திகை மற்றும் பிரதோஷ நாட்களில் சிறப்பு வழிபாடுகள் இருக்கும்.

தமிழகத்தின் எல்லா ஊர்களிலிருந்தும், சேலத்துக்கு இரவு பகல் என தொடர்ந்து பேருந்துகள் மற்றும் இரயில் போக்குவரத்து வசதி உள்ளது. சேலம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்தும், இரயில் நிலையத்திலிருந்தும், பத்து நிமிடங்களுக்கு ஒரு நகரப் பேருந்து வீதம் தாரமங்கலத்துக்கு இயக்கப்படுகிறது இது தவிர, ஜலகண்டாபுரம், நங்கவள்ளி வழியாக மேட்டூர் செல்லும் தனியார் பேருந்துகளும் தாரமங்கலம் வழியாகவே செல்லுகிறது.

கார் மற்றும் வாகனங்களில் செல்லுவோர் சேலம் இரும்பாலை வழியாகவும், ஒமலூர் வழியாகவும் தாரமங்கலம் செல்லலாம். தாரமங்கலத்திலிருந்து மேற்கே 32, கி.மீ தொலைவில் மேட்டூர் “ஸ்டேன்லி” நீர்த்தேக்கமும், பூங்காவும் புகழ் பெற்ற முனியப்பன் கோயிலும் உள்ளது.

தெற்கே 30, கி.மீ தொலைவில் தீரன் சின்னமலை ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போர் புரிந்த சங்ககிரி மலைக்கோட்டை அமைந்துள்ளது. கிழக்கே 50, கி.மீ தொலைவில் மலைகளின் இளவரசி என்று போற்றப்படும் ஏற்காடு அமைந்துள்ளது.

தாரமங்கலத்தில் உள்ள கைலாசநாதர் கோவிலில் உள்ள “ஆண்டவன்” சிவபெருமானின், சாகசங்களை விடவும், அந்த நாட்டை “ஆண்டவன்” கட்டிமுதலி வம்சத்தினரின் சிற்ப சாதனைகள் நம் நெஞ்சை விட்டு நீங்காதவை.

(நிறைவுற்றது)

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz