கொரோனா நோயின் வீரியம் தெரிந்தும் விதிமுறைகளை சிலர் கடைபிடிப்பதில்லை - அமைச்சர் கவலை!

Wednesday 25, March 2020, 22:02:46

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்திருக்கிறது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் சமூகத் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருவதாகத் தெரிவித்துள்ள சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், இந்நோயின் வீரியம் தெரிந்தும் அரசின் விதிமுறைகளை சிலர் கடைப்பிடிப்பதில்லை என்று கவலை தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் இந்தியா பெரும் பாதிப்பைச் சந்தித்து வருகிறது. மகாராஷ்டிரா, டெல்லி, கேரளா, கர்நாடகா என இதுவரை இந்த வைரஸ் தொற்றால் இந்தியா முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் 536 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருப்பூர், ஈரோடு, காஞ்சிபுரம் என பல மாவட்டங்களுக்கு பரவியுள்ளது கொரோனா. இந்த வைரசால் தமிழகத்தில் 15 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 12 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் புதிதாக 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார். நியூசிலாந்தில் இருந்து திரும்பிய 65 வயதான நபர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், 55 வயதான பெண் ஒருவர் கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், லண்டனிலிருந்து வந்த 25 வயது இளைஞர் ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் அமைச்சர் விஜயபாஸ்கர்.

இதனிடையே நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ”கட்டுப்பாடற்ற நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம், நோய் எதிர்ப்புச் சக்தி இல்லாதவர்கள், வயதானோர் ஆகியோரை எளிதில் இந்த நோய் தாக்கக்கூடும். இந்த வைரஸ் தாக்குதல் குறித்தும், அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் இவ்வளவு தூரம் அறிவுறுத்தியும் அதற்கான ஒரு சீரியஸ்னஸ் இல்லாமல் இருப்பது எனக்கு ஆதங்கமாக இருக்கிறது” என்று கவலை தெரிவித்துள்ளார். மேலும் அவர், “அரசு , மருத்துவர்கள் சொல்லும் முன்னெச்சரிக்கைகளை கடைப்பிடித்து பொது மக்கள் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz