திருச்சி: பேருந்து நிலையத்தில் கிருமிநாசினி தெளிக்கும் பணி - ஆட்சியர் ஆய்வு!

Wednesday 25, March 2020, 22:32:14

திருச்சி மத்திய பேருந்து நிலையம் பகுதியில் கிருமிநாசினி தெளிக்கும் பணியினை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மற்றும் மாநகராட்சி ஆணையர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் இன்று காலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது ஆட்சியர் சு.சிவராசு செய்தியாளர்களிடம் பேசுைகையில், 

திருச்சி மத்திய பேருந்து நிலையம், சத்திரம் பேருந்து நிலையம், அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கிருமிநாசினி முழு அளவில் தெளிக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று காலை மக்கள் அதிக அளவில் காய்கறி வாங்குவதற்காக கூடிவிட்டனர். பின்னர் காவல் துறையினர் மூலம் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

அதனால் திருச்சி காந்தி மார்க்கெட்டில் கடைக்காரர்கள் மட்டுமே வந்து காய்கறி வாங்கி செல்ல வேண்டும். மக்கள் வரக்கூடாது. அதே போல் இன்று காலை திறக்கப்பட்ட டீக்கடைகளில் அதிக அளவில் கூட்டம் கூடியது. இதைத் தொடர்ந்து காவல் துறை மூலம் 7 கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

மளிகைக் கடைகள், காய்கறி கடைகள், டீக்கடைகள், பால் கடைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்து இருக்கும். ஆனால் மக்கள் அதிக அளவில் கூட கூடாது. அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். அதனால் மக்கள் பதற்றமின்றி அதை வாங்கி வைக்க வேண்டுமென்று தீவிரம் காட்டக்கூடாது. குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க கூட வெளியில் வரக்கூடாது.

அவர்களுக்கு நோய்த்தொற்று எளிதில் ஏற்படும். இந்த நோயை கண்டு அச்சப்பட வேண்டிய தேவையில்லை.  வீட்டிற்குள் இருந்தால் இந்த நோய் வராது. திருச்சி அரசு மருத்துவமனையில் 11 பேர் சளி, காய்ச்சல், இருமல் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டிருந்தனர். இதில் 6 பேருக்கு ரத்த பரிசோதனை முடிவு வந்துவிட்டது. அதில் கோரோனா இல்லை. மீதமுள்ள ஐந்து பேரும் சாதாரண சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது கோரோனாவுக்கான ரத்த பரிசோதனை திருச்சி அரசு மருத்துவமனையிலேயே நடைபெறுகிறது.

அதனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு வெளிநாடுகள் சென்று வந்தவர்களிடம் பொதுமக்கள் யாரேனும் நெருங்கி பழகியிருந்தால் உடனடியாக 1077 என்ற உதவி எண்ணைத் தொடர்பு கொண்டு ஆலோசனைகள் பெறலாம். அவர்கள் எந்த மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். என்ன பரிசோதனை செய்ய வேண்டும் என்று அறிவுரை வழங்குவார்கள். 

மருத்துவ பணியாளர்கள் மருத்துவமனைக்கு வந்து விட்டு மீண்டும் வீடு திரும்புவதுக்கு வாகன வசதிகள் இல்லை என்ற புகார் எழுந்தது. இதுதொடர்பாக அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் எங்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு மூன்று பிரத்தியேக அரசு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz