ஊழலில் தமிழகம் இந்தியாவுக்கே  முன்னுதாரணம் - வேல்முருகன் பேட்டி

Wednesday 19, September 2018, 17:37:02

தர்மபுரி மாவட்ட தமிழக வாழ்வுரிமை கட்சியின் ஆய்வுக் கூட்டம் இன்று தர்மபுரியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் வேல்முருகன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

செய்தியாளர் சந்திப்பின்போது வேல்முருகன் கூறியதாவது:

தமிழ்நாட்டினைப் பொறுத்த மட்டில் அரசு இயந்திரம் செயலிழந்த நிலையில் மிகப்பெரிய ஊழல் அரசு நடைபெற்று வருகிறது. இது குறித்து ஆட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் சிறிதும் கவலைப் படவில்லை.  இதனைத் தமிழக மக்கள் நன்றாகவே இன்று உணர்ந்திருக்கிறார்கள்.

தமிழக முதலமைச்சருக்குக் கீழ் இயங்கும் தலைமைச் செயலாளர் அலுவலகமும், வீடும் லஞ்ச ஒழிப்புத் துறையினரால் மிகப்பெரிய அளவில் சோதனை இடப்பட்டு பெருமளவு தொகையுடன் பல ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு உள்ளன. இது குறித்துத் தமிழக முதல்வர் சிறிதும் கவலை கொள்ளவில்லை.

தமிழக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் இல்லத்தில் வருமான வரித்துறையினர், மத்தியப் புலனாய்வுத் துறையினர் மிகப் பெரிய அளவில் சோதனைகள் மேற்கொண்டனர். இங்கும் கணக்கில் காட்டப்படாத  பணம் மற்றும் முக்கியமான பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அது தொடர்பாக வழக்குகள் தொடுக்கப்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. இதற்கு முதல்வர் தார்மீகப் பொறுப்பு ஏற்று இருந்திருக்க வேண்டும்.

தமிழ்நாட்டு காவல்துறையின் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. வீட்டில் பத்து மணிநேரம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது. சுதந்திர இந்தியாவின் 72 ஆண்டு கால  வரலாற்றில், பணியில் இருக்கின்ற ஒரு டி.ஜி.பி. வீட்டில் இது போன்றதொரு சோதனை நடைபெற்ற வரலாறு இதுவரையில் இல்லை.

இலஞ்ச இலாவண்ய ஊழலில் தமிழகம் இன்று அகில இந்தியாவுக்கே  மிகப்பெரிய முன்னுதாரணமாக இருந்து வருகிறது. அடுக்கடுக்காக இவ்வளவு குற்றச்சாட்டுக்கள் கூறப்பட்ட போதிலும்  எதைப் பற்றியும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கவலைப் பட்டதாகவே தெரியவில்லை. அவருடைய சம்பந்தி இயக்குனராக உள்ள அலுவலகங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்துகிறது. அதில் நூற்றுக்கணக்கான கோடி சொத்துக்கள், ஆவணங்கள் பணம் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொதுப்பணித் துறை, தேசிய நெடுஞ்சாலைத் துறை போன்ற பல்வேறு துறைகளில் மெஜாரிட்டி இல்லாத இந்த அரசு லஞ்சம் பெற்றுள்ளதற்கு தார்மீகப் பொறுப்பேற்று தமிழக முதல்வர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்” என்று வேல்முருகன் தெரிவித்தார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz