ஊரடங்கில் சலூன் கடைக்கு எப்போது தளர்வு? எதிர்ப்பார்ப்பில் பொதுமக்கள்!

Monday 11, May 2020, 23:21:31

சிறப்புக் கட்டுரை:   க.சண்முகவடிவேல்.

கொரோனா நோய் தாக்குதலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம் தேதி துவங்கிய பொதுமுடக்கம் வருகிற 17-ம் தேதி வரை தொடர்கிறது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக பொதுமக்கள் முடக்கப்பட்டதால் பல இடங்களில் மனச்சோர்வுக்கும் பலர் ஆளாகியுள்ளனர்.

இதனால் மக்கள் நலன் கருதி ஊரடங்கில் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. டீ கடை, பெட்டி கடை என பல தொழில்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்ட நிலையில் பொதுமக்களின் முக்கிய தேவையான சலூன் கடைகளுக்கு மட்டும் இன்னும் அனுமதி வழங்கப்படாமல் நிலுவையில் வைத்திருப்பது பணிக்கு செல்வோருக்கும், அழகு நிலையத்தை நம்பி இருப்போர்க்கும் பெரும் வேதனையாக உள்ளது.

திருச்சி மாநகரில் இன்று ஊரடங்கு பெரும்பாலும் தளர்த்தப்பட்டதால் திருச்சியின் மையப்பகுதிகள் மட்டுமல்லாது அனைத்து இடங்களிலும் இயல்பான நிலைக்கு பொதுமக்கள் திரும்பியுள்ளனர். இருந்தாலும், கடந்த 40 நாடகளுக்கும் மேலாக முடி வெட்டாமலும், தாடியை எடுக்க முடியாமலும் பலர் திரியும் காட்சிகள் ஏராளம்.

ஊரடங்கு தளர்வில் சலூன் கடைகளை திறக்க அனுமதி வழங்காததால் முடிவெட்ட முடியாமலும், ஷேவிங் செய்ய முடியாமலும் ஆண்கள் பரிதவித்து வருவதுபோல் அழகு நிலையம் செல்ல முடியாமல் பெண்களும் வருத்தமடைந்துள்ளனர்.

பல இடங்களில் வீட்டில் வந்து ஆண்களுக்கும், பெண்களுக்கும் சிகை அலங்காரங்களும், முகப்பூச்சிகளையும் சலூன் கடைக்காரர்கள் செய்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கான தொகையும் கூடுதல் கட்டணமாக அதிகரித்ததால் சாதாரண மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

சுயமாக ஷேவிங்(முகசவரம்) செய்து கொள்ளும் நிலையில் இல்லாமல் பலர் இன்னும் சலூன் கடைகளை மட்டுமே நம்பியுள்ளனர். சலூன் கடைகள் கடந்த 40 நாட்களுக்கு மேலாக மூடி கிடப்பதால் ஆண்கள் தலைநிறைய முடியுடனும், நீண்ட தாடியுடனும் அலைந்து வருகின்றனர்.

வெள்ளை முடிகளை மறைக்க அவ்வப்போது ‘டை’ அடித்துக்கொண்டு தங்களை இளைஞர்கள் போல் ஏமாற்றி வந்தவர்கள் பாடு ரொம்ப திண்டாட்டமாக உள்ளது.

அக்னி நட்சத்திரத்தின் காரணமாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இதி்ல் வியர்வையில் நனைந்து வரும் நிலையில் தலையில் முடி அதிகமாக உள்ளவர்கள் சளி தொந்தரவுகளை அனுபவித்து வருகின்றனர். கொரோனா நிலவி வரும் நிலையில் சளி தொந்தரவு ஏற்பட்டால், உடனே அக்கம் பக்கத்தினர் தள்ளி போவதால் கொரோனா அச்சத்தில் தேவையற்ற மனக்கவலை அடைந்து வருகின்றனர்.

ஆண்களின் திண்டாட்டம் ஒருபுறம் என்றால் பெண்களின் கவலையோ வேறு விதமாக உள்ளது. பெண்கள் அழகு நிலையம் செல்லும் பழக்கம் என்பது தற்போது நகரத்தை தாண்டி கிராமங்கள் வரை பரவியுள்ளது. இதனால் தற்போது பெரும்பாலான கிராமங்களிலும் ஒரு அழகு நிலையம் இருப்பதை காண முடிகிறது.

ஆண்களுக்கு இணையாக தங்களது முடியை ஸ்டைலாக வெட்டி கொள்வதிலும், ‘டை’ அடிப்பதிலும் பெண்களும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு விதமான அழகு சாதனங்களை பயன் படுத்துவதில் ஆண்களை விட பெண்களே அதிகமாக உள்ளனர்.

அவ்வப்போது அழகு நிலையத்திற்கு சென்று தங்கள் அழகுக்கு அழகூட்டி மெருகேற்றி புதுப்பொலிவுடன் திகழும் பெண்கள் அழகு நிலையம் திறக்கப்படாததால் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

saloon2

எனவே இந்த விசயத்தை பொறுத்தவரையில் ஆண்கள், பெண்கள் என பாகுபாடின்றி பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கொடுமையில் இருந்து விடுதலை பெற சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும் என அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

சலூன் தொழில் செய்பவர் மூலமாக, அனைத்து அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அரசியல்வாதிகள், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரபலங்கள் சலூன் கடைக்காரரை வீட்டில் அமர்த்தி தங்களை அழகு படுத்திக்கொண்டிருக்கும் அதே வேளையில் பாமரனின் அழகு கேள்விக்குரியானதாகிறது.

சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காததாகத்தான் இன்றைய நிலை தமிழகத்தில். ஏற்கனவே மத்திய அரசு சலூன் கடைகளுக்கு ஊரடங்கில் தளர்வு அனுமதித்தது. ஆனால், மாநில அரசோ அனுமதிக்கவில்லை.

ஆனால் இந்த ஆட்சி பொறுப்பில் உள்ள அனைவரும் சலூன் கடைக்காரர்களை அவரவர் வீட்டிற்கு அழைத்து அவர் தம் முகச்சவரம் மற்றும் சிகையலங்காரம் செய்துகொண்டு சாதாரண மக்களை தாடியுடன் திரிய விடுகின்றனர் என்பதுதான் வேதனை.

ஏற்கனவே அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் முடி திருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தினர் தங்களை கடைகள் திறக்க அனுமதிக்கக்கோரியும், பெரும்பாலான சவரத் தொழிலாளர்கள் வருவாய் இன்றி தவித்து வருவதாகவும், எங்கள் குடும்பங்கள் பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடியை சந்தித்து வருவதால் அரசு எங்களையும் வாழவைக்க வழிசெய்யனும் என கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz