அகமதாபாத்திலிருந்து 238 நபர்கள் சிறப்பு ரயில் மூலம் திருச்சி வந்தனர்

Saturday 23, May 2020, 00:53:55

தமிழகத்தில் 10 மாவட்டங்களை சேர்ந்த 238 நபர்கள் அகமதாபாத் மாநிலத்திலிருந்து திருநெல்வேலி ரயில் நிலையம் வரை செல்லும் சிறப்பு ரயில் மூலம் திருச்சி ரயில்வே ஜங்சன் வந்து சேர்ந்தனர்.

ரயிலில் வந்த 238 நபர்களை அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 6 சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக இடைவெளி கடைபிடித்து மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு பயணிகளை அனுப்பி வைத்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது:

மத்திய, மாநில அரசுகள் புலம் பெயர்ந்து வேலை செய்யும், தொழிலாளர்களை அந்தந்த மாநிலத்தில் உள்ள சொந்த ஊருக்கு சிறப்பு இரயில் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தை சேர்ந்த 238 நபர்கள் அகமதாபாத் மாநிலத்தில் பணிபுரிந்த நபர்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர்.

அதன்படி திருச்சிராப்பள்ளி 43, அரியலூர் 19, பெரம்பலூர் 6, கரூர் 35, தஞ்சாவூர் 36, திருவாரூர் 11, நாகப்பட்டிணம் 28, புதுக்கோட்டை 37, மயிலாடுதுரை 11, நாமக்கல் 12 ஆகிய 10 மாவட்டங்களை சேர்ந்த 238 நபர்கள் சிறப்பு இரயில் மூலம் திருச்சிராப்பள்ளி இரயில்வே ஜங்சன் வருகை புரிந்தனர்.

இவர்களை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் 6 சிறப்பு பேருந்துகள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து அனுப்பிவைக்கப்பட்டனர். இவர்கள் அந்தந்த மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று உள்ளதா என பரிசோதனை செய்யப்படுவார்கள்.

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த 43 நபர்களும் சேதுராப்பட்டி அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பான பரிசோதனை இன்று மேற்கொள்ளப்படும். மேலும், நமது மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் காலை உணவு வழங்கப்பட்டது என மாவட்ட ஆட்சித்தலைவர் சு.சிவராசு தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் என்.விஸ்வநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வடிவேல்பிரபு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் எஸ்.சத்தியமூர்த்தி, தேர்தல் வட்டாட்சியர் முத்துசாமி மற்றும் பலர் உடன் இருந்தனர்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz