மோகன் சி லாச‌‌ரஸ் மீது தர்மபுரியிலும் பாய்ந்தது வழக்கு!

Sunday 07, October 2018, 09:39:03

கிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் அண்மையில் ஒரு  பிரசங்கத்தின்போது, இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இங்கிருப்பது மாதிரி பெரிய பெரிய கோவில்கள் - சாத்தான்களுடைய அரண்கள் கிடையாது. நாம் கிரகிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு சாத்தான் அந்தக் கோவில்களில் வேரூன்றி இருக்கிறான்  எனப் பேசியுள்ளார்.

மோகன் சி லாசரசின் இந்த சர்ச்சைக்குரிய பேச்சு அடங்கிய  வீடியோ வைரலாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியதைத் தொடர்ந்து அவருக்கு இந்து அமைப்புகளின் கடும் கண்டனங்கள் கிளம்பின. 

இந்துக் கோவில்களையும், இந்துக் கடவுள்களையும் இழிவாகப் பேசிய நாலுமாவடியைச் சேர்ந்த மதபோதகர் மோகன் சி லாச‌‌ரஸ் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜ.க.வினரால் கோவை கருமத்தம்பட்டி மற்றும் சூலூர் காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இது தவிர, பொள்ளாச்சி காவல் நிலையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பிலும் மோகன் சி லாசர‌ஸ் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த மூன்று புகார்களின் பேரில், மோகன் சி லாச‌‌ரஸ் மீது அந்தந்த காவல்நிலையங்களில் தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவில்பட்டி  காவல் நிலையங்களில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

இந்த நிலையில் தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள அதியமான் தெருவில் வசிப்பவரான கணேசன் என்பவர் கடந்த வாரம் தர்மபுரி நகரக் காவல்நிலைய ஆய்வாளர் ரத்தினக்குமாரிடம் மத போதகர் மோகன் சி லாச‌‌ரஸ் மீது புகார் ஒன்றினைத் தந்தார். இந்து மதக் கோவில்கள் மற்றும் தெய்வங்கள் பற்றி இழிவாகவும் பேசி வருவதுடன், ஜெபக் கூட்டங்களை நடத்தி மதமாற்றம் செய்ய முயற்சிக்கிறார் என்றும் மதப் பிரிவினைவாதத்தினை தூண்டும்படி அவருடைய பேச்சு இருப்பதால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் தனது புகாரில் கணேசன் தெரிவித்து இருந்தார்.

கணேசன் தந்த புகாரின் அடிப்படையில் நேற்று முன்தினம் மோகன் சி லாச‌‌ரஸ் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153A(2), 295 A பிரிவுகளின் கீழ் ஆய்வாளர் ரத்தினக்குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz