ஆலங்குடியில் குருப்பெயர்ச்சி விழா! - ஆயிரக்கணக்கானோர் சாமி தரிசனம்!!

Friday 05, October 2018, 22:51:21

குரு பார்க்கக் கோடி நன்மை என்பர். நவக்கிரக ஸ்தலங்களில் குருபகவானுக்கு உரிய பரிகார ஸ்தலமாக போற்றப்படும் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோவிலில் கடந்த 4ந் தேதி இரவு குருப்பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

பாற்கடலில் கடைந்தபோது ஆறுகால விசத்தை தான் சாப்பிட்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் இங்குள்ள சாமியின் பெயர் ஆபத்சகாயேஸ்வரர் என்றும், ஊர்ப் பெயர் ஆலங்குடி என்றும் உருவானது. காசி ஆரண்யம், திருஇரும்பூளை என்ற பெயர்களும் ஆலங்குடிக்கு உண்டு.

பிரசித்தி பெற்ற இத் திருத்தலத்தில் குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் மாறும்போது “குருப்பெயர்ச்சி” விழா வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு குருபகவான் துலாம் ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கு 4ந் தேதி இரவு 10.05 மணிக்கு இடம் பெயர்ந்தார். இதையொட்டி கோவிலில் குருப்பெயர்ச்சி விழா நேற்று சிறப்பாக நடந்தது.


குருப்பெயர்ச்சியையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு குரு பரிகார யாக பூஜைகள் நடந்தன. கோவிலின் அனைத்து சன்னதிகளிலும் அபிஷேக, ஆராதனைகள் செய்யப்பட்டது. குரு தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள், பால், தயிர், சந்தனம் போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து, குருபகவானுக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு குருப்பெயர்ச்சி அடைந்த நேரமான இரவு 10.05 மணிக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. உற்சவர் தெட்சிணாமூர்த்திக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடந்தன. பின்னர் உற்சவர் தெட்சிணாமூர்த்தி, குருபகவான் சன்னதி எதிரே உள்ள பிரகாரத்தில் எழுந்தருளினார்.

விழாவையொட்டி கலங்காமற்காத்த விநாயகர், ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலியம்மன், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், சனீஸ்வர பகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. குருப்பெயர்ச்சி விழாவில் ஆலங்குடி கோயிலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர் பெருமக்கள் உள்ளிட்ட ஆளுங்கட்சியின் பிரமுகர்கள் மட்டுமல்லாது பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மகா தீபாராதனையில் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

குருப்பெயர்ச்சி விழாவையொட்டி நன்னிலம் துணை போலீஸ் சூப்பிரண்டு அருண் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் ஆலங்குடிக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. விடிய விடிய சுவாமி தரிசனம் என்பதால் வரிசையில் காத்திருந்த பக்தர்களுக்கு வசதியாக கோவிலின் தெற்கு கோபுர வாசல் பகுதியில் தகரத்தாலான பந்தல் அமைக்கப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இரவு முதல் ஆலங்குடியில் மழை பெய்த வண்ணம் இருந்தது. மழையையும் பொருட்படுத்தாமல் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்களுடைய குடும்பத்தினருடன் விழாவில் கலந்து கொண்டு குருபகவாகனுக்கு அர்ச்சனை மற்றும் பரிகார பூஜைகளை செய்து சாமி தரிசனம் செய்தனர்.

இதேபோல, தஞ்சாவூர் அருகில் உள்ள திட்டை வசிஷ்டேஸ்வரர் கோயிலிலும் நேற்று குருபகவானுக்கு சந்தனக்காப்பு அலங்காரம் நடைபெற்றது. இரவு 10.05 மணியளவில் சிறப்புத் தீபாராதனை நடைபெற்றது.

இந்த குருப்பெயர்ச்சியால் ரிஷபம், கடகம், துலாம், மகரம், மீனம் ராசியினருக்கு நற்பலனும், சிம்மம், விருச்சிகம், கும்பம் ராசியினருக்கு சுமாரான பலனும், மேஷம், மிதுனம், கன்னி, தனுசு ராசியினர் பரிகாரமாக குருபகவானை வழிபட்டால் நன்மை பயக்கும்.

குருப்பெயர்ச்சியை தொடர்ந்து 2-வது கட்ட லட்சார்ச்சனை விழா வருகிற 8-ம் தேதி தொடங்கி 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz