வீட்டிலேயே குப்பைகளை உரமாக்குவது குறித்த கண்காட்சி நாளை துவக்கம்

Friday 05, October 2018, 22:58:59

திருச்சி மாநகராட்சி மூலம் நாளை முதல் இரண்டு நாட்கள் வீட்டிலேயே குப்பைகளை உரமாக்குவது குறித்த கண்காட்சியை இலவசமாக பார்வையிட்டு பயன்பெறலாம் என மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;

திருச்சி மாநகராட்சி மூலம் வீட்டிலேயே குப்பைகளை உரமாக்குவது குறித்த மாபெரும் கண்காட்சி நாளை (6-ம் தேதி) மற்றும் நாளை மறுதினம் (7-ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் திருச்சி மத்தியபேருந்து நிலையம் அருகில் கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெறஉள்ளது. இந்தக் கண்காட்சிக்கு அனுமதி இலவசம்.

இந்த கண்காட்சியில் வீடுகள், நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், அடுக்குமாடி குடியிருப்பு கள், உணவு மற்றும் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அரசு குடியிருப்பு பகுதிகளில் தினசரி உற்பத்தியாகும் மக்கும் குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்க தேவையான சிறிய அளவிலான உபகரணங்கள் முதல் பெரிய வகை உபகரணங்களான உயிரி எரிவாயு தயாரிப்பு கருவிகள் மற்றும் மாடித்தோட்டங்கள் அமைப்பதற்கான வழிமுறைகள் பற்றி முன்னணி நிறுவனங்கள் மூலம் கண்காட்சி நடத்தப்படுகிறது.

பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகிகள், மாணவ, மாணவிகள், வியாபாரிகள், அரசு சாரா தொண்டு நிறுவன நிர்வாகிகள் ஆகியோர் கண்காட்சி நடக்கும் நாட்களில் நேரில் வந்து பார்வையிட்டு அவற்றை பற்றிய விபரங்களை தெரிந்து கொண்டு தங்களுக்கு தேவையான உபகரணங்களை வாங்கி தங்கள் வீடுகளில் இயற்கை உரம் தயாரித்துக் கொள்ளலாம்.

அனைத்து நிறுவனங்களும் தங்கள் இடத்தில் தினசரி உருவாகும் மக்கும் குப்பைகளைக் கொண்டு இயற்கை உரம் அல்லது உயிரி எரிவாயு தயாரித்து திருச்சி மாநகராட்சியை நூறு சதவீதம் குப்பையில்லா மாநகராட்சியாக மாற்ற ஒத்துழைப்பு தரவேண்டும் என்று செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz