கோவியட் -19 முன்தடுப்பு  விதிமுறைகளைக் காற்றில் பறக்க விட்ட தருமபுரி ஆட்சியர்!

Friday 12, June 2020, 20:56:51

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் கொரோனா வைரஸ் கோவியட் -19 முன்தடுப்பு  நடவடிக்கைகள் மற்றும்  பாதுகாப்பு நடவடிக்கைகள்  குறித்த  மாவட்ட அளவிலான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் மலர்விழி தலைமையில் கடந்த 9ந் தேதி  நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜன், அரூர் சார்ஆட்சியர் பிரதாப், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, முதன்மைக் கல்வி அலுலவர் கீதா, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பூவதி உள்ளிட்ட பல முக்கியமான அரசு அதிகாரிகளும் இக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கொரோனா முன்தடுப்பு ஆலோசனை மற்றும் பாதுகாப்புக்காக நடத்தப்பட்ட இந்த ஆலோசனைக் கூட்டமே கொரோனாவை வரவேற்கக் கட்டியம் கூறுவதைப் போல அமைந்திருந்தது நெருடலாகத் தென்பட்டது. கொரோனாவை தடுக்க அரசு அறிவித்திருந்த முன்தடுப்பு நடவடிக்கைகள் இக் கூட்டத்தில் காற்றில் பறக்க விடப்பட்டிருந்தன.

தற்போதுள்ள சூழலில் கொரோனா தொற்று விரைந்து பரவக் காரணமாகி விடும் என்பதால் மருத்துவமனைகள் உள்ளிட்ட எங்குமே ஏர்கண்டிஷனர்கள் பயன்படுத்தத் தடை என அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முன்தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தருமபுரி ஆட்சியரால் நடத்தப்பட்ட இந்த கூட்டம் நடந்த அரங்கில் இரண்டு ஏர்கண்டிஷனர்கள் இயங்கி அதிகாரிகளுக்குக் குளுமை தந்து கொண்டிருந்தன. 

கொரோனா தாக்குதலைத் தவிர்ப்பதற்காக முதல்வரோ மற்ற எந்த அமைச்சர்களோ கூட்டங்களில் பங்கேற்கும் போதோ அல்லது பேட்டியளிக்கும் போதோ முகக் கவசத்தினை தவறாமல் அணிந்தே காணப்படுகின்றனர். ஆனால் கோவியட் -19 முன்தடுப்பு  நடவடிக்கைகள் மற்றும்  பாதுகாப்பு நடவடிக்கைகள்  குறித்த இந்தக் கூட்டத்தில் முகக் கவசம் அணிவதன் அவசியம் குறித்துப் பேசிய ஆட்சியர் மலர்விழி முகக்கவசத்தை முகத்தில் மாட்டியிருந்த போதிலும் அதனை முறையாக அணியவில்லை. திறந்த முகத்துடனே அவர்  இக்கூட்டத்தில் பேசினார்.

அவரையடுத்து அமர்ந்திருந்த தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இராஜன் முகக் கவசத்தைக் கழுத்தில் டாலரைப் போல மாட்டி கீழே தொங்க விட்டிருந்தார். காவல்துறை ஆய்வாளர் ஒருவர் முகக் கவசம் அணியாமல் இக் கூட்ட அரங்கில் சல்யூட் அடிப்பதைப் போன்று தலையில் கை வைத்தபடி கண் அயந்திருந்தார்.

அதே போல இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகளில் ஐந்துக்கும் மேற்பட்டோர் முககவசம் அணியாமலேயே முன் வரிசைகளில் பவ்யமாக அமர்ந்திருந்தனர். பொதுமக்கள் முகக் கவசம் அணியாவிட்டால் அபராதம் என்றெல்லாம் அறிவிப்புகளை வெளியிடும் அதிகாரிகளே அதனை இலட்சியம் செய்யாததுதான் வேடிக்கை!

ஊருக்குத்தானே உபதேசம்!!

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz