தங்களுக்குக் கொரோனா பரிசோதனை செய்யும்படி கிராம நிர்வாக அலுவலக சங்கம் கோரிக்கை!

Sunday 28, June 2020, 22:54:27

திருச்சியில் நாளுக்கு நாள் கொரோனா தாக்குதலின் வேகம் அதிகரித்து வருகிறது. அரசு அலுவலர்கள், காவல்துறையை சேர்ந்தவர்கள், செய்தியாளர்கள் என பொதுமக்களோடு நெருங்கிய தொடர்பில் இருக்கக்கூடியவர்களுக்கு தற்போது தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது.

திருச்சி சோமரசம்பேட்டையை சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அவர், விமானம் மூலம் வரும் பயணிகளை தனிமைப்படுத்தும் சேதுராப்பட்டி பொறியியல் கல்லூரி மையத்தில் சுழற்சி முறையில் பணியாற்றினார்.

கடந்த 22, 23-ம் தேதிகளில் ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்தில் ஆட்சியர் வருவாய் தீர்வாயம் கிராம கணக்குகளை தணிக்கை செய்தபோது சோமரசம்பேட்டை கிராம நிர்வாக அலுவலருடன் மற்ற வருவாய்த்துறை அலுவலர்களும் தொடர்பில் இருந்துள்ளனர்.

covid

இவருக்கு கடந்த 24-ம் தேதி காய்ச்சல் காரணமாக ரத்த மாதிரி எடுத்து பரிசோதிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சம்பந்தபட்ட கிராம நிர்வாக அலுவலருக்கு உயர் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்திட வேண்டும் என்றும் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் முறையிடப்பட்டது.

அதைத்தொடர்ந்து அனைத்து தாசில்தார் அலுவலகங்களில் உள்ள வருவாய்த்துறையினருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு உறுதி அளித்துள்ளார்.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz