தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் ஜூலை 15-ம் தேதி வரை ரத்து!

Sunday 28, June 2020, 22:58:30

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்தபோதும், பொதுமக்கள் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயணம் மேற்கொள்பவர்களுக்காகவும், வேலைக்கு செல்வோருக்காகவும் 5-ம் கட்ட ஊரடங்கு தளர்வில் மத்திய அரசு தமிழக அரசின் அனுமதியுடன் சில சிறப்பு ரயில்களை தமிழகத்தில் இயக்கியது.

5-ம் கட்ட ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் கடந்த 1-ம் தேதி முதல் தமிழகத்தில் 7 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தது. தற்போது அந்த ரயில்கள் நாளை முதல் ஜூலை மாதம் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டு உள்ளது. இது குறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

தமிழக அரசின் வேண்டுகோளின்படி தென்னக ரயில்வேயின் கீழ் இயங்கும் கீழ்க்கண்ட சிறப்பு ரயில்கள் வருகிற 29-ம் தேதி முதல் ஜூலை மாதம் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

tra

அந்த வகையில், திருச்சி-செங்கல்பட்டு (வழி விருதாச்சலம்), மதுரை-விழுப்புரம், கோவை-காட்பாடி, திருச்சி-செங்கல்பட்டு (வழி மயிலாடுதுறை), அரக்கோணம்-கோவை, கோவை-மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் ஆகிய வழிதடங்களில் இரு மார்க்கமாகவும் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது.

ரத்து செய்யப்பட்ட ரயில் டிக்கெட்களுக்கான முழு கட்டணமும் திருப்பி வழங்கப்படும். ‘ஆன்-லைன்’ மூலம் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு, வங்கி கணக்கில் நேரடியாக கட்டணம் திருப்பி வழங்கப்படும்.

கவுண்டர்களில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்கள் பயண தேதியில் இருந்து 6 மாதம் வரை கவுண்டர்களில் பெற்று கொள்ளலாம். சென்னை சென்டிரல்-டெல்லி இடையே இயக்கபட்டு வரும் ராஜ்தானி சிறப்பு ரயில் வழக்கம் போல் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz