ஊரடங்கின் 100-வது நாள்; தூய்மைப்பணியாளருக்கு விருது வழங்கி கௌரவித்த இயக்குனர்

Tuesday 30, June 2020, 01:45:18

கொரோனா தொற்றால் ஊரடங்கு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 100-வது நாளை எட்டியுள்ளது.

இன்று மேலும் ஊரடங்கு இன்னும் 1 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் 100-நாள் ஊரடங்கில் 100-நாளும் தூய்மைப்பணியில் தொய்வின்றி பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கும் விழா கடலூரில் நடந்திருக்கின்றது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர கடந்த மார்ச் 25-ம் தேதியன்று ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி ஓரிரு நாட்களில் நூறு நாட்கள் நிறைவடையப் போகின்றன. பொதுவாக திரைத்துறையில் ஒரு திரைப்படம் 100 நாள் ஓடி வெற்றி கண்டால் அதற்கு விழா எடுத்து அதில் பணிபுரிந்தவர்களுக்குச் சால்வை அணிவித்து விருது கொடுப்பது வழக்கம்.

அந்தவகையில் கொரோனா ஊரடங்கின் 100-வது நாள் நிறைவடைய இருப்பதை யொட்டி 100 நாட்கள் தொடர்ந்து பணி செய்த தூய்மைப் பணியாளருக்கு விருது வழங்கி பொன்னாடை போர்த்தி கௌரவித்திருக்கின்றார் கடலூரைச் சேர்ந்தவரும், ’திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் இயக்குனருமான செந்தில்.

அவரது சொந்த ஊரான கடலூர் மாவட்டம் வண்ணாரப் பாளையத்தில் அவர் வீடு இருக்கும் பகுதியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிபவர் லதா. இவர் அசாதாரணமான சூழ்நிலையில் கூட எதையும் பொருட்படுத்தாமல் ஒருநாள் கூட விட்டு விடாமல் தினமும் பணிக்கு வந்திருக்கிறார்.

அர்ப்பணிப்பு உணர்வுடன் தூய்மைப்பணிபுரிந்த அவரது பணியைப் பாராட்டி அவருக்கு, கடலூர் வண்ணாரப்பாளையம் வார்டுக்கு உட்பட்ட சிறந்த தூய்மைப் பணியாளர் என்ற விருதினை செந்தில் இன்று வழங்கி சால்வை அணிவித்துக் கவுரவப்படுத்தினார்.

இதுகுறித்து இயக்குனர் செந்தில் கூறுகையில், ''தூய்மைப் பணியாளர்களை மதிப்போம் அவர்களை நம் உறவினர்களாகப் பார்ப்போம். அவர்களால்தான் நம் பாரதம் மணக்கிறது'' என்றார்.

அதேபோல், தூய்மைப் பணியாளர் விருது வாங்கிய லதா, ''ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு வியர்வையுடன் செல்வேன், இன்று சால்வையுடன் செல்கிறேன். இது மகிழ்ச்சியான தருணம்'' என்று உணர்வுபூர்வமாகக் கூறியது நெகிழத்தான் செய்தது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz