சேலம்: டோல்கேட்டில் எஸ்ஐயை எட்டி உதைத்து முன்னாள் எம்பி ரகளை!

Tuesday 30, June 2020, 00:59:40

முன்னாள் எம்பியும் அதிமுக பிரபலமுமான அர்ஜுனன் நேற்று இரவு ஓமலூர் டோல்கேட்டில் காவல்பணியில் இருந்த போலீசுடன் கடும் மோதலில் ஈடுபட்டு அவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியதுடன்  அங்கிருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவரை எட்டி உதைத்து ரகளை செய்தார். ஆளும்கட்சிப் பிரமுகர் என்றதால் அங்கிருந்த மற்ற காவல் அதிகாரிகள் ரகளையில் ஈடுபட்ட முன்னாள் எம்பியைச் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் குறித்துக் கூறப்படுவதாவது:

முன்னாள் எம்பி, முன்னாள் எம்எல்ஏ, ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் உள்ளிட்ட பல பொறுப்புகளை வகித்தவர் அர்ஜுனன்.

திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, ஆகிய கட்சிகளில் முக்கிய பொறுப்புகளை வகித்து அக் காட்சிகளில் இருந்து வெளியேறியவர். பிறகு மீண்டும் திமுகவில் இணைந்து பிறகு அங்கிருந்தும் வெளியேறி ஜெ.தீபா கட்சியில் ஐக்கியமாகி அங்கிருந்தும் விலகி அதன்பிறகு ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவுக்கு வந்து  இறுதியாக இப்போது ஒன்றிணைந்த அதிமுகவில் அங்கம் வகித்து வருகிறார்.

சேலம் பேர்லாண்ட்ஸ் பகுதியில் வசித்து வரும் முன்னாள் எம்பி அர்ஜுனன் நேற்று முன்தினம் மேச்சேரி அருகில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டு இரவு சேலம் திரும்பியுள்ளார்.

இரவு எட்டு மணி சுமாருக்கு ஓமலூர் டோல்கேட்டில் காவல்பணியில் இருந்த போலீசார் அவரை முன்னாள் எம்பி என்று தெரியாத நிலையில்  அவரது வாகனத்தை நிறுத்தி அவரிடம் வண்டி எங்கிருந்து வருகிறது என்று விசாரித்துள்ளனர்.   

தன்னை முன்னாள் எம்பி அர்ஜுனன் சொல்லியபோதிலும் அதற்கான சான்றினை ஒரு போலீஸ்காரர் கேட்டுவிட, தன்னை போலீஸ்  அவமானப்படுத்துவதாக கொதித்துப் போன அர்ஜுனன் தனது கெத்தைக் காட்டும் விதத்தில் வண்டியில் அமர்ந்தபடியே போலீசாரை ஒருமையில் திட்டியுள்ளார். அதற்கு போலீசார் அவரிடம் மரியாதையாகப் பேசுங்கள்  என்று கூறியுள்ளனர்.

“மரியாதையா எப்படி பேசச் சொல்றே? ஐடி புரூப்னு எதைத் தரச் சொல்றே? சரி இப்ப என்னதான் பண்ணனும்னு நீ சொல்றே? அங்க அடிச்சுக் கொன்னானுன்களே அந்த மாதிரி இங்க போலீசுக்கு அவ்வளவு அதிகாரம் கொடுத்துட்டாங்களா? ரொம்ப அதிகப் பிரசங்கித்தனம் பண்ணிக்கிட்டு இருக்கீங்க.... எம்எல்ஏ, எம்பினா ஒரு மரியாதை வேண்டாமா? அதைச் சொன்னா மூடிக்கிட்டு விட மாட்டீங்களா?” என ஏகத்துக்கும் அர்ஜுனன் எகிறியுள்ளார்.

இதைக் கேட்டு பொறுமையிழந்த போலீஸ்காரர் ஒருவர், “மரியாதையாவே பேசத் தெரியாதா? சும்மா ஓவரா இஷ்டத்துக்கும் பேசிட்டுப் போறீங்க?” என்று பதில் பேசிவிட அடுத்த சில வினாடிகளில் அந்த இடமே அதகளப்பட்டுப் போனது.

காரை விட்டுக் கீழிறங்கிய அர்ஜுனன் தன் இரு கைகளாலும் வேட்டியைத் தூக்கிப் பிடித்தவாறே “வண்டிய விட்டு கீழ இறங்கிட்டேன்... இப்பப் பேசுங்கடா”  என்று சவுண்டு விட, அந்தக் காட்சியினை போட்டோ எடுக்க மொபைல் போனுடன்  ஒரு போலீஸ்காரர் முன்வந்தார். அவரை அடிக்கப் பாய்ந்த அர்ஜுனன் ஆபாச வார்த்தைகளால் அர்ச்சித்தார்.

இதற்குள்ளாக அவரை அங்கிருந்த பிற போலீஸ்காரர்கள் சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை. “பரதேசிப் பசங்களா செருப்பாலேயே அடிப்பேன்” என்று சகட்டுமேனிக்குப் போலீசாரைத் திட்டியபடியே காருக்குள் சென்று அமர்ந்த அர்ஜுனன் அங்கிருந்தபடியே போலீசாரைப் பார்த்து “கேடிப் பசங்கள வச்சிக்கிட்டு கோல்மாலா பண்ணிக்கிட்டு இருக்கீங்க... செருப்பு பிஞ்சிரும்டா பிச்சக்கார நாய்களா...” என்றார் ஆவேசம் தணியாதவராக.

அவர் திட்டுவதை தனது செல்போனில் பதிவுசெய்தபடியே எஸ்எஸ்ஐ ஒருவர் வசவுகளைக் கேட்கப் பொறுக்க மாட்டாமல் “அதைவிடப் பிச்சைக்காரன் நீ....” என்றார். இதைக் கேட்டுக் காரில் இருந்து இறங்கிய அர்ஜுனன் அந்த எஸ்எஸ்ஐயின் நெஞ்சில் கை வைத்துத் தள்ளிவிட்டார். சுதாரித்துக் கொண்ட எஸ்எஸ்ஐ பதிலுக்கு அர்ஜுனனைத் தள்ளினார்.

இதனைச் சற்று எதிர்பாராத அர்ஜுனன் கோபம் தலைக்கேறியவராய் தனது வேட்டியினை இருகக்  கட்டிக் கொண்டு எங்கடா நீ எனக்குப் பிச்ச போட்டே என்றபடி எஸ்எஸ்ஐயை எட்டி உதைத்தார். இதற்கிடையில் நிலை விபரீதமாகி விடாமலிருக்க அங்கிருந்த மற்ற காவலர்கள் எஸ்எஸ்ஐ பிடித்துக் கொள்ள தொடர்ந்து சத்தமிட்டபடியே அங்கிருந்து காரில் ஏறி அர்ஜுனன் கிளம்பிச் சென்றார்.

பொது இடத்தில் ஆபசமாகத் திட்டி மிரட்டி அரசுப் பணியாளர்களான காவல்துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து எட்டியும் அர்ஜுனன் உதைத்த வீடியோ வைரலாக இணையத்தில் பரவி பிறகு தொலைக்காட்சிகளில் செய்தியாகவும் வந்துவிட வேறு வழியின்றி அர்ஜுனன் மீது 294b & 353IPC ஆகிய பிரிவுகளில் சேலம் மாநகரப் போலீஸ் வழக்குப் பதிந்துள்ளது.

சிபிஐஎம் கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட செயலாளரான பிரவின் குமார் இந்த நிகழ்ச்சி பற்றி நம்மிடம் பேசியபோது...

“பள்ளப்பட்டி காலநிலையப் பகுதியில் எங்கள் கட்சியின் போஸ்டர்களை ஒட்டிய கட்சித் தோழர்கள் மீது கொலைமிரட்டல் மற்றும் கொலைமுயற்சி ஆகிய பிணையில்விடமுடியாத பிரிவுகளில் வழக்குப் பதிந்து வன்மத்தைக் காட்டியது  காவல்துறை.

இப்போது ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர் போலீஸ் SSIயை பொது இடத்தில் ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்து அடித்து உதைத்ததற்கு 506(2) பிரிவின் கீழ் வழக்குப் பதியாதது ஏனோ?  

போலீஸ் SSIயை எட்டி உதைத்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது 294b & 353IPC ஆகிய சாதாரணமான காவல்நிலையப் பிணையில் விடக்கூடிய பிரிவுகளில் காவல்துறை வழக்குப் பதிந்துள்ளது.

புலன்விசாரணை நடத்தி இந்த வழக்கையே போலீஸ் குளோஸ் செய்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!” என்று தெரிவித்தார்.

 

 

    

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz