பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் திடீர் கைது!

Tuesday 09, October 2018, 11:45:48

சென்னை விமான நிலையத்தில் நக்கீரன் பத்திரிகை வெளியீட்டாரும், ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான நக்கீரன் கோபால் போலீசாரால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக புனேவுக்கு செல்ல இன்று காலை சென்னை விமான நிலையத்துக்கு வந்த நக்கீரன் கோபாலை ஜாம்பஜார் போலீசார் சுற்றி வளைத்துக் கைது செய்துள்ளனர். சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சென்னை சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் வைத்து போலீசார்  விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாணவிகளை தவறாக வழிநடத்திய அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கடந்த ஏப்ரல் 17-ல் சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்டார். நிர்மலா தேவி 6 முறை ஜாமீன் கோரியும் இதுவரை ஜாமீன் வழங்காதது குறித்தும், ஆளுநரை 4 முறை சந்தித்தேன் என நிர்மலா தேவி சொன்னதாகவும் அண்மையில் நக்கீரன் இதழில்  கட்டுரை வெளியாகி இருந்தது.

இந்தக் கட்டுரையில் கவர்னருக்கு எதிரான தவறான தகவல்களை வெளியிட்டார் என  நக்கீரன் கோபால் மீது ஆளுநர் மாளிகையில் இருந்து சென்னை ஜாம்பஜார் காவல்நிலையத்தில் புகார் தரப்பட்டது. இந்தப் புகாரின் மீது 124-A பிரிவில் வழக்கு பதிந்து பத்திரிகையாளர் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. நக்கீரன் கோபாலை தொடர்ந்து நக்கீரன் இணையதள ஆசிரியர் வசந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

நக்கீரனின் தலை இணை ஆசிரியர் கோவி லெனின், முதன்மைச் செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், தலைமைச் செய்தியாளர் இளைய செல்வன் உள்ளிட்ட ஆசிரியர் குழுவையும் கைது செய்யப் போலீசார் தேடி வருவதாகக் கூறப்படுகிறது.

நக்கீரன் கோபால் கைது குறித்து மனித உரிமை செயற்பாட்டாளர் புதுவை சுகுமாரன் கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். இது குறித்து சுகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் ‘நிர்மலாதேவி விவகாரம் தொடர்பாக ஆளுநர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதாக ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். அவதூறு செய்தி வெளியிட்டார் என்றால் நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல் செய்திருக்கலாம். அது அவதூறான செய்தியா இல்லையா என்பது குறித்து சட்டப்படி விளக்க அவருக்கு வாய்ப்பிருந்திருக்கும். அதைவிடுத்து வழக்கு, கைது என்பது கருத்துரிமைக்கும், ஊடக சுதந்திரத்திற்கும் விடப்படும் சவாலாகும்’ என்று கருத்துத் தெரிவித்துள்ளார்.

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz