தருமபுரி ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள்: பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு!

Monday 06, July 2020, 23:36:46

தருமபுரி, இராமக்காள் ஏரி, சவுளுப்பட்டி அணைக்கட்டு, சாமனேரி உள்ளிட்ட ஏரிகளில் நடைபெற்று வரும் குடிமராமத்து பணிகள் நடைபெற்று வருவதை பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் நோpல் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதன் பின்னர் அவர் கூறியதாவது:

தமிழ்நாடு முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலமாக தருமபுரி மாவட்டத்தில் 2020-21 ஆம் ஆண்டில் பொதுப்பணித்துறை சார்பில் ரூ.3 கோடியே 94 இலட்சம் ரூபாய் செலவில் புதிதாக 9 பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

இத்திட்டத்தின் கீழ் இராமக்காள் ஏரி ரூ.67.50 இலட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இராமக்காள் ஏரியில் இதுவரை 75% குடிமராமத்து பணிகள் நிறைவுபெற்றுள்ளது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

மேலும் அன்னசாகரம் ஏரி ரூ.65 இலட்சம் மதிப்பீட்டிலும், சவுளுப்பட்டி அணைக்கட்டு ரூ.29 லட்சம் மதிப்பீட்டிலும், பூலாம்பட்டி அணைக்கட்டு ரூ.27 இலட்சம் மதிப்பீட்டிலும், தளவாய்அள்ளி ஏரி ரூ.29 இலட்சம் மதிப்பீட்டிலும், சாமனேரி ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலும், மைலம்பாடி அணைக்கட்டு ரூ.28 இலட்சம் மதிப்பீட்டிலும், நரிப்பள்ளி அணைக்கட்டு ரூ.94 இலட்சம் மதிப்பீட்டிலும், ஏறுபள்ளி ஏரி ரூ.29 இலட்சம் மதிப்பீட்டிலும் என மொத்தம் ரூ.3.94 கோடி மதிப்பீட்டில் 9 பணிகள் நடைபெற்றுவருகிறது. இந்த பணிகள் அனைத்தும் மழை காலம் தீவிரம் அடைவதற்கு முன்பு வருகின்ற ஜூலை 31-க்குள் நிறைவு செய்யப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் ஏரிகள் தூர்வாரப்பட்டு, வரத்துகால்வாய்கள் மற்றும் கரைகள் பலப்படுத்தப்படும். எதிர்வரும் மழைக்காலங்களில் அதிக அளவில் தண்ணீரை சேமித்துவைக்கின்ற வகையில் குடிமராமத்துப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. முதலமைச்சரின் குடிமராமத்து திட்டம் பாசன விவசாயிகளை உள்ளடக்கிய குழுக்களை கொண்டு பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

விவசாயிகள் சிறப்பான முறையில் பயன்படும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்கும் அன்னசாகரம் ஏரியை மேலும் வலுப்படுத்தும் வகையில் தற்போது இரண்டாம் கட்டமாக அந்த ஏரியில் குடிமராமத்து பணிகள் மேற்கொள்ள நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அரசின் சார்பில்  தமிழ்நாடு முதலமைச்சர் 2020-21 ஆம் ஆண்டிற்கு தருமபுரி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் 5 ஏரிகள் மற்றும் 4 அணைக்கட்டுகளில் ரூ.3.94 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கி உள்ளார். இதில் 10% விவசாயிகளின் பங்களிப்பு அதாவது உடல் உழைப்பு  பொருட்களின் விலை அளித்தல்  சங்கத்திலிருந்து தொகையாக வழங்குதல் என்றும், மீதமுள்ள 90% அரசின் பங்களிப்பாக வழங்கப்படும். இப்பணிகள் அனைத்தும் பாசனதாரர்கள் சங்கத்தின் மூலம் மேற்கொள்ளப்படும்.

மேலும் இத்திட்டத்தின் மூலம் ஏரியின் நீர் தேங்கும் பரப்பில் உள்ள மண்ணை தூர்வாரி மண்மேடு அமைத்தல், தடுப்பு வேலிகள் அமைத்தல், புல்பத்தை அமைத்தல் மற்றும் புற்களுக்கு நீர் பாய்ச்ச நீர்வழிப்பாதை அமைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஏற்கனவே தருமபுரி மாவட்டத்தில் குடிமராமத்து திட்டத்தின் மூலம் 2016-17 ஆம் ஆண்டு 21 ஏரிகள் ரூ.158 இலட்சம் செலவிலும், 2017-18 ஆம் ஆண்டு 10 ஏரிகள் ரூ.327.65 இலட்சம் செலவிலும், 2019-2020 ஆம் ஆண்டு 10 ஏரிகள் ரூ.497 இலட்சம் செலவிலும், 2016 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை பொதுப்பணித்துறை சார;பில் ரூ.9 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் 41 பணிகள் நடைபெற்றுள்ளது.

இத்திட்டத்தினை செயல்படுத்துவதன் மூலம் மேற்குறிப்பிட்ட ஏரி மற்றும் அணைக்கட்டுகளின் மூலம் 1844.88 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுவது, மழைக் காலங்களில் பெய்யும் மழைநீரை சேமிப்பதோடு நிலத்தடி நீர் மட்டம் உயரும் மற்றும் விவசாய பெருங்குடி மக்களின் வாழ்வாதாரம் பெருகிட வாய்ப்புள்ளது.

ஜூலை 31-க்குள் அனைத்து பணிகளையும் முடித்திடவும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு கண்காணிப்பு பொறியாளர் சுரேஷ் கூறினார். பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு உதவி பொறியாளர்கள் மோகனப்பிரியா, மாலதி ஆகியோர் உடனிருந்தனர்.

 

 

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz