சேலத்தில் பிடிபட்ட சென்னை போலி வழக்குரைஞர்!

Wednesday 10, October 2018, 01:33:47

வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு சிறையிலுள்ள குற்றவாளி ஒருவருக்கு ஜாமீன் பெறுவதற்காக கடந்த 9ந் தேதியன்று சேலம் மகிளா நீதிமன்றத்தில் சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் என்று தன்னைச் சொல்லிக் கொண்டு ராமகிருஷ்ணன் என்பவர்  ஆஜராகி உள்ளார். குற்றவாளியின் சார்பில் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த பிறப்புச் சான்றிதழில் சந்தேகம் ஏற்படவே, இது குறித்து விசாரிக்க மகிளா நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும், இந்த வழக்குத் தொடர்பாக ராமகிருஷ்ணன் கொடுத்த பல்வேறு தகவல்களும் நீதிமன்றத்துக்குச் சந்தேகத்தையே ஏற்படுத்தின. இது தொடர்பாக அவரிடம் அரசுத் தரப்பு வழக்குரைஞர் அய்யப்பமணி விளக்கம் கேட்டுள்ளார். அப்போது அவர் முன்னுக்கு முரணான தகவல்களைச சொல்லியதாகக் கூறப்படுகிறது.

இதனையடுத்து மாவட்ட வழக்குரைஞர் சங்கத்தினர் ராமகிருஷ்ணனிடத்தில் நடத்திய விசாரணையில் அவர் போலி வழக்குரைஞர் என்பது தெரியவர, இது தொடர்பாக வழக்குரைஞர் சங்கத்தின் சார்பில் அஸ்தம்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இந்தப் புகாரின் அடிப்படையில் ராமகிருஷ்ணனைக் கைது செய்த காவல் துறையினர் வரிடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் விசாரணையின்போது பட்டப்படிப்பு மட்டுமே முடித்த இவர் தன்னை வழக்குரைஞர் என்று சொல்லிக் கொண்டு  பல்வேறு வழக்குகளுக்காக பல்வேறு நீதிமன்றங்களில் ஆஜராகி உள்ளார் என்பதும், வழக்குகளை நடத்துவதற்கான கட்டணமாகப் பல லட்ச ரூபாய்களை ஊதியமாகப் பெற்றுள்ளார் என்பதும் தெரிய வந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த போலி வழக்குரைஞர் ராமகிருஷ்ணன் சேலத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் சேலம் நீதிமன்ற வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

© Copyright 2021 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz