முதல்வர் மீதான குற்றச்சாட்டை சிபிஐ விசாரிக்க சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவு

Friday 12, October 2018, 22:42:35

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்தங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு ஒதுக்கீடு செய்ததில் முறைகேடுகள் நடந்துள்ளது எனவும், இவ்விசயத்தில் விசாரணை தேவை எனவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்குத் தொடுத்தார்.

4500 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்கள் குறித்த இந்த வழக்கை லஞ்ச ஒழிப்பு துறையிடம் இருந்து சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

முதல்வர் மீது குற்றச்சாட்டு என்பதால் பொதுவான அமைப்பு விசாரிப்பது நல்லது என்றும் வழக்கை சிபிஐ விசாரித்தால்தான்  முறையாக இருக்கும் என்றும் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஒரு வாரத்தில் ஆவணங்களை சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு துறை ஒப்படைக்க  வேண்டும்; முதல்கட்ட விசாரணையை சிபிஐ 3 மாதத்தில் முடிக்க வேண்டும் என்றும் முகாந்திரம் இருந்தால் சம்பந்தப்பட்டவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கை:

‘ஏற்கனவே மாநில அமைச்சர்கள் பலர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி விசாரணை நடந்துவருகிறது. தமிழகத்தில் பல துறைகளில் ஒப்பந்தம் விடுவதிலும், துணைவேந்தர் நியமனம் உட்பட வேலை நியமனம், இடமாற்றங்களிலும் ஊழல் முறைகேடுகள் நடப்பது ஊரறிந்த உண்மை.

இத்தகைய பின்னணியில் சென்னை உயர்நீதிமன்றம் முதலமைச்சர் மீதான ஊழல் முறைகேடுகள் குறித்த புகார்கள் மீது சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதோடு, இவ்விசாரணை முடியும் வரை முதலமைச்சர் பொறுப்பில் எடப்பாடி பழனிச்சாமி நீடிக்க தார்மீக உரிமை இல்லை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.

மேலும் இந்த விசாரணை நேர்மையாக நடந்திட உயர்நீதிமன்றத்தின் நேரடிக் கண்காணிப்பில் நடைபெற வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது’ என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz