ரெயிலைத் துளைபோட்டுக் கொள்ளையடித்த கும்பல் பிடிபட்டது!

Monday 15, October 2018, 16:40:48

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மூலம் சேகரிக்கப்பட்ட 342 கோடி ரூபாய் அழுக்கடைந்த பழைய ரூபாய் நோட்டுக் கட்டுக்கள் ரிசர்வ் வங்கிக்கு கடந்த 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 8ந்தேதி சேலத்தில் இருந்து சென்னை செல்லும் எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில்  தனி வாகனில் 228 பெட்டிகளில் அனுப்பி வைக்கப்பட்டன.

சென்னைக்கு 9ந்தேதி காலையில் அந்த ரயில் வந்து சேர்ந்தபோது பணம் வைக்கப்பட்டிருந்த தனி வாகனின் மேற்கூரை வெட்டியெடுக்கப்பட்டு அதனுள் வைக்கப்பட்டிருந்த பணப்பெட்டிகளில் சில கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும், மொத்தமாக ரூ.5.78 கோடி ரூபாய் நோட்டுக்கள் களவு போயிருப்பதையும் ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

ஓடும் ரெயிலின் மேலேறிய  மர்ம நபர்கள் பெட்டியின் மேற்கூரையை வெட்டி எடுத்துத் துணிகரமாக நடத்திய இந்தக்  கொள்ளை இந்தியாவையே அதிர வைத்தது. இந்தக் கொள்ளை சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணையை மேற்கொண்ட போதிலும் குற்றவாளிகளை அவர்களால் பிடிக்க  முடியவில்லை.

இதனால், இந்த வழக்கின் விசாரணை ரயில்வே போலீசிடம் இருந்து சி.பி.சி.ஐ.டி.க்கு  மாற்றப்படப் பத்துத் தனிப் படைகள் அமைக்கப்பட்டு வழக்கின் விசாரணை பல்வேறு கோணங்களில் முடுக்கி விடப்பட்டது. சந்தேக வளையத்துக்குள் நூற்றுக்கணக்கானோர் கொண்டு வரப்பட்டு விசாரிக்கப்பட விசாரணை சூடு பிடித்தது.

ரயில் கொள்ளை நடந்து இரண்டாண்டுகள் முடிந்த நிலைமையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு சி.பி.சி.ஐ.டி போலீசாரின் புலனாய்வில் திருப்பு முனையாக கொள்ளையர்கள் யார் என்பது குறித்த முடிச்சு ஒரு வழியாக அவிழ்க்கப்பட்டது. மத்தியப் பிரதேசத்தினைச் சேர்ந்த பயங்கர கொள்ளக் கும்பலின் கைவரிசை இது என்பதை ஆதாரபூர்வமாகக் கண்டுபிடித்த சி.பி.சி.ஐ.டி.யினர் அதில் இரண்டு முக்கியக் கொள்ளையர்களை 12.10.2018ந் தேதியன்று கைது செய்தனர்.

கொள்ளையர்கள் பிடிபட்டது எப்படி என்பதை விளக்கி சி.பி.சி.ஐ.டி. போலீசார் செய்திக் குறிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர். அந்தச் செய்திக் குறிப்பின்படி நடந்தது இதுதான்....

ரெயில் கொள்ளை தொடர்பான வழக்கில் மிகுந்த சிரத்தையினை எடுத்த சி.பி.சி.ஐ.டி.யினர் விரிந்த அளவிலான விசாரணையை நாட்டின் பல பகுதிகளிலும் மேற்கொண்டு வந்தனர். சேலம் சி.பி.சி.ஐ.டி டி.எஸ்.பி. கிருஷ்ணன் தன்னுடைய குழுவோடு மத்தியபிரதேசத்துக்கு சென்று அங்கு உஜ்ஜைன் மற்றும் குனா மாவட்டங்களைச் சேர்ந்த சில முக்கிய காவல் அதிகாரிகளைச் சந்தித்து இதுபோன்ற கொள்ளைகளில் ஈடுபடக்கூடிய கிரிமினல்களின் விபரங்களைத் திரட்டினார்.

டி.எஸ்.பி. கிருஷ்ணன் திரட்டிய சில முக்கியத் தகவல்கள்  மத்தியபிரதேசம் குனா மாவட்டத்தினைச் சேர்ந்தவனான மோஹர்சிங் தலைமையில் இயங்கிவந்த கொள்ளை கும்பலுக்கும் ரயில் கொள்ளைச் சம்பவத்துக்கும் தொடர்பிருப்பதாக சந்தேகத்தினைக் கிளப்பியுள்ளன. அதனடிப்படையில் பல்வேறு நவீனத் தொழில் நுட்ப வசதிகளின் மூலம் விரிவான ஆய்வுகள் நடத்தப்பட்டன.

இந்த ஆய்வுகள் மூலம் சேலம் ரெயில் ரயில் கொள்ளையினை நடத்தியது முஹர்சிங் மற்றும் அவனது கூட்டாளிகள்தான் என்பதற்கான உறுதியான ஆதாரம் கிடைத்தது. முஹர்சிங்கின் கூட்டாளிகளான தினேஷ், ரோஹன் பார்தி ஆகியோருக்குப் பொறி வைத்துத் தொடர்ந்து அவர்களைக்  கண்காணித்து வந்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த 12.10.2018ந் தேதியன்று அவர்களை சென்னையில் வைத்துக் கைது செய்துள்ளனர்.  

போலீசாரிடம் அவர்கள் சேலம் ரெயில் கொள்ளையினை நடத்தியது தாங்கள்தாம் என்றும், அதனைத் திட்டமிட்டதுடன், தலைமையேற்று அதனை வழிநடத்தியது மோஹர்சிங் தான் என்றும் வாக்குமூலம் தந்துள்ளனர். ரெயிலில் கொண்டு செல்லப்படும் பணத்தினைக் கொள்ளையடிக்க ஏற்கனவே திட்டமிட்டபடி 2016ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ந் தேதி முன்கூட்டியே எங்கள் தலைவன் மோஹர்சிங் தலைமையில் 5 பேர் அந்த ரெயிலில் ஏறிக்கொண்டோம். குறிப்பிட்ட நேரத்தில் ரெயிலின் மேற்கூரைக்கு செல்லும்வகையில் பெட்டியின் படிக்கட்டுப் பகுதியிலேயே தயாராக இருந்தோம்.

இரவில் சின்ன சேலத்திற்கும், விருத்தாசலத்திற்கும் இடைப்பட்ட தூரத்தில் திட்டமிட்ட நேரத்தில் நேரத்தில் ரெயிலின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்து மெதுவாக ஏறி, பணப்பெட்டிகள் வைக்கப்பட்டிருந்த  ரயில் பெட்டியின் மேற்கூரைக்குச் சென்றோம். மேற்கூரையில் அமர்ந்தபடி அதனைத் துளையிட்டு இருவரை முதலில் உள்ளே அனுப்பினோம். அந்தப் பெட்டிக்குள்ளாக அடுக்கப்பட்டிருந்த மரத்தாலான பணப்பெட்டிகளை உடைத்து அதிலிருந்த பணக்கட்டுகளை தங்களது லுங்கிகளை அவிழ்த்து அதில் நிரப்பிக் கட்டிக் கொண்டனர்.

விருத்தாசலம் ரெயில்நிலையத்தை அடையும்போது ரெயில்வே டிராக்கின் ஓரமாக அங்கு ஏற்கனவே இருட்டில் நின்றிருந்த எங்கள் ஆட்களிடம் அந்த பணக்கட்டுகள் நிரப்பப்பட்ட லுங்கி மூட்டையினைத் தந்து விட்டு இறங்கிக் கொண்டனர். பிறகு அனைவருமாக அங்கிருந்துத் தப்பிச் சென்று விட்டோம் என்று பிடிபட்ட கொள்ளையர்கள் தினேஷ், ரோஹன் பார்தி இருவரும் தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

கொள்ளைக் கூட்டத் தலைவன் மோஹர்சிங் மற்றும் இந்த ரெயில் கொள்ளையில் தொடர்புடைய மற்ற கொள்ளையர்கள் ஆகியோரையும் கைது செய்ய சி.பி.சி.ஐ.டி டீம் தேடியுள்ளது. ஆனால், வேறு வழக்குகளில் கைதாகியுள்ள அவர்கள் குனா மத்தியச் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது. விசாரணைக்காக அவர்களை விரைவில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு தமிழகம் கொண்டுவரப்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, குஜராத், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் நடந்துள்ள பல்வேறு கொள்ளைச் சம்பவங்களை மோஹர்சிங் தலைமையிலான இந்தக் கொள்ளக் கும்பலே செய்துள்ளதாக கொள்ளையர்கள் தந்துள்ள வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர்.

கட்டிடத் தொழிலாளர்களைப் போலவும், பொம்மைகளை விற்பவர்களைப் போலவும் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்வே டிராக்குகளின் ஓரமாக டெண்டுகளைப் போட்டுத் தங்கி நோட்டமிட்டு கொள்ளையடிப்பதற்கான இடங்களைத் தேர்வு செய்வதை இவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். சேலம் ரெயில் கொள்ளையினைத் தவிர இந்தக் கும்பல் தமிழகத்தில் வேறேதேனும் கைவரிசையினைக் காட்டியுள்ளதா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

கொள்ளைக் கும்பலைப் பிடித்ததற்காக சி.பி.சி.ஐ.டி.  ஏ.டி.எஸ்.பி. செந்தில் குமரன், டி.எஸ்.பி. கிருஷ்ணன், எஸ்.ஐ.சாஸ்தா இன்பசேகரன், எஸ்.எஸ்.ஐ.சாமிக்கண்ணு, ஏட்டு தண்டபாணி ஆகியோருக்கு சி.பி.சி.ஐ.டி. ஏ.டி.ஜி.பி. அம்ரிஷ் பூஜாரி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அத்துடன். இந்தக் கொள்ளையைக் கண்டுபிடிக்க உறக்கமின்றி தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் இரவு பகலாக ஓய்வின்றி உழைத்த சி.பி.சி.ஐ.டி.யைச் சேர்ந்த மற்றவர்களையும் வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதித்த சேலம் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கிருஷ்ணன்!

சேலம் ரெயில் கொள்ளை வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்ந்து அதில் தொடர்புடைய கொள்ளைக் கூட்டத்தினைக் கைது செய்தவரான சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கிருஷ்ணன் சேலத்தினைச் சேர்ந்தவர். ஆய்வாளராக இருந்து. பதவி உயர்வு பெற்று சேலம் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.யாகப் பொறுப்பேற்றுக் கொண்டவர். இதற்கு முன்பு சேலம் மாநகரக் காவல்துறையின் நுண்ணறிவுப் பிரிவில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றியவர்.

ஆய்வாளராக சேலம் மாநகரின் பள்ளப்பட்டி, சூரமங்கலம் போன்ற பல காவல் நிலையங்களில் பணியாற்றியவர். தனது தாய்மொழியான தமிழ் மற்றும் தொடர்பு மொழியான ஆங்கிலம் இவை தவிர, இந்தி, மராத்தி ஆகிய மொழிகளில் சரளமாகப் பேசக் கூடியவர். ஆங்கிலம் பெரிதும் அறியப்படாத மதியப் பிரதேசத்தின் புறநகர்ப் பகுதிகளில் மராத்தி மொழி இவருக்குப் பெரிதும் துணை நின்றுள்ளது.

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz