பள்ளி மாணவனைக் கடத்திப் பணம் பறிக்கப் பார்த்த ஆட்டோ டிரைவர் கைது

Friday 19, October 2018, 19:59:29

சேலம் மாவட்ட இந்து சமய அறநிலையத்துறையில் செயல்அலுவலராகப் பணியாற்றி வரும் ராஜா தனது குடும்பத்தினரோடு தர்மபுரி காந்திநகரில் வசித்து வந்தார். ராஜாவின் மகன் பிரகதீஷ்வரன் தர்மபுரியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான். 

கடந்த திங்கட்கிழமையன்று வழக்கம் போல பள்ளிக்கு சென்ற பிரகதீஷ்வரன் மாலையில் பள்ளிக்கூடம் முடிந்து வெளியில் வந்தபோது அங்கு நின்றிருந்த ஆட்டோவில் அமர்ந்திருந்த ஒருவர் அவனிடம் வந்து “நீ, இ.ஓ. ராஜாவின் மகன்தானே? உங்கள் உறவினருக்கு உடல் நிலை சரியில்லை. அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். உன்னை உனது அப்பா அழைத்து வரச் சொன்னார்”  என்று சொல்ல அதை உண்மை என்று நம்பிவிட்ட பிரகதீஷ்வரனும் அந்த நபருடன் அவர் கொண்டு வந்த ஆட்டோவில் ஏறிச் சென்றுள்ளான்.

உறவினர் அனுமதிக்கப்பட்டுள்ளதாகச் சொன்ன மருத்துவனையை தாண்டி ஆட்டோ சென்றதால் சந்தேகமடைந்த பிரகதீஷ்வரன், “நான் என் அப்பாவிடம் பேசணும், போன் பண்ணிக் கொடுங்க” என்று கேட்டுள்ளான். ஆட்டோ டிரைவரும் போன் செய்வது போல பாசாங்கு செய்து விட்டு, “உன் அப்பா போனை எடுக்கவில்லை; லைன் பிசியாக இருக்கிறது” என கூறி,  வத்தல் மலை அருகில் அழைத்து சென்றுள்ளார்.

அங்கு ஆட்டோவை நிறுத்தி விட்டு தனியே வெளியே சென்று பேசிய ஆட்டோ டிரைவர் சிறுவன் பிரகதீஷ்வரனைத் தான் கடத்தி வைத்திருப்பதாகவும், அவனை விடுவிக்க வேண்டுமென்றால் தனக்கு ரூ.50 லட்சம் பணம் தரவேண்டும் என்றும் மிரட்டியுள்ளார்.  இதனைக் கேட்டுவிட்ட சிறுவன் பிரகதீஷ்வரன், வெங்கட்டம்பட்டி அருகே வரும்போது ஆட்டோவிலிருந்து குதித்துத் தப்பியோடி அந்த ஊரைச் சேர்ந்த தேவராஜ் என்பவரின் வீட்டிற்குள் தஞ்சமடைந்துள்ளான். நடந்ததை தேவராஜிடம் தெரிவித்த பிரகதீஷ்வரன், அவரிடமிருந்து போனை வாங்கித் தனது தந்தை ராஜாவுக்கு தகவல் தெரிவித்துள்ளான். இதனையடுத்து காவல் துறையினர் உதவியோடு சிறுவன் மீட்கப்பட்டான்.

தன் மகன் கடத்தப்பட்டது குறித்து ராஜா தர்மபுரி நகரக் காவல் நிலையத்தில் புகார் தந்தார்.  இதையடுத்து, நகர காவல் ஆய்வாளர் இரத்தினகுமார், ராஜாவுக்கு மிரட்டல் வந்த  செல்போன் நம்பரை வைத்து விசாரணை  மேற்கொண்டார். அதன் மூலம் ஆட்டோ டிரைவரான வெங்கடேசன் என்பவன்தான் சிறுவன் பிரகதீஷ்வரனைக் கடத்தியவன் என்பதும், அவனது அப்பாவிடம் ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியவன் என்பதும் தெரிய வந்தது.

இதைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவரான  வெங்கடேசனை நேற்று  தர்மபுரி நகரக் காவல் துறையினர்  கைது செய்தனர். மேலும், இந்தக் கடத்தல் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்புள்ளதா என்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

© Copyright 2020 by NNT Web / News Now Tamil
Website Developed by Best Webmasterz